நீ... நான்... நிஜம்! -12: குருவுக்கு மரியாதை கொடு!
இவர் என்னை விட கூடுதலான அறிவாளி என்று ஒருவரை நம்மிடம் அறிமுகப்படுத்தினால், எதை வைத்துச் சொல்கிறீர்கள்? என்று பதில் கேள்வி பிறக்கும். ஆம். நான் இளங்கலை (BA) தமிழ்.. அவர் முதுகலை (M.A) தமிழ்
இவர் என்னை விட கூடுதலான அறிவாளி என்று ஒருவரை நம்மிடம் அறிமுகப்படுத்தினால், எதை வைத்துச் சொல்கிறீர்கள்? என்று பதில் கேள்வி பிறக்கும். ஆம்.. நான் இளங்கலை (BA) தமிழ்.. அவர் முதுகலை (M.A) தமிழ் என்று அறிமுகப்படுத்தியவர் சொன்னால் சரி... சரி என்போம். அண்மையில் திருச்சி காவேரி மருத்துவமனை டாக்டர் அ.சுப்பிரமணியன் ஒருவரை எனக்கு அறிமுகப்படுத்தும் போது, ""இவர் என்னைவிட இரண்டு மணி நேரம் கூடிய அறிவாளி''என்றார். ""புரியவில்லை''என்றேன்.
""இவர் என் பேஷண்ட்... இவருக்கு நான் எந்த மருந்து சொன்னாலும்... அது கிட்னியைப் பாதிக்கும்... இது லிவரை OVER WORK பண்ண வைக்குமே என்று என்னுடன் விவாதம் செய்வார். எங்கய்யா இதெல்லாம் புடிச்சே என்று நான் அலுத்துக் கொண்டால் பாக்கெட்டிலிருந்து செல்ஃபோனை உருவி கூகுளைக் குளிர குளிரக் குடைந்து அது பற்றிய கட்டுரையைப் படித்துக் காட்டுவார்... எனக்கு இரண்டு மணிநேரம் முன்பாக அதைப் படித்து விடும் கூடுதல் அறிவாளி இவர்'' என்று கூறிவிட்டு வெடிச்சிரிப்பு சிரித்தார் மருத்துவர். மேலும் தொடர்ந்தார்: ""எல்லா வியாதிக்கும் வைத்தியம் பண்ணிடுவேன்.. இந்தக் கூகுளோஸிஸ் வியாதிக்குத்தான் மருந்து தெரியலை; அது கூகுளிலும் சொல்லப்படவில்லை'' என்று நொந்துகொண்டார்.
அறிவு அல்லது ஞானம் என்பது வெறும் தகவல் பரிவர்த்தனை மட்டுமே என்று இன்றைய இளையதலைமுறை நம்புகிறது. கூகுளிலிருந்து மட்டுமே ஞானம் பெற்று விட முடியும் என்கிற அஞ்ஞானம் பலரையும் ஆட்டிப் படைக்கிறது. இதன் விளைவாக கல்லூரிகளில், பள்ளிகளில் ஆசிரியர்களின் அருமை பல்லாயிரம் இளைஞர்களுக்குத் தெரிவதில்லை.
Advertisement
ஒரு காலத்தில் கல்வி முழுமையுமே குருவின் பிட்சை என்று இந்திய சமூகம் கொண்டாடியது. ஆனால் ஆசிரியரும் வெறும் படிப்பாளி... தகவலறிவின் எலும்பு தோல்... மானுட எந்திரம்... ATM பணம் கக்குகிற மாதிரி பாடம் கக்கும் உயிருள்ள எந்திரம் என்கிற உணர்வு இளைய தலைமுறையிடம் பெருகி வருகிறது. பள்ளிகளிலேயே ஆசிரியர்கள் மீதான மதிப்பு குறையத் தொடங்கி கல்லூரிக்காலத்தில் அது முற்றிலுமாக மறையத் தொடங்குகிறது. இதற்கு மாணவர்கள் மட்டும் காரணம் இல்லை என்பதை நானறிவேன். ஆனால் "குரு' வாழ்வில் எத்தனை பெரிய பாதிப்பை ஏற்படுத்தமுடியும் என்பதை உணர்ந்தவர்கள் நிச்சயம் உயரம் தொடரமுடியும் என்கிறேன்.
