வாங்க இங்கிலீஷ் பேசலாம்! 101
புரொபஸர், கணேஷ், கிளி CaptainFlint ஆகியோர் புரொபஸரின் வீட்டில் புரொபஸரின் மனைவி மீனாட்சியுடன்
புரொபஸர், கணேஷ், கிளி CaptainFlint ஆகியோர் புரொபஸரின் வீட்டில் புரொபஸரின் மனைவி மீனாட்சியுடன் அரட்டை அடித்துக் கொண்டிருக்கிறார்கள். பேச்சினிடையே Captain Flint de-எனும் முன்னொட்டைக் (prefix) கொண்ட சொற்களைப் பற்றி குறிப்பிடுகிறது. Debrief என்பதற்கும் brief க்கும் என்ன வித்தியாசம் என விளக்க ஒரு கதை சொல்கிறது. அக்கதையில் கணேஷ் தனது சிறுநீரகம் பழுதான நண்பனுக்காய் தன் சிறுநீரகத்தை தர ஒப்புக் கொள்கிறான். அறுவை சிகிச்சைக்கு முன் மருத்துவர்கள் அவனிடம் அறுவை சிகிச்சை மற்றும் அதன் ஆபத்தின்மை பற்றி விளக்குகிறார்கள். இது briefing. ஆனால் அறுவை சிகிச்சைப் பின்?
கணேஷ்: ஆனால்?...
Captain Flint: நில்லு யோசிக்க வேணாமா?
மீனாட்சி: எனக்கென்னவோ இது சிக்கலாயிடுமுன்னு தோணுது.
கணேஷ்: என்னய்யா என் உசிரை வச்சு விளையாடுறீங்க?
Captain Flint: அப்படி ஒண்ணுமில்ல. Operation success. ஆனால் ஆபரேசனுக்கு பிறகு மருத்துவர்களுக்கு ஒரு விசயம் தெரிய வருது. உனக்கு ஏற்கனவே ஒரு சிறுநீரகம் கிட்டத்தட்ட பழுதாகிற நிலைமையில் இருந்தது. அது தெரியாம இன்னொண்ணை எடுத்திட்டாங்க.
கணேஷ்: ஐயோ...
Captain Flint: ஆனால் பயப்படுறதுக்கு ஒண்ணுமில்லன்னு மருத்துவர்கள் சொல்றாங்க
மீனாட்சி: அவங்க எப்பவுமே அப்படித் தான் சொல்வாங்க
Captain Flint: மருத்துவர்களின் குழு உன்னைச் சந்திச்சு ஆக்சுவலி அந்த ஆபரேசன் எப்படி நடந்தது என்பதை உனக்கு விளக்கி உன்னை ஆறுதல்படுத்துகிறார்கள். அது தான் debriefing. அதாவது ஒண்ணு நடக்குறதுக்கு முன்னாடி விளக்கினா அது briefing. நடந்து முடிஞ்சதுக்கு பின்னாடி விளக்கினா அது debriefing.
கணேஷ்: அப்போ என் கிட்னி?
Captain Flint: நான் தரேன். கலங்காதே. சரி... இந்த கதை இதோட முடியல.
கணேஷ்: இல்ல நான் போறேன்.
Captain Flint: உட்காரு. ஆனால் மருத்துவர்களின் உத்தரவாதங்களையும் தாண்டி உன்னோட இரண்டாவது சிறுநீரகமும் விரைவில் பழுதாகி விடுகிறது. அப்போது நானும் மீனாட்சியும் உன்னைப் பார்க்க வரோம். உன் வாழ்க்கையினால் யாருக்காவது உருப்படியா பயன் இருக்கட்டுமே என எண்ணி உன்னிடம் ஓர் ஆவணத்தில் கையெழுத்து வாங்குகிறார்கள்.
கணேஷ்: அது வேறயா?
Captain Flint: ஆமா. நீ ஆஸ்பத்திரியில் இறந்த பின்னால் தான் அந்த ஆவணம் என்னவென தெரிய வருகிறது. நீ உன் மூளையை தானம் செய்து விட்டாய். Brain donation.
கணேஷ்: அடக் கடவுளே...
Captain Flint: அப்போது they debrain you. அதாவது உன் மூளையை மொத்தமாய் கழற்றி எடுத்து வைத்து மருத்துவ மாணவர்கள் ஆய்வு செய்வார்கள்.
கணேஷ்: அடச்சே (அவன் ஒரு நாளிதழை எடுத்து புரட்டுகிறான்) Captain Kohli will one day catch up with Dhoni as the greatest captain… Catch upன்னா பிடிக்கிறதா? தோனியை ஏன் கோலி பிடிக்கணும்?
Captain Flint: இல்ல. அதோட பொருள் தோனியின் சாதனைகளை கோலி எட்டிப் பிடிப்பார் என்பது.
கணேஷ்: ஓ ...ரைட்... ரைட். சரி என் மூளையில் ஒரு மின்னல் பளிச்சிடுது. கேப்டன் என்ற சொல் நீ ஏற்கெனவே குறிப்பிட்ட capit என்ற லத்தீன் சொல்லில் இருந்து தான் வந்திருக்க வேண்டும். தலை என்பதில் இருந்து தலைவர் வந்தது- சரியா?
Captain Flint: ஆமாம் தல. இப்படியா வேறு சொற்களுக்கும் பொருத்தினால் புது வெளிச்சம் பிறக்கும்.
கணேஷ்: ம்ம்ம்... captain, அப்புறம் capital. ஆமாம் தமிழில் தலைநகரம்.
Captain Flint: யெஸ். இதுவும் தலையில் இருந்து வந்ததே. அதே போல capital என்பதற்கு பொருளாதாரத்தில் முதலீடு என பொருள் உண்டு. முதலில் இடுகிற முதன்மையான தொகை என்பதால்.
கணேஷ்: cap?
Captain Flint: ஆனால் அச்சொல் cappe எனும் லத்தீன் சொல்லில் இருந்து வருகிறது. பெண்களை இத்தாலியில் முக்காடு போட்டு நடப்பதை அப்படிச் சொல்வார்கள். அதன் பிறகு நாம் அணியும் தொப்பிக்கும் அப்பெயர் வந்தது.
கணேஷ்: சரி அந்த grapevine?
Captain Flint: அதுவா? பத்தொன்பதாம் நூற்றாண்டில் அமெரிக்காவில் சாமுவல் மோர்ஸ் என்பவர் டெலிகிராப் எனும் தந்திக் கருவியை கண்டுபிடித்தார். அதுவரை ஒரு தகவல் ஒரு சிறு குழுவுக்குள் மட்டுமே பரிமாறப்படும். ஆனால் இப்போது வெகுதொலைவுக்கு அப்பால் இருந்து கம்பிகள் வழியாக தகவல்கள் கடத்தப்பட்டு வந்தன. இதைக் கண்டு மக்களுக்கு வியப்பாக இருந்தது. அப்போது அவர்கள் ஒன்றைக் கவனித்தார்கள்.
கணேஷ்: என்ன?
Captain Flint: சொல்கிறேன்….
(இனியும் பேசுவோம்)