முகப்பு
இளைஞர்மணி

நாளை நான் ஐஏஎஸ்! குறிப்புகள் தயாரிப்பது முக்கியம்!

இந்திய குடிமைப்பணிகளைப் பொறுத்தவரையில் முதல்நிலைத்தேர்வு என்பது முதன்மைத் தேர்வுக்கான நுழைவுத்தேர்வு போன்றதே.

Updated On : 24 ஜனவரி, 2024 at 4:53 PM
பகிர்:

இந்திய குடிமைப்பணிகளைப் பொறுத்தவரையில் முதல்நிலைத்தேர்வு என்பது முதன்மைத் தேர்வுக்கான நுழைவுத்தேர்வு போன்றதே. ஆனால், முதல்நிலைத் தேர்வுக்குத் தயாராகும்போதே முதன்மைத் தேர்வுக்கும் சேர்த்துத் தயாராவதே புத்திசாலித்தனமான அணுகுமுறையாகும் என்பதனை தேர்வர்கள் மனதிற் கொள்ள வேண்டும்.

ஒரு போட்டித் தேர்வர் 2016ஆம் ஆண்டுக்கான முதல்நிலைத் தேர்வினை எழுதத் திட்டமிட்டுப் படித்து வருகின்றார். எனில், அவர் முதல்நிலைத்தேர்வுக்கான தாள் -1 (பொது அறிவு) மற்றும் தாள் - 2 (திறனறிதல்) ஆகிய பாடங்களுக்கான நூல்களைப் படிப்பார்.

இதில் திறனறிதல் பாடத்தில் தகுதி பெறுதல் என்பது முழுக்க முழுக்க தேர்வரின் பயிற்சி மற்றும் யுக்தியைப்

(STRATEGY)பொறுத்தே அமையும். ஆகையால் தேர்வர் தன் சீரிய முயற்சியின் மூலம் இத்தாளை எளிதில் கைக்கொள்ளலாம்.

முதல் தாளான பொது அறிவுப்பாடத்தில் எடுக்கின்ற மதிப்பெண்களே முதல்நிலைத்தேர்வின் வெற்றியைத் தீர்மானிக்கும். அதற்காகத் தேர்வர் கொள்குறி வினாவுக்குத் தக்கவாறு மட்டுமே தன்னை தயார்ப்படுத்திக் கொள்ளாமல் எழுத்துத்தேர்வு முறைக்கும் (DESCRIPTIVE TYPE) சேர்த்துத் தயார்படுத்திக் கொள்வது விவேகமான செயலாகும்.

எனவே, தேர்வராகிய நீங்கள் நாளிதழ்களைப் படித்து நடப்பு நிகழ்வுகளைத் தெரிந்து கொள்ளும்போதும், தேர்வுக்கான NCERT போன்ற அடிப்படைப் புத்தகங்களைப் படித்து பொது அறிவினை வளர்த்துக் கொள்ளும்போதும் ஒவ்வொரு தலைப்பிலும் தனித்தனியாக குறிப்புகள் எடுத்து வருவது சிறந்த அணுகுமுறையாக இருக்கும்.

ஏனெனில் வாசித்தல் என்பது மட்டுமே எந்த வகையிலும் குடிமைப்பணித் தேர்வுகளில் வெற்றியை ஈட்டித் தராது. ஒவ்வொரு தலைப்பிலும் தேர்வர் தனது உத்திக்குத் தகுந்தவாறும், பாட அறிவுக்குத் தக்கவாறும் குறிப்புகளை எளிமையாகவும், நேர்த்தியாகவும் தயாரித்துக் கொள்ள வேண்டும். இச்செயலே முதல்நிலைத் தேர்விலும், முதன்மைத் தேர்விலும், நேர்முகத்தேர்விலும் வெற்றிச்சிகரம் தொட வைக்கும் முக்கிய செயலாக அமையும்.

