முகப்பு
இளைஞர்மணி

கேமரா இருந்தால் போதும்!

தற்போது புகைப்படக்கலை என்பது திறந்து வைக்கப்பட்ட இரகசியமாகப் போய்விட்டது. யார் வேண்டுமானாலும் புகைப்படம் எடுக்கலாம் என்ற நிலை உருவாகிவிட்டது.

Updated On : 24 ஜனவரி, 2024 at 4:50 PM
பகிர்:

தற்போது புகைப்படக்கலை என்பது திறந்து வைக்கப்பட்ட இரகசியமாகப் போய்விட்டது. யார் வேண்டுமானாலும் புகைப்படம் எடுக்கலாம் என்ற நிலை உருவாகிவிட்டது. என்றாலும் இன்னும் இக்கலைக்குத் தனி மரியாதையும், செல்வாக்கும் இருக்கத்தான் செய்கிறது. இதில் கருவி, தொழில்நுட்பம் என்பதற்கு அப்பால் தனியொரு நபரின் பங்களிப்பு அடிப்படையாக இருப்பதே காரணம், கேமரா வழியே தனது ஒரு கண் பார்வையைச் செலுத்தி, அதன் வழியே தெரிகின்ற காட்சியை, மூன்றாவது கண்ணான கேமராவின் லென்ஸ் மூலம் பதியச் செய்யும் அந்தத் தனிநபரின் உழைப்பும், ஈடுபாடுமே கவனத்தைக் கவரும் புகைப்படமாக வெளிப்படுகிறது.

அடிப்படையில் புகைப்படம் என்பது 35க்கும் அதிகமான பிரிவுகளில் பதிவு செய்யப்படுகிறது. தனி நபர் புகைப்படம் துவங்கி, நீருக்கு அடியில் எடுக்கப்படும் புகைப்படம் வரையிலும் பல்வேறு வகையான வழிமுறைகளில் புகைப்படம் பதிவு செய்யப்படுகிறது.

பொதுவாக நாம் அறிந்துள்ள சில வகையான புகைப்படங்கள் - 1. ஸ்டூடியோக்களில் பதிவு செய்யப்படுபவை 2. செய்திகளுக்குத் தொடர்பான புகைப்படங்கள் 3. வெளிப்புற நிகழ்ச்சிகளில் எடுக்கப்படுபவை 4. இயற்கைக் காட்சிகளின் பதிவுகள் 5. பறவைகள் உள்ளிட்ட பிற உயிரினங்களின் பதிவுகள்.

தற்போது புகைப்படத்துறை என்பது பல்வேறு நிலைகளில் வளர்ந்து செயல்பட்டு வந்தாலும் குறிப்பாக இரண்டு நிலைகளில் உள்ளதை அறிய முடிகிறது. மிக எளிமையாக 5 நிமிடங்களில் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் எடுத்துக் கொடுப்பது, ஸ்டூடியோக்களில் குழுவாக, குடும்பத்தினரைப் படம் எடுப்பது, வெளிப்புறப் படப்பிடிப்பு, விழாக்களில் படப்பிடிப்பு, குழந்தைகளைப் படம் பிடிப்பது, தொழில்நுட்ப அடிப்படையில் கருவிகளை, இயந்திரங்களை, வாகனங்களைப் படம் பிடிப்பது, விளம்பர நிறுவனங்களுக்காகப் புகைப்படம் எடுப்பது, திரைப்படங்களுக்கு ஸ்டில்ஸ் எடுத்துக் கொடுப்பது, டெக்ஸ்டைல் துறையில் மாடல்களைப் படம் பிடிப்பது போன்ற தொழில்முறைப் புகைப்படம் எடுப்பது, இயற்கை காட்சிகள், வன விலங்குகள், பறவைகள், கலாசார நிகழ்வுகள், ஆன்மிக விழாக்கள் போன்றவற்றைத் தனிப்பட்ட கலை ஆர்வத்தில் படம் எடுப்பது என்று புகைப்படக் கலை சிறகு விரிக்கும் திசைகள் ஏராளம்.

அரசின் துறைகள் சார்பாகவும் அவ்வப்போது புகைப்படக் கலைஞர்களின் சேவை பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு புகைப்படத் துறையில் தற்போது வேலை வாய்ப்பும், சுயதொழில் வாய்ப்பும் பெருகி வருவது உண்மையே.

திருமணம் போன்ற விழாக்களைப் புகைப்படம் எடுத்து ஆல்பமாக உருவாக்கிக் கொடுப்பதற்கு அதிக நாட்கள் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. காரணம் புகைப்படத் துறை என்பது, ஒளிப்படக் கருவியில் பதிவு செய்வது மட்டுமல்ல, பதிவு செய்யப்பட்ட படங்களை பிரிண்ட் எடுத்து அல்லது கணினி வழியே ஆல்பமாக உருவாக்கிக் கொடுப்பதற்கு நல்ல கணினி வரைகலைஞர்களின் தேவையும் கூடுதலாகத் தேவைப்படுகிறது. இந்த இடத்திலும் மிகப்பெரிய பற்றாக்குறை நிலவுகிறது. ஒளிப்படத்துறை சார்ந்த கணினி வரைகலைஞர்களுக்கும் நல்ல வேலை வாய்ப்பும் சுய தொழில் வாய்ப்பும் உள்ளன.

