அண்டவியலில் கருந்துளை கோட்பாடு முதன்மையானது. பிரபஞ்சத்தில் ஆற்றல் ஒடுங்கிய நட்சத்திரங்கள் கருந்துளைகளாக மாறி இருப்பதாகவும், பிரபஞ்சத்தின் மையமே கூட மாபெரும் கருந்துளைதான் என்றும் ஒரு கோட்பாடு உள்ளது. எரிபொருள் தீர்ந்த விண்மீன்கள் இறுதியில் அடர்த்தி அதிகமாகி கருந்துளையாவதாகக் கருதப்படுகிறது. இதனை தொலைநோக்கிகளாலோ, செயற்கைக்கோள் கருவிகளாலோ கண்டறிய முடியாது. ஆனால், விண்வெளியில் கருந்துளைகளின் அருகே செல்லும் பால்வளி மண்டலம் சிதைவடைவதை அதிலிருந்து வெளிப்படும் எக்ஸ் கதிர்களின் பதிவு மூலம் உணர முடியும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
அதீத ஈர்ப்பு விசை கொண்ட கருந்துளைகள் மின்காந்தக் கதிர்களையும் ஒளியையும் கூட உறிஞ்சிவிடும் திறன் கொண்டவை. அதன் நிகழ்வெல்லை அருகில் செல்லும் விண்மீன்களையும் கிரகித்துக் கொள்ளும் ஈர்ப்பு விசை கருந்துளைகளுக்கு உண்டு என்பது விஞ்ஞானிகளின் கருத்து.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் பொது சார்பியல் கோட்பாட்டின் அடிப்படையில் கருந்துளை (Black Holes) கோட்பாடு முன்வைக்கப்படுகிறது. உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானிகள் ஸ்குவார்ஸ்சைல்டு, சுப்பிரமணியம் சந்திரசேகர், ஸ்டீபன் ஹாக்கிங் போன்றோரால் பிரபலமாக்கப்பட்ட இத் தத்துவம், கோட்பாட்டு இயற்பியலில் பெரும் தாக்கம் செலுத்தி வருகிறது.
ஆனால், கருந்துளைகள் என்ற ஒன்று அண்டத்தில் இல்லவே இல்லை என்று 2009-இல் தனது ஆய்வறிக்கையை வெளியிட்டு, விஞ்ஞானிகள் உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கினார், இந்திய விஞ்ஞானி ஒருவர். அவர்தான், விண்வெளி இயற்பியல் விஞ்ஞானி அப்பாஸ் மித்ரா.
அவரது கருத்துப்படி, கருந்துளைகள் என்ற ஆற்றல் சூனியமான எதுவும் அண்டவெளியில் இருக்க முடியாது. "ஒளிகூட தப்ப முடியாத நிகழ்வெல்லை கொண்ட, நிறை அடர்த்தியும் ஈர்ப்பு விசையும் மிகுந்த சூனிய வடிவில் இருப்பதாகக் கூறப்படுவதே கருந்துளை குறித்த முரண்பாடாகும். பொது சார்பியல் கோட்பாட்டின் அடிப்படையில் வரையறுக்கப்படும் கருந்துளைகள் உண்மையில் முழுமையான கருந்துளைகளாக இருக்க வாய்ப்பில்லை. அவை பாதி ஆற்றல் கொண்ட கருந்துளைகளாக (Quasi Black Holes) இருக்கலாம்'' என்கிறார், அப்பாஸ் மித்ரா.
இவரது கருத்து உடனடியாக ஏற்கப்படாவிட்டாலும், 2015-இல் நாஸôவின் விண்வெளி தொலைநோக்கி எடுத்த படங்கள், மித்ராவின் கருதுகோளுக்குச் சாதகமாக இருந்தன.