அதனால் முதல்நிலைத்தேர்வுக்குப் படித்துக் கொண்டிருக்கும் தேர்வர்கள் எப்போதும் தாம் முதல்நிலைத் தேர்வுக்கு மட்டும் தயாராகவில்லை, குடிமைப்பணித் தேர்வுகளில் இறுதி வெற்றி பெறுவதற்கே தயாராகிறோம் என்பதை நெஞ்சில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

முதன்மைத் தேர்வினைப் பொறுத்தவரை பொது அறிவில் 4 தாள்கள், விருப்பப்பாடத்தில் 2 தாள்கள், கட்டுரை 1 தாள், மொழித்தாள்கள் 2 என மொத்தம் ஒன்பது தாள்கள் உள்ளன. அனைத்தும் எழுத்துத் தேர்வுக்கானவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

முதல்நிலைத்தேர்வுக்கும், முதன்மைத் தேர்வுக்கும் இடைப்பட்ட கால இடைவெளி மிகவும் குறைவானது ஆகும். இக்குறைந்த காலஇடைவெளியில் பல்வேறு பகுதிகளில் இருந்து வெவ்வேறு கோணங்களில் அமையும் வினாக்களுக்கு விடையளிக்க தேர்வர் தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்வது எளிதான செயல் அல்ல.

எனவேதான், முதல்நிலைத்தேர்வுக்குத் தயாராகும் போதே முதன்மைத் தேர்வு நோக்கிலும் தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்ளுதலே வெற்றிக்கான சிறந்த அணுகுமுறையாக அமையும்.

எடுத்துக்காட்டாக பொது அறிவுப் பாடத்தினைப் பொறுத்தளவில் ஒவ்வொரு தலைப்பிலும் குறைந்தபட்சம் 5 முதல் 10 கூறுகளை (POINTS) தொகுக்க வேண்டும். பின்னர் அதற்குள் துணைத்தலைப்புகள் அமைந்திருந்தால் அத்தலைப்பிற்கும் இதேபோல் குறிப்புகள் தயாரித்தல் வேண்டும். உதாரணமாக, அணுமின்சக்தி தொடர்பான சமீபத்தில் நாளிதழ்களில் வெளியான செய்தி ஒன்றினை எடுத்துக்கொள்ளலாம்.

குஜராத் மாநிலத்தில், கக்ரபார் அணுமின் நிலையம் (KAKRAPAR ATOMIC POWER STATION) செயல்பட்டு வருகிறது. இங்குள்ள, முதல் அணு உலையில் உள்ள குளிர்விப்பானில் கசிவு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கசிவு ஏற்பட்ட அணு உலை பாதுகாப்பாக மூடப்பட்டுவிட்டது என்பது செய்தியாகும்.

அணுக்கதிர்வீச்சு வெளியே கசியவில்லை. இதனால், அணுக்கதிர்வீச்சு ஏதும் பரவாமல் தடுக்கப்பட்டது. குளிர்விப்பானுக்கும் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்பதும் கூடுதல் செய்தியாகும். இச்செய்தியை அடிப்படையாகக் கொண்டு தேர்வர்கள் கீழ்க்கண்டவாறு கூடுதல் குறிப்புகளைத் தொகுக்க வேண்டும்.

குஜராத்தின் சூரத் மாவட்டத்தில் அமைந்துள்ள கக்ரபார் அணுமின் நிலையத்தில் இரண்டு அணு உலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்திய அணுசக்தி மின் கழக நிர்வாகத்தின் கீழ் கக்ரபார் அணுசக்தி நிலையம் வருகின்றது. இங்குள்ள அணுஉலைகளில் கனநீர் மட்டுப்படுத்தியாக (ஙர்க்ங்ழ்ஹற்ர்ழ்) பயன்படுகிறது. அதாவது இது ஒரு கனநீர் உயர் அழுத்த அணுஉலை ஆகும்.

இவ்வாலைகளுக்கான திட்டப்பணிகள் 1984 ஆம் ஆண்டில் தொடங்கின. இவ்வாலையின் முதல் அணுஉலை 1992 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் செயல்படத்தொடங்கியது. இரண்டாம் உலை 1995 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு மின்சாரம் தயாரித்து வருகின்றது. கனடா நாட்டைச் சார்ந்த காண்டு (Candu) வகையிலானவை, இவ்வுலைகள்.

இந்தியாவின் மொத்த மின்உற்பத்தி சுமார் 1,80,000 மெகாவாட்ஸ் ஆகும். இதனை அனல்மின்சாரம், நிலக்கரி, நீர் மின்சாரம், காற்றாலை, சூரிய சக்தி மற்றும் அணு மின்சாரம் மூலம் உற்பத்தி செய்கிறோம்.

