இளைஞர்மணி

உலக அளவில் வேலைவாய்ப்பளிக்கும் புல் மேலாண்மைப் படிப்புகள்!

இரா. மகாதேவன்

வேலை வாய்ப்புகள் உலகமயமாகிவிட்ட இக்காலத்தில்,   இனி பழைய வேலைவாய்ப்புகளை மட்டுமே நம்புவதில் எந்தப் பயனும் இருக்கப் போவதில்லை. நாம் கற்கும் கல்வியும், பெறும் பயிற்சியும் எந்த நாட்டிற்குச் சென்றாலும் வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருவதாக இருக்க வேண்டும். 
  அவ்வாறு புதியதொரு வேலைவாய்ப்பாக உருவாகி இருப்பது Turf Management  எனப்படும் புல் மேலாண்மைப் பணிகள். அதாவது ஊட்டி, கொடைக்கானல், கோல்ஃப் மைதானங்கள் அல்லது பெரிய பங்களாக்களின் முன்புறத் தோட்டங்களில் பசுமையாக, கால் வைத்தால் பஞ்சுபோல மிருதுவாக காணப்படுமே... அவற்றை மாதிரி அமைக்க உதவுவதுதான் Turf Management.

நம் நாட்டில் அக்ரிகல்ட்சர், செரிகல்ட்சர், ஹார்ட்டிகல்ட்சர், ஃப்ளோரிகல்ட்சர் என விவசாயம், தோட்டக்கலை போன்றவற்றுக்கான பல பட்டப் படிப்புகள்  
இருந்தாலும்,  Turfgrass Science என்ற தனித்துறை இல்லை. ஆனால், அமெரிக்கா, கனடா, யு.கே., ஆஸ்திரேலியா உள்ளிட்ட  பல நாடுகளிலும்  Turfgrass Management Course கல்லூரி, பல்கலைக்கழகங்களில் வகுப்பறை கல்வியாகவும், இணையக் கல்வியாகவும் வழங்கப்படுகிறது.

கோல்ஃப் மைதானம், தடகள விளையாட்டு மைதானம், புல்வெளிகள் போன்றவற்றை அமைப்பது, திறம்பட நிர்வகிப்பதற்கு ஏற்ற வகையில் இதற்கான   பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.  இந்தப் பட்டங்கள், பட்டயங்கள் புல் மேலாண்மை குறித்தது என்றாலும், அதுதவிர, அடிப்படை அறிவியல், தகவல் தொடர்பு, அளவீடு, கலை, மனிதநேயம், சமூக அறிவியல், வணிகம் உள்ளிட்டவை தொடர்பான பாடங்களையும் கொண்டிருக்கும்.

குறிப்பாக, புல் அறிவியலில் புற்கள் மற்றும் மண் வகைகள், தாவர நோயியல், பூச்சியியல், களை அறிவியல், சுற்றுச்சூழல் வளங்கள், பண்ணை மேலாண்மை, தோட்டக்கலை, சர்வதேச வேளாண்மை குறித்த பாடங்கள் இருக்கும். 

புல் மேலாண்மைப்  பாடத்தை கல்லூரியில் சேர்ந்து படிப்பவர்களாக இருந்தாலும், இணையவழியில் படிப்பவர்களாக இருந்தாலும் களப்பயிற்சி, கள அனுபவம் அவசியமாக்கப்பட்டுள்ளது. புல் அறிவியல் பட்டங்கள் பெறுவதன் மூலம், நாம் பெறும் பட்டங்கள், பட்டயங்களுக்கு ஏற்ப,  கோல்ஃப் மைதான கண்காணிப்பாளர், தடகள மைதான மேலாளர், புல்வெளி நிபுணர், இயற்கை நிலக்காட்சி பராமரிப்பு நிபுணர், தரை புல் தயாரிப்பு} தளவாடப் பொருட்கள் தயாரிப்பு தொழிற்சாலை பிரதிநிதி, தாவர மேலாண்மை, சுற்றுச்சூழல் ஆர்வலர், கல்லறை மேலாளர், ஆராய்ச்சி உதவியாளர், சர்வதேச தரை புல் நிபுணர், தரைப் புல் விஞ்ஞானி என உலக அளவில் சுமார் 200 வகையான வேலைவாய்ப்புகள் உள்ளன.