ஒருமுறை வந்தவாசியில் ஒரு பட்டிமன்றம். கி.வா.ஜகந்நாதன் நடுவர். என் கல்லூரிக் காலத்திலேயே, இலக்கிய மேளம் பெரிய செட்டில், ஜால்ரா பையனாக இருக்கும் அதிர்ஷ்டம் எனக்குண்டு. அது ஒரு கம்பராமாயணப் பட்டிமன்றம்.. பட்டிமன்றத்தில் வாதாடுபவர்கள் வாதாடி முடித்து கி.வா.ஜ தீர்ப்பு சொல்ல வேண்டிய வேளை. அவருக்கு இடையூறாக ஏம்பலம் மகாதேவன் என்றொரு பெரியவர் மைக்கைப் பிடித்துக் கொண்டார். சுருதி பிசகி பேசலானார். அணுகுண்டை விட ஆபத்தான ஆயுதம் மைக் என்பதை அவர் பேசப் பேச நான் புரிந்து கொண்டேன்.
கையில் கதர்த்துணி ஒரு பேல் (10 சட்டைகள் தைக்கலாம்) வைத்துக் கொண்டு மக்களைக் கதறக் கதற கதரால் அடித்தார். ஆம். கி.வா.ஜ வுக்கு அன்பளிப்பாகக் கொண்டு வந்திருக்கிறார். மனுஷர்... கொடுக்காமால் பேசிக்கொண்டே இருந்தார். அவர் சொல்ல வந்த விஷயம் இதுதான். "தமிழுக்கு, டாக்டர் உ.வே.சாமிநாத ஐயர் தொண்டு செய்தார். அவருக்குப் பரிசளிக்க எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை அதனால் அவரது தலைமாணாக்கர் கி.வா.ஜ.வுக்கு இந்த கதர்த்துணியைப் பரிசாக அளிக்கிறேன்' என்று சொல்ல வந்தார். ஆனால் சொல்லக்கூடாததெல்லாம் சொல்லிக் கொண்டே போனார். எனக்கு கி.வா.ஜ மீது ஒன்றும் பெரிய மதிப்பு இல்லை. டாக்டர் உ.வே.சா அவர்களுக்கு கொடுக்க விருப்பம். அவர் இன்று உயிரோடு இல்லை. இவர்தான் இருக்கிறார். அதனால் வேறு வழியின்றி கொடுக்கிறேன் என்று விபரீதமாகப் பேசி வைத்தார். சபை அதிருப்தி அடைந்தது. ருசி குறைந்தது. சபை "உச்' கொட்டியது.
ஆனால் கி.வா.ஜ. புன்னகையுடன் கண்களை மூடி, கைகளைக் குவித்துக் கொண்டார். பேச்சை ஆரம்பித்தார். ""இந்த வந்தவாசிக்கும் என் குருநாதர் ஐயர் அவர்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இங்கே அவரை நினைவூட்டி ஐயா அவர்கள் என்னை நெகிழவைத்தார். என் குருநாதர் பெயரை இங்கே யார் சொல்லப் போகிறார்கள் என்று நான் நினைத்திருந்தபோது குருநாதர் திருப்பெயரை நினைப்பூட்டிய ஐயாவின் திருவடிகளை பலநூறு முறை வணங்கி மகிழ்கிறேன்'' என்றார்.