இந்தப் புகைப்படத்துறைக்குள் நுழைவதற்கு படிப்பு என்பது பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுவது இல்லை. ஆனால் இன்றைய காலகட்டத்தில் படித்தவர்களுக்கும், குறிப்பாக பன்மொழியறிவு மிக்கவர்களுக்கு பல நிலைகளில் வாய்ப்புகள் கிடைக்கின்றன.

பேச்சளவில் நல்ல ஆங்கிலம் தெரிந்தவர்கள், பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களில் சேவை செய்ய வாய்ப்பு கிடைக்கிறது. திறமையான ஒளிப்படப் பதிவாளராக இருந்தாலும், ஆங்கில பேச்சுத் திறமையின்மையால் நல்ல வாய்ப்புகளை இழந்தவர்களும் உண்டு. எனவே படிப்பறிவும் இக்கலைக்கு மிகவும் தேவையான ஒன்றாகும்.

தற்போது கல்லூரிகளிலும் புகைப்படக் கலை பட்டப்படிப்பாகவும், விஸூவல் கம்யூனிகேஷன் போன்ற படிப்புகளில் துணைப்பாடமாகவும் சொல்லிக் கொடுக்கப்படுகிறது.

நல்ல ஒளிப்படக் கருவி, துணைக்கருவிகள் போன்றவையே முதலீடாகும். இவை சில ஆயிரம் ரூபாய்களிலிருந்து சில இலட்சம் ரூபாய் வரையிலும் கிடைக்கின்றன.

துவக்கத்தில் ஃப்ரீலான்ஸராக சேவை செய்துவிட்டு, ஓரளவு பெயரீட்டிய பிறகு ஸ்டூடியோவாகத் தொடங்கலாம். தகுந்த நபர்கள் கிடைத்தால் பெரிய அளவிலான செயல்பாடுகளை மேற்கொள்ளலாம்.

குறிப்பாகத் திருமண நிகழ்வுகள் இப்போது மூன்று நிலைகளில் படம் பிடிக்கப்படுகின்றன. திருமணத்திற்கு முன்பாகவே, மணமக்களையும் அவர்தம் குடும்பத்தினரையும் படம் பிடிப்பது திருமண நாளன்று படம் பிடிப்பது கூடுதலாக தற்போது திருமணத்திற்குப் பிறகு மணமக்கள் தேனிலவுக்கு செல்லும்போது உடன் சென்று வெளிப்புற இடங்களில் படம் பிடிப்பது என்று வளர்ந்துவிட்டது. வசதி படைத்தவர்கள் திருமணங்களில் திருமண ஆல்பத்திற்காக சில லட்சம் ரூபாய்களைச் செலவு செய்து வருகின்றனர்.

இவை தவிர பத்திரிகைகளுக்காக புகைப்படம் எடுத்துக் கொடுப்பவர்களும் உண்டு. பெரிய நாளிதழ்களில் புகைப்படக் கலைஞர்கள் பிரிவே வேலை செய்கிறது.

புகைப்படத் துறைக்குள் நுழைவதற்கு விரும்பினால், முதலில் புகைப்படத் துறை தொடர்பாக நடைபெறும் கண்காட்சிகளுக்குச் சென்று நிலவரத்தை அறிந்து கொண்டிருக்க வேண்டும். அத்துடன் புகைப்படக் கலைத் தொடர்பாக நடக்கும் கருத்தரங்குகள், பயிற்சி வகுப்புகள், பட்டறைகள் போன்றவற்றில் கலந்து கொண்டு திறனை நன்கு வளர்த்துக் கொள்ள வேண்டும். சென்னை, மும்பை, பெங்களூரு போன்ற நகரங்களில் புகைப்படத்துறைக்காக சிறந்த பயிற்சி வகுப்புகள் மாதந்தோறும் நடத்தப்படுகின்றன.

இவை தவிர புகைப்படக்கலை தொடர்பான இதழ்களை வாங்கிப் படிக்க வேண்டும். நிகழ்கால நிலையை அறிந்து கொள்ளுவதற்கு இதுவே சிறந்த வழியாகும்.

இதழ்கள் தவிர நல்ல புத்தகங்களும் புகைப்படத் துறைக்காக தற்போது தமிழில் வெளிவரத்துவங்கியுள்ளன. பல சிறந்த புகைப்படக் கலைஞர்கள் தாங்கள் அறிந்ததை புத்தகமாக எழுதி வெளியிட்டு வருகின்றனர். அவற்றை வாங்கிப் படிப்பதற்கும் தயங்கக்கூடாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.