சமுதாயப் பணியில் புதிய புரட்சி
இன்னும் வேண்டும் என கேட்கத் தூண்டும் இனிப்பான கேக் வகைகளைத் தயாரிக்கும் பேக்கரி தொழிலில் சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதில் கிடைக்கும் லாபத்தைப் பயன்படுத்தி, குடிசை வாழ் மக்களின் மே
இன்னும் வேண்டும் என கேட்கத் தூண்டும் இனிப்பான கேக் வகைகளைத் தயாரிக்கும் பேக்கரி தொழிலில் சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதில் கிடைக்கும் லாபத்தைப் பயன்படுத்தி, குடிசை வாழ் மக்களின் மேம்பாட்டுக்காக இவர்கள் அரும்பணியாற்றுகின்றனர்.
நாட்டில் உள்ள மிகச் சிறந்த கல்வி நிறுவனங்களில் லயோலாவும் ஒன்று. இந்தக் கல்லூரி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு உயர் கல்வியை அளிப்பதோடு மட்டுமல்லாமல், கல்லூரியைச் சுற்றியுள்ள குடிசைப் பகுதிகளைச் சேர்ந்த ஏழை, எளிய மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் பணியிலும் ஈடுபட்டுள்ளது.
புறசேவை (அவுட்ரீச்- லைவ்) திட்டத்தின் கீழ் சூளைமேடு, சேத்துப்பட்டு, தருமபுரம், தியாகராயநகர் உள்ளிட்ட பகுதிகளில் அடங்கியுள்ள 25க்கும் மேற்பட்ட குடிசைப் பகுதிகளில் இளைஞர் நலம், முறைசாரா கல்வி மற்றும் மாலை நேர தனிப் பயிற்சி வகுப்புகளை நடத்துதல், பால்வாடிகள், சுகாதாரப் பணிகள் ஆகியவற்றில் லயோலா மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர் என்கிறார் இந்தத் திட்டத்தின் இயக்குநர் ஜி. ஜோசப் அந்தோணிசாமி.
÷இவரது வழிகாட்டுதலுடன், சமுதாயப் பணியில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் வகையில், கல்லூரி வளாகத்தில் ஹாட் பிரெட் நிறுவனம் மற்றும் அருட்சகோதரர்களின் உதவியுடன் ரூ. 5 லட்சம் செலவில் 2008-ல் நவீன பேக்கரி தொடங்கப்பட்டது.
ஏழைகளுக்கு வாழ்வளிக்கும் என்று பொருள்படும் வகையில் "கிவ் லைஃப்' என்று இந்த பேக்கரிக்கு பெயர் சூட்டப்பட்டது. இதில் ஏழை மாணவர்கள் 20 பேருக்கு, பகுதி நேர வேலைவாய்ப்பு அளிக்கும் நோக்கில் பேக்கரி தொழிலில் பயிற்சி அளிக்கப்பட்டது. நவீன இயந்திரங்களின் உதவியுடன் சீருடை, நீண்ட வெள்ளை தொப்பி அணிந்து மாணவர்கள் தினமும் 4 மணி நேரம் கேக் தயாரிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர்.
தித்திக்கும் கேக் வகைகள்...
அப்புறம் என்ன... மாணவர்களின் கைவண்ணத்தில், இப்போது பிளாக் ஃபாரஸ்ட். ஜெர்மன் பிளாக் ஃபாரஸ்ட், சாக்லெட் கேக், பழ கேக், பட்டர் ஸ்காட்ச், வெனிலா... என 50-க்கும் மேற்பட்ட கேக் வகைகள் உலக தரத்தில் தயாராகின்றன.
கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பிறந்த நாள் கேக்குகளும் வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கேற்ப, தயாரித்து வழங்கப்படுகின்றன.
சர்க்கரை நோயாளிகளுக்காக பிரத்யேகமாக "எக்லெஸ்' என்ற கேக் வகையை புதிதாக மாணவர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர் என்கிறார் கல்லூரியின் துணை முதல்வர் எம். ஆல்பர்ட் வில்லியம்.
÷வெளிச்சந்தையை விட இந்த பேக்கரியில் 30 முதல் 35 சதவீதம் அளவுக்கு குறைந்த விலையில் விற்கப்படுகின்றன. பேக்கரியில் பகுதி நேரமாக பணியாற்றும் மாணவர்கள் ஒவ்வொருவரும் தினமும் ரூ. 95 ஊதியம் பெறுகின்றனர். இதன் மூலம் மாதந்தோறும் தலா ரூ. 2,100 வரை வருவாய் ஈட்டுகின்றனர். தங்களது கல்வி செலவுக்கு இந்த ஊதியத் தொகை மிகவும் உதவுவதாக மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.
÷வாடிக்கையாளர்களுக்கு மிகவும் சுவையுள்ள கேக் வகைகளை, புன்னகை மாறாத விருந்தோம்பலுடன் மாணவர்கள் பரிமாறுகின்றனர். இதனால், சக மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் மட்டுமன்றி பெற்றோர்கள், பொதுமக்களும் வாடிக்கையாளர்களாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
விதவைகளுக்கு நிதியுதவி:
3-வது ஆண்டாக சேவையைத் தொடரும் கிவ் லைஃப் பேக்கரி, கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் ரூ. 89 ஆயிரம் லாபம் ஈட்டியுள்ளது. இதையும் சேர்த்து ரூ. 1.62 லட்சம் உதவித் தொகையை சுயவேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் குடிசைப் பகுதிகளைச் சேர்ந்த 350 விதவைகளுக்கு வழங்கப்பட உள்ளது. வரும் 17-ம் தேதி கல்லூரியில் நடைபெறும் விழாவில் இந்த உதவித் தொகையை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
÷இதன்படி பயனாளிகளுக்கு உணவுப் பொருள்கள், சோப்பு, பினாயில் தயாரித்தல், தையல் மற்றும் ஜவுளி விற்பனை உள்ளிட்ட குடிசைத் தொழில்களைத் தொடங்க தலா ரூ. 5,000 வரை கடனுதவி அளிக்கப்படும். இதுதவிர 450 குழந்தைகளுக்கு இலவசமாக சீருடை, நோட்டுப் புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உதவிகளும் வழங்கப்பட உள்ளன.
ஏழைகளுக்கு வாழ்வு கொடுக்கும் இத்தகைய அரும்பணிகளில் பிற கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களும் பங்கேற்கலாமே!
படங்கள்: ஏ.எஸ். கணேஷ்.