இந்தியாவில் தற்போது 7 அணு உலைகள் செயல்படுகின்றன. அவை உற்பத்தி செய்யும் மொத்த மின்சாரம் 5780 மெகாவாட்ஸ் ஆகும். ஆக, இந்தியாவின் மொத்த மின் உற்பத்தியில் அணுமின் நிலையம் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் 3 சதவிகிதத்திற்கும் குறைவாகவே உள்ளது.

அணுமின்சார உற்பத்தி அளவை 2017ஆம் ஆண்டிற்குள் 10080 மெகாவாட்ஸ் அளவிற்கு உயர்த்தவும், 2020ஆம் ஆண்டிற்குள் உற்பத்தியை 20000 மெகாவாட்ஸôக உயர்த்தவும் இந்தியா இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு

வருகின்றது.

இத்துடன் இதுதொடர்பான மற்றொரு சமீபத்திய செய்தியையும் இணைத்துப் பார்க்கலாம். அச்செய்தி என்னவெனில், சமீபத்தில் பாரீசில் நடைபெற்ற பருவநிலை மாறுபாடு (Cop-21) தொடர்பான மாநாட்டில் இந்தியா ஒரு உத்திரவாதத்தினை வழங்கியுள்ளது. வருகின்ற 2030ஆம் ஆண்டிற்குள் 2005ஆம் ஆண்டின் கரியமில வாயு வெளியீட்டின் ஜிடிபி அளவில் 33 சதவிகிதம் முதல் 35 சதவிகிதம் அளவு குறைத்துவிடுவோம் என்று உறுதி கூறியுள்ளது.

மேலும், நாட்டின் மின் உற்பத்திக்கு மரபுசார்ந்த எரிபொருள்களைப் பயன்படுத்துவதினைச் சிறிது சிறிதாகக் குறைத்து மரபுசாரா மூலங்கள் பயன்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளது.

இத்துடன், இந்தியாவில் செயல்பட்டுவரும் அணுமின் நிலையங்கள் மற்றும் அதன் உற்பத்தி அளவு கொண்ட குறிப்புகளையும் கீழே கண்டுள்ளவாறு தொகுக்கலாம்.

கர்நாடகம் மாநிலத்தின் கைகா என்னுமிடத்தில் 4 உலைகள் மூலம் 880 மெகாவாட்ஸ் மின்சாரமும், குஜராத் மாநிலத்தின் கக்ரபார் என்னுமிடத்தில் 2 உலைகள் மூலம் 440 மெகாவாட்ஸ் மின்சாரமும், தமிழ்நாட்டில் கல்பாக்கம் என்னுமிடத்தில் 2 உலைகள் மூலம் 440 மெகாவாட்ஸ் மின்சாரமும் தயாரிக்கப்படுகின்றது.

உத்தரபிரதேசம் மாநிலத்தின் நரோரா என்னுமிடத்தில் 2 உலைகள் மூலம் 440 மெகாவாட்ஸ் மின்சாரமும், ராஜஸ்தான் மாநிலத்தின் ரவத்பட்டா என்னுமிடத்தில் 6 உலைகள் மூலம் 1180 மெகாவாட்ஸ் மின்சாரமும், மகாராட்டிரா மாநிலத்தின் தாராப்பூர் என்னுமிடத்தில் 4 உலைகள் மூலம் 1400 மெகாவாட்ஸ் மின்சாரமும், தமிழ்நாட்டில் கூடங்குளம் என்னுமிடத்தில் 1 உலை மூலம் 1000 மெகாவாட்ஸ் மின்சாரமும் தயாரிக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறு பல்வேறு கோணங்களில் நாம் குறிப்புகளைத் தொகுக்கலாம்.

இவ்வாறு தொகுப்பது ஒரு தேர்வருக்கு முதல்நிலைத் தேர்வுக்கு மட்டுமல்லாது, முதன்மைத்தேர்வுக்கும், நேர்முகத்தேர்வுக்கும் மற்றும் கட்டுரை எழுதுவதற்கும் பயன்படும்.

பொறியியல் பட்டம் பெற்ற கிராமியப் பின்புலம் கொண்ட தேர்வர் ஒருவர் தமிழை விருப்பப் பாடமாக எடுத்து குடிமைப்பணித்தேர்வில் தொடர்முயற்சியால் வெற்றி பெற்றதனை அடுத்த பகுதியில் காண்போம்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.