நாளை நான் ஐஏஎஸ்! தெரிந்து கொள்ளுங்கள்: பிறருடைய அனுபவங்களையும்!
ஒருவர் பள்ளி இறுதியாண்டுகள் படிக்கும்போதே அல்லது கல்லூரியில் படிக்கும் போதே குடிமைப்பணித் தேர்வுகளுக்குத் தயாராக வேண்டும் என்ற ஆர்வம் பரவலாக எழுந்து வருவதை நாம் இன்று காண முடிகிறது.
ஒருவர் பள்ளி இறுதியாண்டுகள் படிக்கும்போதே அல்லது கல்லூரியில் படிக்கும் போதே குடிமைப்பணித் தேர்வுகளுக்குத் தயாராக வேண்டும் என்ற ஆர்வம் பரவலாக எழுந்து வருவதை நாம் இன்று காண முடிகிறது.
அவ்வாறு இத்தேர்வுகளுக்குத் தயாராக விரும்புபவர் கவனிக்க வேண்டியதும், பின்பற்ற வேண்டியதுமான முக்கியப் பணிகளுள் ஒன்றினை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். உங்களுக்கு முன்னால் இத்தேர்வினை எழுதி வரும் தேர்வரையோ அல்லது வெற்றியாளரையோ சந்தித்தல் அது.
அவர் முதல்நிலைத் தேர்வில் வென்று முதன்மைத் தேர்வு எழுதியவராக இருக்கலாம். முதல்நிலை மற்றும் முதன்மைத் தேர்வினை வென்று நேர்முகத் தேர்வு வரை
சென்றவராகவும் இருக்கலாம். பணிவாய்ப்பு பெற்றுவிட்ட இறுதி வெற்றியாளராகவும் இருக்கலாம்.
இத்தேர்வில் வெற்றி என்னும் இறுதி இலக்கினை அடையும்வரை ஐயங்களும், வினாக்களும் எழுந்து கொண்டே இருக்கும். உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை மிகக்குறுகிய கால இடைவெளிகளில் நீங்கள் முழுவதுமாக தீர்த்துக் கொள்ளவும் இயலாது.
எனவே, இவர்களுடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டு கலந்துரையாடலைத் தொடர்வது வெற்றிக்கு சிறந்த வழிகாட்டுதலாக அமையும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
சக தேர்வர்கள் சேர்ந்து ஒரு குழுவாக தேர்வுக்குத் தயாராகும் போதுகூட, குழுவில் குறைந்தபட்சம் ஓர் உறுப்பினரேனும் மேற்கண்ட தகுதியுடையவராக இருத்தல் நன்மை பயக்கும்.
இத்தகைய அனுபவம் உள்ளவர்களிடம் பாடப்பகுதிகளில் தேவைப்படும் விளக்கங்களையும், தயாரிப்பு முறைகளில் தேவையான உத்திகளையும் நீங்கள் உடனுக்குடன் கேட்டு அறிந்து கொள்ள முடியும்.
மற்றும் முதன்மைத்தேர்வு எழுதியவரிடம் முதல்நிலைத் தேர்வினை வெற்றிகரமாக அணுகுவதற்கான முறைகளை அறிந்து கொள்ளலாம். மேலும், முதன்மைத் தேர்வில் வினாக்களை அணுகுதல், விடைகளைக் கட்டமைத்தல் போன்றவை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
இத்துடன் முதன்மைத்தேர்வு அறையில் பின்பற்ற வேண்டிய நேர மேலாண்மை, படித்த பாடங்களை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வருவதற்கான வழிமுறைகள், எழுத்துத்தேர்வில் விடைகளை எழுதும் போது மிகச்சரியாகப் பயன்படுத்திட வேண்டிய செய்திக்கூறுகள் (CORE POINTS) ஆகியவை பற்றிய விளக்கங்களையும் நீங்கள் அவ்வப்போது பெற முடியும்.
இதன் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு நமக்குத் தெரிந்தவற்றையெல்லாம் விடையாக எழுதாமல், கேள்விக்கான விடைக்குத் தேவையானவற்றை மட்டும் எழுதுகின்ற பக்குவத்தினையும் நாம் பெற முடியும்.
நேர்முகத் தேர்வுக்குச் சென்ற ஒருவர் உங்களின் குழு உறுப்பினராக இருக்கும் பட்சத்தில் நேர்முகத் தேர்வு அறைக்குச் செல்லும் முன் தேர்வரின் மனநிலை, எதிர்கொள்ளும்போது தேர்வரின் மனநிலை, அறையின் தோற்றம், தேர்வுக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் அணுகுமுறை, தேர்வின் போக்கு, முடிவு போன்றவற்றையும் எளிதாக அவர்களிடமிருந்து தெரிந்து கொள்ள முடியும்.
