கவனம் திரும்பட்டும்... நிகழ்வு மேலாண்மைத்துறையில்...!
திருமணம் போன்ற வீட்டு நிகழ்ச்சிகளாகட்டும், மாநாடு, கருத்தரங்கம் போன்ற பொது நிகழ்ச்சிகளாகட்டும் அவற்றை நடத்திக் கொடுப்பதற்கு என்றே உள்ளனர் ஈவண்ட் மேனேஜ்மென்ட் (EVENT MANAGEMENT) நிறுவனத்தினர்.
திருமணம் போன்ற வீட்டு நிகழ்ச்சிகளாகட்டும், மாநாடு, கருத்தரங்கம் போன்ற பொது நிகழ்ச்சிகளாகட்டும் அவற்றை நடத்திக் கொடுப்பதற்கு என்றே உள்ளனர் ஈவண்ட் மேனேஜ்மென்ட் (EVENT MANAGEMENT) நிறுவனத்தினர். மாறிவரும் சமூகத்தின் தேவைகளை நிறைவு செய்யும் மேலாண்மைத்துறையாக அது உருவெடுத்து வருகிறது. ஈவண்ட் மேனேஜ்மென்ட் (EVENT MANAGEMENT) என்று குறிப்பிடப்படும் இந்த நிகழ்வு மேலாண்மை, பலதரப்பட்ட தன்மைகளையும், தரத்தையும் கொண்டதாக உள்ளது.
நிகழ்ச்சி என்று பொதுவாகக் குறிப்பிடப்பட்டாலும், 5 நபர்கள் கலந்து கொள்வதிலிருந்து பல லட்சம் மக்கள் கலந்து கொள்ளும் கூட்டமும் ஒரு நிகழ்ச்சி என்றே குறிப்பிடப்படுகிறது. ஒரு நிகழ்ச்சியை முழுமையாக நடத்தி முடிக்க அதன் துவக்கம் முதல் முடிவு வரையிலும் ஒவ்வொரு செயலும், காலத்தின் அடிப்படையில் சொல்வதென்றால் } ஒவ்வொரு நொடியிலும் நடைபெறப் போவதை முடிவு செய்து, திட்டமிட்டு, நடத்தி முடிக்க வேண்டியிருக்கிறது. கூட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கு குடிக்க தண்ணீர் கொடுப்பது, நொறுக்குத்தீனி கொடுப்பது, நல்ல காற்றோட்டமான சூழலை அமைத்துக் கொடுப்பது, தேவையான உணவு கொடுப்பது, நல்ல கழிவறை வசதிகளைச் செய்து தருவது உள்ளிட்ட ஒவ்வொரு செயலும் இந்த நிகழ்வு மேலாண்மை முறையில் திட்டமிடப்பட்டு, முறையாக செய்து முடிக்கப்படுகிறது. செயல்கள் என்பனவற்றில், நிகழ்ச்சியின் தன்மையைப் பொருத்து, தண்ணீர் வழங்குதல், உணவு வழங்குதல், கலை நிகழ்ச்சிகள் நடத்திக் கொடுத்தல், சிறப்பான வடிவமைப்பில் மேடைகளை அமைத்தல், பந்தல் அமைத்தல், மின் வசதி அமைத்துக் கொடுத்தல், பதாகைகள் உருவாக்கி அமைத்தல், தேவையெனில் சுவரொட்டிகள் ஒட்டச் செய்வது, துண்டறிக்கைகள் வெளியிடுவது, பத்திரிகைகளில் விளம்பரம் செய்வது, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை நடத்தித் தருவது, ஊர்வலம் நடத்திக் கொடுப்பது, போட்டிகள் நடத்தி முடிப்பது, சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லுதல், நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களுக்கு தங்கும் வசதி செய்து கொடுத்தல் என்று பலதரப்பட்ட செயல்களை முழுமையாக செய்து முடிப்பது அடங்குகின்றன.
பொதுவாக நிகழ்வு மேலாண்மைப் பணி என்பது ஒரு குழு செயல்பாடாகும். இந்த குழு செயல்பாட்டில், தனி நபர் பணி என்பது ஒரேயோர் இடத்தில் மட்டுமே இருக்கும். நிகழ்ச்சி ஒருங்கிணைப்புத் தலைவர் பணியே அது. அவருக்குக் கீழே பிற பகுதியில் செயல்படும் குழுக்கள் தனித்தனியாக, தலைமை அல்லது தங்களது உயர்நிலை ஒருங்கிணைப்பாளருக்குக் கட்டுப்பட்டு திறமையாக செயல்படுபவர்களாக இருக்க வேண்டும்.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு என்பதில் அடிப்படையாக அமைவது திட்டமிடுதல் என்பதாகும். நிகழ்ச்சி நடைபெறும் முழுநேரத்தையும், ஒவ்வொரு நொடியிலும் என்ன செய்ய வேண்டும் என்பதை சிந்தித்துத் திட்டமிட வேண்டும். நிகழ்ச்சியை நடத்தும்,அதாவது நிகழ்ச்சிக்காக பணம் செலவு செய்யும் நபர்களின் தேவைகளை முழுமையாகக் கேட்டறிந்து அதற்கு ஏற்ற செயல்பாடுகளைச் செய்து முடித்துத் தர வேண்டும். தற்போது நடந்து முடிந்த மாநிலப் பொதுத் தேர்தலில் பல அரசியல் தலைவர்களின் பயணம், நிகழ்ச்சி, நடைமுறை, உடை, பேச்சுமுறை போன்றவற்றையெல்லாம் வழிநடத்தியது சில நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள்தான் என்பது மனதில் கொள்ள வேண்டிய ஒன்றாகும்.
நிகழ்வு மேலாண்மையைச் சொல்லிக் கொடுக்கும் கல்வி நிலையங்கள் இந்தியாவில் சென்னை, மும்பை, பெங்களூரு, ஜெய்பூர், அஹமதாபாத், புதுதில்லி உள்ளிட்ட பல நகரங்களில் உள்ளன. சான்றிதழ், பட்டயம், முதுநிலை பட்டயம்,பட்டப்படிப்பு உள்ளிட்ட பல நிலைகளில் இவை கற்பிக்கப்படுகின்றன. பல்வேறு பயிலகங்கள் பற்றிய தகவல்களை http://www.htcampus.com/subcategory/event-management-colleges-in-india/ என்ற வலைதளத்திலும் காணலாம்.
ஏதேனும் ஒரு பட்டத்துடன், எம்பிஏ அல்லது ஈவென்ட் மேனேஜ்மென்ட் முடித்தவர்கள் நேரடியாக இந்தத் துறைக்குள் வரலாம். பலதரப்பட்ட தன்மையுடைய செயல்பாடுகளைக் கொண்ட ஒரு குழுவை கட்டுப்படுத்தி நிர்வகிக்கும் திறன் படைத்த, சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களுக்கு இந்தத் துறையில் நல்ல எதிர்காலம் மட்டுமல்ல, நிகழ்காலத்திலேயே பெரிய வாய்ப்புகள் உள்ளன.
தனியாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு நிறுவனத்தைத் துவக்கி நடத்துவது அல்லாமல், பல பெரிய நிறுவனங்களில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்புப் பணிகளுக்கான வேலைவாய்ப்பும் உள்ளது. இதுபற்றிய தகவல்களை அறிய என்ற http://www.naukri.com/event-management-jobs என்ற வலைதளத்தைப் பாருங்கள்.