வித்தியாசமாக நன்றி சொல்லுங்கள்!
நமக்கு உதவி செய்தவருக்கு, நமது அன்பை வெளிப்படுத்தும் வகையில் நன்றி தெரிவித்து மகிழ்ச்சியடைகிறோம்.
நமக்கு உதவி செய்தவருக்கு, நமது அன்பை வெளிப்படுத்தும் வகையில் நன்றி தெரிவித்து மகிழ்ச்சியடைகிறோம். இந்த நன்றியுணர்வை நன்றி எனும் ஒரு வார்த்தையில் சொல்வதை விட, அந்த உதவியால் நாம் அடைந்த மகிழ்ச்சியையும், அதைத் தொடர்ந்து நம் மனத்தில் தோன்றிய அனைத்து உணர்வுகளையும் வெளிப்படுத்தும் விதமாகப் புதிய முறையில் நன்றி தெரிவித்தால் என்ன? என்கிற புதிய சிந்தனையுடன் ஓர் இணையதளம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
இந்த இணையதளத்தின் முதற்பக்கத்தில், அம்மா (Mom), அப்பா (Dad), சகோதரர் (Brother), சகோதரி (Sister), குடும்பம் (Family), நண்பர் (Friend), துணைவர் (Partner), உடன் பணியாறுபவர் (Co- Worker), பயிற்றுநர் (Coach), வழிகாட்டுநர் (Mentor), ஆசிரியர் (Teacher), வேலை வழங்குபவர் (Boss), வாடிக்கையாளர் (Client), காவலர் (COP), தீயணைப்பாளர் (Firefighter) உட்பட 17 விதமான தலைப்புகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
மேற் கண்ட பிரிவுகளில், நாம் யாருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ, அந்தத் தலைப்பில் சொடுக்கினால் திறக்கும் பக்கத்தில், இலவசம், கட்டணம் என்று இரு வகையான நன்றி அறிவிப்பு வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன. இலவசம் எனும் வசதியைப் பயன்படுத்தி, அதற்கான பக்கத்தினைத் திறந்து, அங்கு நாம் நன்றி தெரிவிக்க விரும்புபவரின் பெயரை உள்ளீடு செய்து, அடுத்த பகுதிக்குச் செல்வதற்கான அம்புக்குறியீட்டைச் சொடுக்கினால், நாம் தேர்வு செய்த தலைப்புக்கேற்ற நன்றி அறிவிப்புச் செய்தி ஒன்று பார்வைக்குக் கிடைக்கும். அந்தச் செய்தி, நமக்குப் பிடித்திருந்தால் அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
Advertisement
Advertisement
அந்தச் செய்தி பிடிக்கவில்லையெனில், அதன் கீழ்ப்பகுதியில் இடம் பெற்றிருக்கும் தற்போக்குச் செயலிக்கான (Random) குறீயீட்டில் சொடுக்கினால், மற்றொரு புதிய நன்றிச் செய்தி கிடைக்கும். அதுவும் பிடிக்கவில்லையெனில், இதே முறையில் பல புதிய செய்திகளைக் காண முடியும். இவற்றில் நமக்குப் பிடித்தமான செய்தியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்தச் செய்தியில் சிறிய மாற்றம் செய்ய வேண்டுமென்று விரும்பினால், எடிட் செய்யும் வசதியைப் பயன்படுத்தி மாற்றிக் கொள்ளலாம்.
அடுத்து, அனுப்பும் நமது பெயரை உள்ளீடு செய்து கொண்டு, அந்த நன்றிச் செய்தியினை சுட்டுரை, முகநூல், கூகுள், மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப முடியும். நாம் அனுப்பும் நன்றிச் செய்தி அசைவூட்டம் செய்யப்பட்டு குறிப்பிட்ட முகவரியில் பகிரப்படும். இந்த வசதியைப் பயன்படுத்தி நன்றி சொல்ல விரும்புபவர்கள், http://www.sendthanks.com எனும் இணைய முகவரிக்குச் செல்லலாம்.
- மு. சுப்பிரமணி