முகப்பு
இளைஞர்மணி

வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 39

புரொபஸரும் கணேஷும் வழக்கமாக நடைப்பயிற்சி செய்ய கடற்கரைக்குத்தான் போவார்கள்.

Updated On : 24 ஜனவரி, 2024 at 5:26 PM
பகிர்:

புரொபஸரும் கணேஷும் வழக்கமாக நடைப்பயிற்சி செய்ய கடற்கரைக்குத்தான் போவார்கள். வித்தியாசமாக இருக்கட்டுமே என்று அதிகாலையில் ஆளரவமற்ற கடைவீதியில் வாக்கிங் போகிறார்கள். முதல் நாள் இரவு கடைகளை அடைக்கும் முன்பு திருஷ்டி கழிக்க கடைக்காரர் உடைத்த தேங்காய் தெருவில் சிதறிக் கிடக்கிறது.

கணேஷ்: கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைக்காதே என்பார்கள். இங்கே என்னன்னா கடைத் தேங்காயை எடுத்து கடைக்கே உடைச்சிருக்காங்க சார்...

புரொபஸர்: தெருவைப் பார்த்து நட. காலில் குத்திடப் போவுது. என்ன சொன்ன? "கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைக்காதே' அப்படீன்னுதானே? இது ஒரு பழமொழி. அதை அப்படியே இங்கிலீஷ்ல சொல்லு பார்க்கலாம்.

கணேஷ்: நீங்க இப்படி சொல்லுவீங்கன்னு எதிர்பார்க்கலை. எதுக்கும் ட்ரை பண்ணி பாக்குறேன். DO NOT BREAK THE COCONUT OF THE SHOP TO WORSHIP THE GOD ON THE ROAD.

புரொபஸர்: இல்ல. தப்பு.

கணேஷ்: என்ன சார் சொல்றீங்க? கரெக்டாத்தானே இங்கிலீஷ்ல சொன்னேன்? (முணுமுணுக்கிறான்) கிழம் எது சொன்னாலும் தப்புங்கும்.

புரொபஸர்: என்ன?

கணேஷ்: ஒண்ணுமில்ல சார்...

புரொபஸர்: PROVERB களை - பழமொழிகளை - மொழிபெயர்க்கும்போது, அப்படியே வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்க்கக் கூடாது. பழமொழியின் மையக் கருத்தை எடுத்துக்கிட்டு, இங்கிலீஷுக்கு ஏற்ற மாதிரி மொழிபெயர்க்கணும்.

கணேஷ்: இங்கிலீஷுக்கு ஏற்ற மாதிரியா? புரியலையே சார்...

புரொபஸர்:வெளிநாடுகள்ல தேங்காய் இருக்கும். பிள்ளையார் கோயில் இருக்குமா? இருக்காதில்லையா? அப்ப இந்தப் பழமொழியை இங்கிலீஷ்ல எப்படிச் சொல்றது?

கணேஷ்: அமெரிக்காவில எல்லாம் பிள்ளையார் கோயில் இருக்குன்னு படிச்சிருக்கேன் சார்.

புரொபஸர்: இது நம்ம ஆள் அங்க போய் வைச்சது. இங்கிலீஷ்காரன் கலாசாரத்திலே பிள்ளையார் கிடையாது. அப்ப இந்த டதஞயஉதஆ -ஐ இங்கிலீஷ்ல சொல்லும்போது, பிள்ளையார் வரக் கூடாது. எப்படிச் சொல்லலாம் யோசி...

கணேஷ்(யோசித்துவிட்டு) : தெரியலை சார்... நீங்களே சொல்லுங்க.

புரொபஸர்: DO NOT ROB PETER TO PAY PAUL - அப்படீன்னு சொல்லலாம். இதில் பழமொழியோட மையக் கருத்து மாறிடலை.

கணேஷ்: சரியாச் சொன்னீங்க சார்? ஆங்... மறந்தே போய்ட்டேன் சார். வெள்ளம் வந்த சமயத்திலே சைதாப்பேட்டையில இருந்த உங்க ஸ்டூடன்ட் - பேரு என்ன? மாயா?....

புரொபஸர்: இல்லை... மாலா...

கணேஷ்: ம்... அந்த மாலா போன் பண்ணினாள் சார்... அவுங்க வீடு தீயிலே எரிஞ்சு போச்சாம். உங்ககிட்ட சொல்லச் சொன்னாள் சார்... மறந்தே போயிட்டேன்.

