நாளை நான் ஐஏஎஸ்!: நேற்றின் தொடர்ச்சி இன்று!
பெருவிருட்சம் ஒருநாளில் எழுவதில்லை. ஒவ்வொரு நாளும வளர்கிறது. உயர்ந்தநிலை அடைகிறது.
பெருவிருட்சம் ஒருநாளில் எழுவதில்லை. ஒவ்வொரு நாளும வளர்கிறது. உயர்ந்தநிலை அடைகிறது. ஒற்றை மழைத்துளி நதியாவதில்லை. ஒவ்வொரு துளியும் சேர்கிறது. பின் நதியெனப் பாய்கிறது. இதுபோல போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவதும் ஒரு நாளின் நிகழ்வல்ல. அது ஒவ்வொரு நாளிலும் இலக்கு நோக்கிய உங்களின் முயற்சி மற்றும் உழைப்பைச் சார்ந்தது.
ஐ.ஏ.எஸ் போட்டித் தேர்வுகளுக்குப் படிக்கும் மாணவர்களாகிய நீங்கள், அன்றாட நாளிதழ்களைப் படிப்பது தலையாய கடமை என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வுகளில் 70 சதவிகித வினாக்கள் நடப்பு நிகழ்வுகளை மையப்படுத்தியே கேட்கப்படுகின்றன.
நடப்பு நிகழ்வுகளில் இருந்து நேரடியாக 10% முதல் 20% வினாக்களும், அவற்றை அடிப்படையாகக் கொண்ட மரபு சார்ந்த பகுதிகளில் இருந்து 50% முதல் 60% சதவிகித வினாக்களும் அமைகின்றன. எனவே, நாளிதழ்களைப் படித்துத் தினந்தோறும் குறிப்புகள் எடுத்துக் கொள்ள வேண்டும். அந்தக் குறிப்புகளின் அடிப்படையில் அவை சம்பந்தமான மரபு சார்ந்த பின்புலங்களை (Current Affairs Oriented Conventional) கூடுதலாக அக்குறிப்புகளுடன் இணைக்க வேண்டும்.
நடப்பு நிகழ்வுகளைத் தரவாரியாக குறிப்பெடுப்பதற்கான எளிய முறை ஒன்று கீழே தரப்படுகின்றது. நடப்பு நிகழ்வுகளை கீழே கண்டுள்ளவாறு 3 பெரும் பகுதிகளாகப் பிரிக்கலாம்.
1. மாநில நிகழ்வுகள், 2. தேசிய நிகழ்வுகள், 3. சர்வதேச நிகழ்வுகள்
இவற்றை மரபு சார்ந்த, சாராத பின்புலங்கள் கொண்ட 9 சிறு பகுதிகளாகப் பிரிக்கலாம்.
1. அரசியல், 2. வரலாறு, 3. புவியியல், 4. பொருளாதாரம், 5. அறிவியல் தொழில்நுட்பம்,6. சுற்றுச்சூழல், 7. கலை, கட்டிடக்கலை மற்றும் பண்பாடு, 8. விளையாட்டு, 9. தேசிய மற்றும் சர்வதேச விருதுகள்.
ஒரு நடப்பு நிகழ்வின் மரபு சார்ந்த பின்புலத்தினை எவ்வாறு புரிந்துகொள்வது என்பதை கீழ்க்கண்டவாறு விளக்கலாம்.
உதாரணமாக சமீபத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களைப் பற்றிய செய்தி நாளிதழ்களில் அடிக்கடி பிரசுரமாகின்றது. இந்நிகழ்வு தேசிய நிகழ்வில் வரலாற்று நிகழ்வாகும். வரலாற்றில் தற்கால இந்தியாவில் இந்திய தேசிய இயக்கம் சார்ந்ததாகும். நேதாஜி அவர்களின் சந்தேகத்திற்கிடமான மறைவு சம்பந்தமாக மேற்குவங்க மாநிலம் 12744 பக்கங்கள் 64 கோப்புகளை வெளியிட்டுள்ளது. மேலும் அவர் தொடர்பான செய்திகள் நாளிதழ்களில் வந்த வண்ணமுள்ளன. எனவே, நேதாஜி சம்பந்தமான வரலாற்றில் நாம் கவனம் செலுத்திட வேண்டும்.
