இளைஞர்மணி

ஏவுகலன் திட்டங்களைச் சாத்தியமாக்கியவர்!

இன்று செயற்கைக் கோள்களை விண்ணுக்கு ஏவும் திறன் படைத்த சில நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம் பெற்றுள்ளது.

DIN

இன்று செயற்கைக் கோள்களை விண்ணுக்கு ஏவும் திறன் படைத்த சில நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம் பெற்றுள்ளது. இந்தத் திறனை இந்தியா எளிதாக எட்டி விடவில்லை. ஆரம்பத்தில் இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டபோது வல்லரசு நாடுகளின் உதவி மறுப்பு, மறைமுக இடையூறுகள், நவீனத் தொழில்நுட்பங்களுக்கு தடை எனப் பல வேகத்தடைகளைத் தாண்ட வேண்டியிருந்தது. அந்தக் காலகட்டத்தில் உள்நாட்டுத் தொழில்நுட்பங்களைக் கொண்டே, நமது விஞ்ஞானிகள் ஏவுகலன்களை வடிவமைக்கப் போராடினார்கள். செலவு குறைந்த புதிய உள்நாட்டுத் தொழில்நுட்பங் களைக் கொண்டே அதை அவர்கள் சாதித்தனர். அதற்கான செயல்வீரர்கள் படையை வழிநடத்தி வெற்றி கண்டவர்,  இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ-ISRO) ஐந்தாவது தலைவராக இருந்த ஜி.மாதவன் நாயர்.

கேரளத்தின் திருவனந்தபுரத்தில் 1943, அக். 31-இல் நடுத்தரவர்க்கக் குடும்பத்தில் பிறந்தார் மாதவன் நாயர். அங்குள்ள கேரள பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட பொறியியல் கல்லூரியில் பயின்ற அவர், 1966-இல் மின்னணுப் பொறியியல் மற்றும் தகவல்தொடர்பியலில் பி.எஸ்சி. பட்டம் பெற்றார். அதையடுத்து மும்பையிலுள்ள பாபா அணு ஆராய்ச்சிக் மையத்தில் (BARK)  பயிற்சி பெற்றார். 

இஸ்ரோவில் அவரது பணிப் பயணம் 1967-இல் துவங்கியது. தும்பா ராக்கெட் ஏவுதளத்தில் (TERLS)  ஏவுபொருள் ஒருங்கிணைப்புப் பிரிவின் தலைவராகப் பொறுப்பேற்ற அவர் (1967- 1972), அதையடுத்த 42 ஆண்டுகளில், இஸ்ரோவில் பலநிலைகளில் பணிபுரிந்தார்.  இறுதியாக அதன் தலைவராகவும் உயர்ந்தார்.

திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் (VSSC) தொலை கட்டுப்பாடு பிரிவுக்கு திட்ட மேலாளர் (1972- 0974), செயற்கைக்கோள் ஏவுகலன் எஸ்.எல்.வி-3 திட்டப் பொறியாளர் (1974- 1980), மின்னணு அமைப்புகளின் தலைவர் (1980- 1984), துருவ செயற்கைக் கோள் ஏவுகலன் பி.எஸ்.எல்.வி. திட்டத்தின் துணை திட்ட இயக்குநர் (1984- 1988), பி.எஸ்.எல்.வி. திட்ட இயக்குநர் (1988- 1995), ஒருங்கிணைந்த ஏவுகலன் திட்டத்தின் (ஐ.எல்.வி.பி) திட்ட இயக்குநர் (1994- 1996), திரவ இயக்கத் திட்ட மையத்தின் இயக்குநர் (1995- 1999), வி.எஸ்.எஸ்.சி.யின் இயக்குநர் (1999-2003) ஆகிய பொறுப்புகளை வகித்த மாதவன், 2003-இல் இஸ்ரோ நிறுவனத்தின் தலைவரானார். 2009 வரை அந்தப் பொறுப்பில் அவர் இருந்தபோது, இன்சாட், ரிசோர்ஸ்சாட், கார்டோசாட், எஜுசாட், ஓசியன்சாட், சந்திரயான்-1 உள்ளிட்ட 25 கலன்கள் வெற்றிகரமாக ஏவப்பட்டன.

பங்களிப்புகள்: 
 ராக்கெட் தொழில்நுட்பத்தில் வல்லுநரான மாதவன் நாயர், பலநிலை செயற்கைக்கோள் ஏவுகலன்களை உருவாக்குவதில் பெரும் பங்காற்றியுள்ளார். அதுவும் உள்நாட்டுத் தொழில்நுட்பங்களைக் கொண்டே, பிற நாடுகள் விதித்த தடைகளை மீறி அதை அவர் சாதித்தார். 

இந்திய தொலையுணர்வு செயற்கைக்கோள்களின் வெற்றிக்கு வித்திட்ட பி.எஸ்.எல்.வி. ஏவுகலன்களை, அவர் திட்ட இயக்குநராக இருந்த குழுதான் சாத்தியப்படுத்தியது. இஸ்ரோவின் மாபெரும் ஆராய்ச்சி மையமான வி.எஸ்.எஸ்.சி.யின் இயக்குநராக மாதவன் பொறுப்பேற்றபோது,  புவி சுற்றுப்பாதையில் 2,000 கி.கி. எடைகொண்ட செயற்கைக்கோளை நிலைநிறுத்தும் திறன்கொண்ட ஜி.எஸ்.எல்.வி. பணிகளைத் துரிதப்படுத்தினார். அதனை முதல் முயற்சியிலேயே 2003-இல் இந்தியா சாதித்தது.