ஆகவே, தேர்வுக்குத் தயாராகத் தொடங்கும் போதே, ஒட்டுமொத்த தேர்வுமுறையின் இறுதிநிலை வரையிலான எதார்த்தங்களை உங்களால் புரிந்து கொள்ள முடியும். அதற்குத் தக்கவாறு உங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ளவும் முடியும்.
ஒரு செயலில் ஒவ்வொரு முயற்சியையும் மேற்கொண்டு, அதன் மூலம் அனுபவங்களைப் பெற்று, பின் மாற்றங்களைச் செய்து பெறும் வெற்றியைத்தான் கடின உழைப்பு (HARD WORK) என்கிறோம். இதற்கு ஆகும் காலம் சற்று அதிகம். அதே செயலில் பிறரது அனுபவங்களை உள்வாங்கிக் கொண்டு அதனையே நமது அனுபவமாகப் பாவித்தும், நமக்கான பாடமாக உணர்ந்தும் பெறும் வெற்றியைத்தான் புத்திசாலித்தனம் (SMART WORK) என்கிறோம். இதற்கு குறைவான காலமே போதுமானதாக இருக்கும்.
முதல்நிலைத் தேர்வுக்குத் தயாராகும்போதே முதன்மைத்தேர்வு நோக்கிலும், கட்டுரைக்குப் பயன்படும் வண்ணமும் குறிப்புகளைத் தயார் செய்து கொண்டே வர வேண்டும் என்று முன்னரே நாம் குறிப்பிட்டு இருக்கிறோம்.
ஏனெனில், முதல்நிலைத் தேர்விலேயே சொற்கூற்று வடிவிலான (STATEMENT) வினாக்கள் தற்போது அதிகம் இடம் பெற்று வருவதை நாம் காண்கிறோம். அதற்குத் தக்கவாறு தேர்வர்கள் குறிப்புகள் தயார் செய்தல் முக்கியமானது. இம்மாதிரியான வினாக்களை எதிர்கொள்வதற்கு இவ்வணுகுமுறை துணை நிற்கும்.
தேர்வு நோக்கில் பயன்படத்தக்க சமீபத்திய நிகழ்வுகள் சிலவற்றையும், அதற்கான குறிப்புகள் தொகுத்தல் பற்றியும் எடுத்துக்காட்டுடன் கீழே காணலாம்.
எண்ணிம இடைவெளி - (DIGITAL DIVIDE) என்ற வார்த்தைகளை இப்போது நாம் அடிக்கடி நாளிதழ்கள் உள்ளிட்ட ஊடகங்களில் காண முடிகிறது. எண்ணிம இடைவெளி என்பது எண்ணிம, தகவல் தொழில்நுட்ப வளங்கள் பயன்பாட்டுக்குக் கிடைப்பதில் உள்ள ஏற்றத்தாழ்வினைக் குறிக்கின்றது. இது இயைந்த வளர்ச்சிக்கு ஒரு சவாலாகவும் உள்ளது.
அதாவது, கணினி உபகரணங்கள், இணைய இணைப்பு போதிய எண்ணிம உள்ளடக்கம் போன்றவை கிடைக்காமை, தகவல் அறிதிறன் இன்மை, கல்வியறிவின்மை உள்ளிட்ட பல காரணங்களால் எண்ணிம இடைவெளி அதிகரிக்கின்றது. பொருளாதாரநிலை, பால், இனம், வாழும் பிரதேசம் போன்ற காரணிகளும் எண்ணிம இடைவெளியின் அளவில் செல்வாக்குச் செலுத்துகின்றன.
இதனைக் குறைக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டதே எண்ணிம இந்தியா திட்டம் (DIGITAL INDIA MISSION) ஆகும். இத்திட்டத்தின் ஒரு பகுதியாக சமீபத்தில் நடுவண் அரசின் மானிடவள மேம்பாட்டு அமைச்சகம் BHARATVANI PORTAL என்ற திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது.
கர்நாடக மாநிலம், மைசூர் மாவட்டத்தில் மானசங்கோத்ரி என்னுமிடத்தில் அமைந்துள்ள இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் (CIIL) இதனைச் செயல்படுத்துகின்றது. இத்திட்டத்தின் இலக்கு என்பது இந்திய மொழிகள் பற்றிய தகவல்களை அம்மொழிகளிலேயே உரையாக, ஒலியாக, காணொளியாக, படமாக மற்றும் இவை போன்ற பல்லூடக வடிவில் இணையத்தில் வழங்குவது ஆகும்.
இவ்விணையதளத்தின் முக்கிய நோக்கமானது, இந்திய மொழிகளின் அனைத்துத் தகவல்களையும் உள்ளடக்கிய, ஊடாடத்தக்க, திறன்மிகுந்த, நெறிப்படுத்தப்பட்ட, ஒரு கட்டற்ற அறிவுசார் சமூகமாக இந்தியாவை உருவாக்குவது ஆகும்.
(தொடரும்)