புரொபஸர்: அட பாவமே... இப்படி தொடர்ந்து அவளுக்குக் கஷ்டம் வரணுமா? நம்ம பெரியவங்க சும்மாவா சொன்னாங்க? "பட்ட காலிலேயே படும்... கெட்ட குடியே கெடும்'ன்னு.

கணேஷ்: ஒரு நாள் அவுங்களைப் போயி பார்க்கணும் சார்...

புரொபஸர்: சரி... இப்பச் சொன்னேனே... இன்னொரு PROVERB. அதை ஒரே தடவையில கரெக்டா இங்கிலீஷ்ல சொல்லு பார்க்கலாம்.

கணேஷ்: THE SAME LEG WILL BE INJURED...  இல்ல... இல்ல... THE SAME LEG WILL BE REPEATEDLY INJURED. கரெக்டா சார்?

புரொபஸர்: உன்னைய மாதிரி மக்கு ஸ்டூடன்டை என் வாழ்நாளில் நான் பார்த்ததேயில்லை. இப்பதான் சொன்னேன். பழமொழியை வரிக்கு வரி அப்படியே மொழிபெயர்த்துச் சொல்லக் கூடாதுன்னு. அதுக்குள்ள மறந்துட்டியா?

கணேஷ்: ஸாரி சார்...

புரொபஸர்: ஸாரி கெடக்கட்டும். இந்த பழமொழியை எப்படி இங்கிலீஷ்ல சொல்வாய்?

கணேஷ்: SORROWS NEVER COME IN SINGLE

புரொபஸர்: கரெக்ட். உன்னை மக்குன்னு சொன்னதை வாபஸ் வாங்கிக்கிறேன்.

கணேஷ்: நாம வழக்கமா வாக்கிங் போற கடற்கரைப் பக்கம் இன்னிக்கு வாக்கிங் போகாதது நல்லதாப் போச்சு. இல்லேன்னா பழமொழி பற்றி நாம பேசியிருப்போமா? எப்படி சார் புது ரூட்ல வாக்கிங் போகணும்ன்னு உங்களுக்குத் தோணிச்சு?

புரொபஸர்: ஒரே பாதையில திரும்பத் திரும்பப் போய்க்கிட்டிருந்தா போரடிக்காதா? சும்மாவா சொன்னாங்க? "பழகப் பழக பாலும் புளிக்கும்'ன்னு?

கணேஷ்: என்ன சார்? இன்னைக்கு நெறையா பழமொழியாச் சொல்லிக்கிட்டிருக்கீங்க?

புரொபஸர்: வயசாயிடுச்சு இல்லையா? அதான். சரி... இந்த பழமொழியை இங்கிலீஷ்ல சொல்லு பார்க்கலாம்.

கணேஷ்: பாலுக்கு MILKன்னு சொல்லுவோம். புளிப்புக்கு? ஆங்.... புளிப்புக்கு SOUR. ம்... ம்... AS YOU GET USED,

MILK ALSO TASTES SOUR... நஞமத... கரெக்டா சார்?

புரொபஸர்: என்ன கரெக்ட்? இப்படியே தப்புத் தப்பாச் சொன்னா, நாளையிலேர்ந்து உன் மூஞ்சியிலேயே முழிக்கமாட்டேன்.

கணேஷ்: ஸாரி சார்... இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்றதுன்னு தெரியலை.

புரொபஸர்: சொல்றேன். FAMILIARITY BREEDS CONTEMPT.

கணேஷ்: சம்பந்தமே இல்லாம இருக்கு சார்...

புரொபஸர்: கரெக்டாதானே இருக்கு? உன்கிட்ட உண்மையைச் சொல்லட்டுமா? இப்ப எல்லாம் வீட்டுக்குப் போய் வொய்ஃப் முகத்திலே முழிக்கிறதுக்கே வெறுப்பா இருக்கு. "பழகப் பழக பாலும் புளிக்கும்ங்கிறது கரெக்ட்தானே?

கணேஷ்: இதையே உங்க வொய்ஃப் சொன்னா?

புரொபஸர் (கோபத்துடன்): சொல்லிடுவாளா?... சொன்னா?

கணேஷ்: இதுதான் சார் ஆணாதிக்கச் சிந்தனைங்கிறது?

புரொபஸர்: நீ எனக்குக் கிளாஸ் எடுக்க ஆரம்பிச்சிட்டியா?

(இனியும் பேசுவோம்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.