பெரும்பாலான வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள் Turfgrass Management Course  - ஐ இணைப்புப் பாடமாகவும், இளைநிலை பட்டமாகவும் இணையத்திலும், தொலைநிலைக் கல்வியாகவும் வழங்குகின்றன. இவ்வாறு பட்டம், பட்டயம் முடித்து சான்றிதழ் பெற்ற தரை புல் மேலாளர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை கிடைக்கிறது. 

வேளாண்துறை பணியில் உள்ளவர்கள் தரை புல் மேலாண்மை கோர்ஸ் பயில்வதன் மூலம் பணியில் தகுதி உயர்வு, ஊதிய உயர்வு உள்ளிட்ட பலன்களைப் பெறலாம்.  

அமெரிக்காவின் "தொழிலாளர் புள்ளியியல் அமைப்பு' தகவல்படி கடந்த 2014}இல் மட்டும் 12.82 லட்சம் பேர் நில பராமரிப்பு ஊழியர்களாக இத்துறையில் பணிவாய்ப்பு பெற்றுள்ளனர். மேலும், இந்தத் துறையில் வேலைவாய்ப்பு வளர்ச்சி 2014-2024-இல் 8 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

தரை புல் மேலாண்மை படித்தவர்கள் தோட்டக்கலை மேலாளர் பணியில் சேர முடியும்.  இதில் அவர்களுக்கு தோட்டக்கலை திட்ட மேலாளர், அமைப்பாளர், பசுமை இல்லம் மற்றும் நாற்றுப் பணி, மரங்கள், மூலிகைச் செடிகள், பூக்கள் மற்றும் தாவரங்களை வளர்க்கும்- சந்தைப்படுத்தும் தொழிலாளர்களை நிர்வகிப்பது, இயக்குவது போன்ற பணிகள் இருக்கும்.  அமெரிக்காவில் இவர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 28.13 லட்சம் வழங்கப்படுகிறது.

அடுத்ததாக, இயற்கை நிலக்காட்சி கட்டுமான கலைஞராகவும்  பணியாற்றலாம். இயற்கை நிலக் காட்சிகளை வடிவமைப்பது, வணிகரீதியிலான திட்டங்கள், அலுவலகக் கட்டுமானங்களைப் பெறுவது, இயற்கை நிலக் காட்சி கட்டுமானங்களை மேற்பார்வையிட்டு மேம்படுத்துவது உள்ளிட்ட பணிகள் இருக்கும். இவர்களுக்கு ஆண்டு ஊதியமாக ரூ. 56.73 லட்சம் வழங்கப்படுகிறது.

இயற்கை நிலக் காட்சி மற்றும் தோட்டக்கலை தொழில்நுட்ப நிபுணர் பணியில், இயற்கை நிலக் காட்சிகளை அளவிடுவது மற்றும் மதிப்பிடுவது, வரைபடங்கள் தயாரிப்பது, நிலக் காட்சி கட்டுமான மாதிரிகளை வடிவமைப்பது, தோட்டங்கள், பூங்காக்கள், கோல்ஃப் மைதானங்களைக்  கட்டமைப்பது, பராமரிப்பது போன்ற வேலைகள் இருக்கும். இப்பணி வாய்ப்பைப் பெறுவோருக்கு  ஆண்டுக்கு ரூ. 35 லட்சம் ஊதியமாக வழங்கப்படுகிறது. 

நில பராமரிப்பு மற்றும் தோட்டக்கலை சேவை மேற்பார்வையாளர் பணியில் உள்ளோருக்கு ஆண்டுக்கு ரூ. 35 லட்சமும், இதே பணியில் உள்ள தொழிலாளர்களுக்கு ரூ. 24.26 லட்சமும் ஊதியமாக வழங்கப்படுகிறது. 

எனவே, படைப்பூக்கம் மிக்க இளைஞர்கள் இதுபோன்ற புதிய சர்வதேச வேலைவாய்ப்புகள் நிறைந்த படிப்புகளைத் தேடிப் பயில்வது உயர் ஊதியத்துக்கும், மனமகிழ்ச்சிக்கும் உரியதாக அமையும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமந்தாவின் புதிய படம்!

நீல நிலவே....திவ்யா துரைசாமி!

மணிப்பூரில் இரண்டு குழுக்களுக்கிடையே மீண்டும் துப்பாக்கிச்சண்டை: கிராம மக்கள் அச்சம்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

ஒடிஸா அரசு முதல்வர் நவீன் பட்நாயக் கைவசமில்லை -ராகுல் காந்தி பிரசாரம்

SCROLL FOR NEXT