அதில் மாபெரும் கருந்துளை ஒன்றிலிருந்து எக்ஸ் கதிர்கள் பெருவெடிப்பால் வெளிப்பட்டதை நாஸôவின் ஹப்பிள் தொலைநோக்கி பதிவு செய்தது. அதன் மூலமாக, ஆற்றல் ஒடுங்கிய நிலையிலுள்ளவை கருந்துளைகள் என்ற வாதம் அடிபட்டுப் போனது. அதாவது, அப்பாஸ் மித்ரா கூறியபடி, பாதி ஆற்றல் கொண்ட கருந்துளையாக இருப்பதால் தான் அது பெரு வெடிப்பை நிகழ்த்தியது என்று அனுமானிக்கப்பட்டது. அப்போது உலக விஞ்ஞானிகளின் கவனம் முழுவதும் மித்ரா மீது திரும்பியது.
1976-இல் கருந்துளை தகவல் முரண்பாடு என்ற முக்கியமான கருதுகோளை வெளியிட்ட ஸ்டீபன் ஹாக்கிங்கே கூட, உண்மையான கருந்துளைகள் இருக்க முடியாது என்று 2014-இல் அறிவித்தார். ஆனால் அதற்கு தகுந்த நிரூபணத்தை அவரால் அளிக்க இயலவில்லை.
அதேசமயம், தனது நீண்ட கண்காணிப்புப் பதிவுகள் மூலமாகவும், பொது சார்பியல் கோட்பாடு அடிப்படையிலான ஆய்வு மூலமாகவும், முழுமையான கருந்துளைகள் இல்லை என்று மித்ரா 2009-லேயே கூறிவிட்டார். அவரது ஆய்வறிக்கை கணித இயற்பியல் சஞ்சிகையில் (2009) வெளியானது. இருப்பினும், ஸ்டீபன் ஹாக்கிங் பெற்ற முக்கியத்துவத்தை அப்பாஸ் மித்ரா பெற முடியவில்லை. அவரது இந்தியப் பின்புலம் அவருக்கு முழுமையான அங்கீகாரத்தை உலக விஞ்ஞானிகள் வழங்கத் தடையாக உள்ளது. எனினும், பல விஞ்ஞானிகள் மித்ராவின் கோட்பாட்டுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருப்பது மட்டுமின்றி, அதுதொடர்பான ஆய்வுகளிலும் ஈடுபடுகிறார்கள்.
மேற்கு வங்க மாநிலத்தில் 1955, ஜூன் 18-இல் பிறந்தார் அப்பாஸ் மித்ரா. 1967 முதல் 1971 வரை உத்தர்பாராவில் பள்ளிக்கல்வி பயின்ற மித்ரா, கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் முதுநிலை பட்டம் பெற்றார் (1977).
அடுத்து 1979-80-களில் பாபா அணு ஆராய்ச்சிக் கழகத்தின் பயிற்சிப் பள்ளியில் ஓராண்டு பயிற்சி பெற்றார். பிறகு அங்கேயே பணியில் இணைந்தார். அதன் அணுவியல் ஆய்வகம், கோட்பாட்டு இயற்பியல் பிரிவு, விண்வெளி இயற்பியல் பிரிவு, கோட்பாட்டு விண்வெளி இயற்பியல் துறைகளில் அவர் ஆய்வுகளில் ஈடுபட்டார்.
இதனிடையே, காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சித் துறையில் இணைந்து "சிக்னஸ் எக்ஸ்-3 விண்மீன் குழாமில் உயர் ஆற்றல் காமா கதிர்ப் பெருக்கம் குறித்த புதிய வரைவு' என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டார் (1990). ஆனால், காஷ்மீரில் ஏற்பட்ட வன்முறையால் அமைதி நிலை சீர்குலைந்ததால், தனது ஆய்வறிக்கையை மும்பை பல்கலைக்கழகத்தில் சமர்ப்பித்தார். அதற்காக 1994-இல் பிஎச்.டி. பட்டம் பெற்றார்.
