முகப்பு
இளைஞர்மணி

படிக்கும்போதே... கைத்தொழிலைக் கற்கலாம்!

"ஒருவனுக்கு ஒருவேளை உணவு கொடுப்பதைவிட, அவனுக்கு மீன் பிடிக்கக் கற்றுக் கொடுத்தால், அவன் காலமெல்லாம் பசியில்லாதிருப்பான்' என்ற சீனப் பழமொழி கைத்தொழிலின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதாகும்.

Updated On : 24 ஜனவரி, 2024 at 4:53 PM
பகிர்:

"ஒருவனுக்கு ஒருவேளை உணவு கொடுப்பதைவிட, அவனுக்கு மீன் பிடிக்கக் கற்றுக் கொடுத்தால், அவன் காலமெல்லாம் பசியில்லாதிருப்பான்' என்ற சீனப் பழமொழி கைத்தொழிலின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதாகும். குறிப்பாக பெற்றோர் தங்கள் பிள்ளைகள் பள்ளியில் படிக்கும் காலத்திலேயே ஏதேனும் கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள்ளச் செய்ய வேண்டும். இப்போது அதிக மதிப்பெண் எடுப்பது ஒன்றே மாணவர்களின் ஒரே இலக்காகிவிட்டது.

பள்ளியில் படிக்கும்போது, கோடை விடுமுறையில் வேலைக்குச் செல்வதையும், சிறுதொழில் செய்வதையும் சென்ற தலைமுறையினர் வழக்கமாகக் கொண்டிருந்தனர். இன்றும் வெளிநாடுகளில் படிக்கும் நம்நாட்டு பிள்ளைகள் மாலை நேரங்களில் அங்குள்ள உணவகங்களில் பணிபுரிந்து பொருளீட்டுகின்றனர். இது அவர்களது பொழுதுபோக்கிற்காக மட்டுமின்றி, பொருளாதாரத் தேவைகளுக்கும் உதவியாக இருக்கின்றது. ஆனால் இங்கு, நம் பிள்ளைகள் விடுமுறை நாட்களைப் பொழுதுபோக்கில் அல்லது படிப்பிற்காகக் கூடுதல் சிறப்பு வகுப்புகளில் மட்டுமே கழிக்கின்றனர்.

குறைந்தபட்சம் விடுமுறைநாட்களில் ஏதேனும் ஒரு சிறுதொழில் அல்லது கைத்தொழிலை பழகத் தொடங்குங்கள். அது எந்தத் தொழிலாக இருந்தாலும் பரவாயில்லை. சைக்கிள் பஞ்சர் ஒட்டுவது, அப்பளம், ஊறுகாய் தயாரிப்பதற்குப் பழகலாம். புத்தகங்களைப் பைண்டிங் செய்யப் பழகலாம். டூவீலர் ஒர்க் ஷாப்பில் வேலைக்குச் சேர்ந்து அந்தத் தொழிலைக் கற்றுக் கொள்ளலாம். வீட்டு ஒயரிங் பழகுங்கள். மின்னணு சாதனங்களை சரி செய்யப் பயிற்சி மேற்கொள்ளுங்கள். ஒயர்சேருக்கு ஒயர் பின்னப் பழகலாம். துணி தைக்கப் பழகலாம். சற்றே யோசித்துப் பாருங்கள். நிறைய வாய்ப்புகள் உள்ளன. விடுமுறை நாட்களை வீணாக்காமல் ஏதேனும் ஓர் இடத்தில் வேலைக்குச் சேருங்கள். தொழிலைப் பழகுங்கள். பணம் சம்பாதிப்பது நோக்கம் அல்ல. படித்துக் கொண்டிருக்கும் இளமைக் காலத்திலேயே நல்ல கைத்தொழில் பழகவேண்டும் அவ்வளவே. பழகுங்கள்.

படிப்பைத் தொடர்ந்து முடியுங்கள். ப்ளஸ் 2 அல்லது பட்டப்படிப்பை முடிக்கும் போது கூடவே ஒரு சரியான தொழிலையும் பழகியிருக்கும் நிலையை உருவாக்கிக் கொண்டால், மிகச் சரியான, பொருத்தமான வேலை கிடைக்கும் வரை, தெரிந்த வேலையைச் செய்யலாம். வேலையில்லாமல் சுற்றித் திரிபவர் என்ற ஏளனப் பேச்சுக்கு உள்ளாகாமல் தப்பிக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.