அதைவிட ஆச்சர்யம். இந்தச் சம்பவத்தை இராமாயணத்தோடு இணைத்தார்... இலங்கையில் இராவணனால் சீதை சிறை வைக்கப்பட்டிருந்தாள். இராமர் இனி வரவா போகிறார் என்ற ஏக்கத்தில் செடியின் கொடியைக் கழுத்தில் மாட்டி தற்கொலைக்குத் துணிந்தார் சீதை. அதனைக் கண்ணுற்ற ஸ்ரீராம தூதனான அனுமன் தற்கொலை செய்யப் போகும் சீதையைத் தடுப்பது எப்படி என தடுமாறினார். தொட்டு நிறுத்த முடியாது. அந்நிய ஆடவன் தொட்ட அதிர்ச்சியில் கூட, அன்னை மரணமடையலாம். சமயோசிதமாக, பக்தி பொங்க "ராம்... ராம்' என்று பெருங்குரலில் கூவினார் அனுமன். இலங்கையில் ராமநாமம் கேட்ட பிராட்டி திடுக்கிட்டு தூக்குக் கொடியை அறுத்தெறிந்து, யார்... யார் என்று மேலும் கீழும் தேடினாள். "வந்தாராம்..போனாராம்' என்றுகூட ராம நாமம் சொல்லமாட்டாத லங்கையிலே என் உயிரை என் தெய்வத்தை எவன் சொன்னான் என்று சீதை தேடினாள். குரங்காக இருந்த அனுமனைக் கண்டு இவனும் மாயமான் போல அரக்கனோ என்று ஒரு விநாடி தயங்கினாள். பின்னர் யாராய் இருந்தால் என்ன? இரக்கமாய் வந்து உருக்கமாய், என் தெய்வம் பெயர் சொன்னான் என்று அனுமனைக் கைகூப்பி தொழுதாள், பிராட்டி... அனுமன் போலவே இரக்கமாய் வந்து எம்பிரான் (உ.வே.சா) நாமம் சொல்லி உருக்கினான்... இவன் அரக்கனோ குரக்கனோ.. யாராக இருந்தால் என்ன? தொழுகிறேன் தொழுகிறேன்'' என்று கண்ணீர்விட்டார். கி.வா.ஜ. இதுவல்லவா குருபக்தி? குருவின் அருமை மாணாக்கனுக்கு எப்போதும் தெரிய வேண்டும்.
அடிக்கடி இடமாறுதல் காரணமாகப் பள்ளி மாறிப் படிக்கும் சூழல் இன்று வந்துவிட்டது. ஏழெட்டு ஆசிரியர்கள் ஒரு வருடத்தில் மாறிமாறி வகுப்பெடுக்கும் சிக்கல் வேறு பலகாரணங்களால் ஏற்பட்டுவிட்டது. அதனால் குரு-சிஷ்ய நெருக்கம் முற்றிலுமாக மடிவற்றிப் போய்விட்டது. குருவின் அருமை மாணவனுக்குத் தெரிவதில்லை.
குரு-சிஷ்ய உறவு எப்படிப்பட்டது என்பதற்கு இன்னும் ஓர் உதாரணம் சொல்கிறேன். ஒருமுறை திருவாவடுதுறை திருமடத்தில் டாக்டர் உ.வே.சா அவர்களின் குருநாதர் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை உணவருந்திக் கொண்டிருந்தார். அமைதியாக அவரால் உண்ண முடியவில்லை. இரண்டு வாய் கூட சரியாகச் சாப்பிடாமல் எழுந்து கையலம்பி விட்டார். பாதிப்பந்தியில் திருமடங்களில் யாரும் எழுவதில்லை என்கிற சம்பிரதாயத்தைக் கூட அவர் பின்பற்றவில்லை. பந்தி விசாரித்துக் கொண்டிருந்த ஸ்ரீ சுப்ரமணிய தேசிகர், ""என்ன பிள்ளைவாள்.. என்ன சங்கடம்?'' என்று வினாவ, ""என்னோடு என் மாணவர் சாமிநாதன் (உ.வே.சா) வந்திருந்தார்... அவர் காலையே சாப்பிடும் பழக்கம் உடையவர்... அவர் சாப்பிட்டாரோ, இல்லையோ? என்று மனம் கலக்கமடைந்தது'' என்று பிள்ளைவாள் சொன்னார். ""அவரை நம் மடத்து சிப்பந்தியுடன் உணவுக்கு அனுப்பிவிட்டோம். நீங்கள் கவலைப்பட வேண்டாம்'' என்று ஸ்ரீ தேசிகர் சொன்னார். ஆனாலும் சிஷ்ய வாஞ்சையால் மனம் அமைதியடையாத மகாவித்வான் ஓட்டமும் நடையுமாக மாணவர் இருப்பிடம் வந்து ""உ.வே.சா விடம் ஆகாரமாயிற்றா?'' என்று தாமே கேட்டறிந்த பின்னர்தான் சமாதானம் அடைந்தார்.
"பழங்கதையாக அளக்காதீர்.. புதுக்கதை ஏதாவது சொல்லும்' என்று புருவத்தை நெளிக்கும் வாசகருக்குப் புதுக்கதை - கொஞ்சம் பழங்கதை - சொல்லட்டுமா?
(தொடரும்)