நேதாஜி ஐ.சி.எஸ். தேர்வில் வெற்றி பெற்று அப்பணியை ராஜினாமாச் செய்தவர். 1923 இல் தேசபந்து என்று அழைக்கப்படும் சி.ஆர்.தாஸ் கொல்கத்தா மேயராக இருந்தபொழுது அவரது செயலராக நேதாஜி இருந்தார். பண்டித ஜவஹர்லால் நேருவும், நேதாஜியும் இடதுசாரி இரட்டையர்கள் எனப்பட்டனர். 1938 ஹரிபுரா காங்கிரஸ் மாநாடு மற்றும் 1939 திரிபுரி காங்கிரஸ் மாநாட்டின் தலைவராக இருந்தார். 1938 இல் நேருஜி தலைமையில் தேசிய திட்டக்குழுவினை நியமித்தார். 1939இல் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி பார்வார்டு பிளாக் என்ற புதிய கட்சியினைத் தோற்றுவித்தார். இவருக்கு நேதாஜி என்ற பட்டத்தினை வழங்கியவர் ராஜ்பிகாரி போஸ் ஆவார். டெல்லி சலோ முழக்கம் "ஆஸôத் ஹிந்த் பாஜ்' எனப்படும் ஐசஅ உருவாக்கியது போன்ற இவர் சம்மந்தமான தகவல்களை ஒரே குறிப்பாக கொண்டு வரவேண்டும். சுயராஜ்யா பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்தார். 21.10.1943 இல் சிங்கப்பூரில் சுதந்திர இந்திய அரசை நிறுவினார். அந்த அரசின் பிரதமராக தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டார். ""Give me blood and I shall give you freedom'' என்பது இவரது பிரசித்தி பெற்ற முழக்கம். இவ்வாறு அடுக்கடுக்காகத் தொகுத்திட வேண்டும்.
இத்தொடரில் அவ்வப்போது குறிப்பிட்ட பகுதிகள் சம்பந்தமாக நீங்கள் தெளிவான விளக்கம் பெற சரியான ஆதாரப் புத்தகங்களையும் (Source books) குறிப்பிடுகின்றேன். இந்தப் புத்தகங்கள் தமிழக அரசால் மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட மைய நூலகங்களில் கிடைக்க ஆவண செய்யப்பட்டுள்ளன.
ஆதாரப் புத்தகங்கள் என்பதற்கு எடுத்துக்காட்டு கூற வேண்டும் என்றால் "தற்கால இந்தியா' (Modern India) சம்பந்தமான வரலாற்றினைப் படிக்க வேண்டும் என்று வைத்துக் கொள்ளலாம். இதற்கு பல்வேறு எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள் நூல்களை எழுதியுள்ளனர். ஆனால் குடிமைப்பணித் தேர்வுகளுக்கான ஆதாரப் புத்தகங்களாக உள்ளவை பிபின் சந்திரா எழுதிய India struggle for independence, பி.எல்.குரோவர் மற்றும் அல்கா மேத்தா எழுதிய Modern Indian history, சுமித் சர்க்கார் எழுதிய Modern India ஆகியவை ஆகும். இவற்றில் ஏதேனும் ஒரு நூலோடு சஇஉதபNCERT(National coucil of Educational Research and Training) வெளியிட்டுள்ள பிபின் சந்திர எழுதியுள்ள 12 ஆம் வகுப்பு பாடப்புத்தகமான "நவீன இந்தியா' (Modern India) ஆகிய இரண்டையும் ஆதார நூலாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இத்தகைய நூல்களில் இருந்து தனியே குறிப்புகள் எடுக்கும் பழக்கத்தினை ஏற்படுத்திக் கொள்வது அவசியம். இவ்வாறு குறிப்புகள் எடுக்கும்போது நடப்பு நிகழ்வுகளைக் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதும் மிக அவசியம்.
தாய்ப்பசுவின் மடியைத் துள்ளலோடும் ஆர்வத்தோடும் மோதி பால் அருந்தும் கன்றுக்குட்டிபோல் நீங்கள் நூல்களோடு அறிவு மோதல் நடத்துங்கள். ஓர் உளி கல்லைச் செதுக்கி சிலையாக்குகின்றது. அதுபோல் உங்களின் அறிவைக் கூராய்ச் செதுக்கி வெற்றிச் சிலையை வடிப்பவை நூல்களே.
(தொடரும்)