ஆய்வுக்குப் பிந்தைய பணியிடத்துக்கு, ஐரோப்பிய ஆணையமும் இந்திய அறிவியல் தொழில்நுட்பத் துறையும் இணைந்து நடத்தும் ஆய்வுத் திட்டத்தில் மித்ரா தேர்வானார். ஆனால், பி.எச்டி சான்றிதழை அவரால் தாமதமாகவே சமர்ப்பிக்க முடிந்தது. அதன் காரணமாக அந்தப் பணியில் அவர் சேர இயலவில்லை.
எனவே, பாபா அணு ஆராய்ச்சிக் கழகத்திலேயே (BARC) அவரது பணி தொடர்ந்தது. அதன் கோட்பாட்டு விண்வெளி இயற்பியல் பிரிவின் தலைவராக 2005-இல் உயர்ந்த மித்ரா, 2015 வரை அப்பொறுப்பில் இருந்தார்.
ஜெர்மனியின் மேக்ஸ் பிளாங்க் இன்ஸ்டிட்யூட்டில் வருகை பேராசிரியர் (2006), அமெரிக்க தேசிய ஆராய்ச்சி கவுன்சிலின் முதுநிலை ஆய்வாளர் (2004), மும்பை பல்கலைக்கழகத்தின் வருகை பேராசிரியர், ஹோமி பாபா தேசிய அறிவியல் நிலையத்தின் பேராசிரியர் (2010) ஆகிய பணிகளில் மித்ரா தற்போது ஈடுபடுகிறார்.
1989-இல் இந்திய இயற்பியல் சங்கத்தால் சிறந்த இளம் விஞ்ஞானி விருது மித்ராவுக்கு வழங்கப்பட்டது. சர்வதேச விண்வெளி சங்கம், இந்திய அணுவியல் சங்கம், இந்திய அறிவியல் சங்கம், இந்திய விண்வெளியியல் சங்கம் ஆகியவற்றில் மித்ரா உறுப்பினராக உள்ளார். இதுவரை சர்வதேச அளவிலான 152 ஆய்வறிக்கைகளை அவர் வெளியிட்டுள்ளார்.
டாடா அடிப்படை ஆராய்ச்சிக் கழகமும், இந்திய விண்வெளிக் கல்வி நிறுவனமும் இணைந்து லடாக்கின் ஹன்லேவில் வளிமண்டல ஆய்வுக்கான மாபெரும் காமா கதிர் தொலைநோக்கியை (MACE- 2014) நிறுவியுள்ளன. அதன் தரவுப் பகுப்பாய்வுத் திட்டத்தை மித்ரா வடிவமைத்தார்.
பிரபஞ்சத்தின் தோற்றம் பெருவெடிப்பால் நிகழ்ந்தது என்ற கருத்தையும், கறுப்பு ஆற்றல் குறித்த கோட்பாடுகளையும் கேள்விக்குள்ளாக்குபவையாக மித்ராவின் ஆய்வுகள் உள்ளன. கருந்துளைகள் குறித்த புதிய கண்ணோட்டத்தையும் அவை உருவாக்கியுள்ளன. கருந்துளை தகவல் முரண்பாட்டுக்கு முழுமையாக தீர்வு காண்பதாக மித்ராவின் ஆய்வே உள்ளது.
இதுவரையிலும் அதீத செல்வாக்கு செலுத்தி வந்த ஓர் அறிவியல் கோட்பாட்டை மறுக்க, மிகுந்த நிபுணத்துவமும் துணிவும், தனது கண்டுபிடிப்பு குறித்த தன்னம்பிக்கையும் வேண்டும்.
தனது ஆய்வுக்கு சக விஞ்ஞானிகளும் உலக விஞ்ஞானிகளும் பெருமளவு ஆதரவு தராத நிலையிலும், தனது கருத்தில் உறுதியாக உள்ளார் அப்பாஸ் மித்ரா. இப்போது இல்லாவிடிலும், எதிர்காலத்தில் உலக விஞ்ஞானிகளால் முன்னோடி விஞ்ஞானியாக மித்ரா போற்றப்படுவார்.
- வ.மு.முரளி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.