திரவ இயக்க மையத்தில் பொறுப்பில் இருந்தபோது, ஜி.எஸ்.எல்வி. ராக்கெட்களுக்கு தேவையான கிரையோஜெனிக் என்ஜினை உருவாக்குவதில் கவனம் செலுத்தினார். கிரையோஜெனிக் என்பது, நீண்டதூர ராக்கெட் இயக்கத்துக்குத் தேவையான ஆக்ஸிஜனையும் ஹைட்ஜனையும் தனித்தனியே குளிர்வித்து திரவமாக்கி அதை எரிபொருளாகப் பயன்படுத்தும் தொழில்நுட்பமாகும். மிகவும் சிக்கலான இதனை இந்திய விஞ்ஞானிகளைக் கொண்டே, உள்நாட்டிலேயே இஸ்ரோ வெற்றிகரமாக வடிவமைத்துள்ளது.

இஸ்ரோ தலைவராக மாதவன் இருந்தபோது, விண்வெளித் தொழில்நுட்பங்களை நாட்டின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தும் வகையில் பல திட்டங்களைச் செயல்படுத்தினார். தவிர, விண்ணுக்கு செயற்கைக்கோள்களை அனுப்புவதற்கான செலவுகளைக் குறைப்பதிலும் அவர் வெற்றி கண்டார். தொலை மருத்துவம், தொலைக் கல்வி, பேரழிவு மேலாண்மை தொடர்பான விண்வெளிப் பயன்பாடுகளையும் அவர் முறைப்படுத்தினார்.

கடலியல் செயற்கைக்கோள்   (ஓசியன்சாட்), வானியல் செயற்கைக்கோள் (அஸ்ட்ரோசாட்), கல்விக்கான செயற்கைக்கோள் (எஜுசாட்),  வானிலை செயற்கைக்கொள் (இன்சாட்), புவிநோக்கு செயற்கைக்கோள் (கார்ட்டோசாட்), வானொலி செயற்கைக்கோள் (ஹாம்சாட்), தொலையுணர்வுத் தகவல் செயற்கைக்கோள் (ரிசோர்ஸ்சாட்) உள்ளிட்ட பயன்பாட்டு செயற்கைக்கோள்கள் பலவற்றை ஏவியதுடன், பி.எஸ்.எல்.வி, ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்களிலும் அடுத்தடுத்த நிலைகளை நோக்கி இஸ்ரோ முன்னேற மாதவன் நாயர் அடித்தளம் அமைத்தார். மேலும், நிலவு ஆராய்ச்சிக்கான சந்திரயான்-1 திட்டத்தையும் விரைவுபடுத்தினார்.

இந்தியாவின் ஏவுகலன் சக்தி உயர்ந்ததால், இன்று பல உலக நாடுகள் தங்கள் செயற்கைக்கோள்களை வர்த்தகரீதியாக இந்தியாவிலிருந்து அனுப்புவதை வழக்கமாகக் கொண்டுள்ளன. அதற்கான வாய்ப்புகளையும் மாதவன் உருவாக்கினார். அதற்காக, பிரான்ஸ், ருஷ்யா, பிரேசில், இஸ்ரேல் போன்ற நாடுகளின் விண்வெளி ஆய்வு அமைப்புகளுடன் இருதரப்பு ஒப்பந்தங்களை அவர் ஏற்படுத்தினார். விண்வெளியை அமைதிப் பயன்பாட்டுக்கான களமாக்கும் ஐ.நா. அறிவியல்-தொழில்நுட்ப கமிட்டியில் (UN-COPUOS- 1998) இந்தியா சார்பில் பங்கேற்ற குழுவுக்கும் மாதவன் தலைமை வகித்தார்.

விண்வெளி ஆராய்ச்சித் துறையில் திறன் மிக்க மாணவர்களை உருவாக்கும் நோக்கில் விண்வெளி ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தைத் தொடங்க வேண்டும் என்று அரசைத் தொடர்ந்து வலியுறுத்தி, அதை திருவனந்தபுரத்தில் 2007-இல் நிறுவச் செய்தார் மாதவன் நாயர். 

பல்வேறு கல்வி நிறுவனங்களின் கெளரவ முனைவர் பட்டங்களைப் பெற்றுள்ள மாதவன் நாயர், பல அமைப்புகளில் ஆய்வுக்குழு உறுப்பினர் பதவிகளையும் வகிக்கிறார். தேசிய விண்வெளியியல் விருது, விக்ரம் சாராபாய் நினைவு தங்கப்பதக்கம், சித்திரைத் திருநாள் விருது, ராஜாராம் மோகன்ராய் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ள் மாதவன் நாயருக்கு பத்மபூஷண் (1998), பத்மவிபூஷண் (2009) ஆகிய உயர் கெளரவங்களை இந்திய அரசு அளித்துள்ளது.
-வ.மு.முரளி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரா் டிஎஸ். டி சில்வா மறைவு

பெண் மருத்துவா் ஹிஜாப்பை அகற்றிய நிதீஷ் செயலுக்கு வலுக்கும் கண்டனம்

கோவையில் இன்று பிஎஸ்என்எல் ஓய்வூதியா் சங்க அகில இந்திய மாநாடு

சரிவில் முடிந்த பங்குச் சந்தை

வேலூா் தங்கக்கோயிலுக்கு இன்று குடியரசுத் தலைவா் வருகை

SCROLL FOR NEXT