இளைஞர்மணி

இளைய பாரதமே...எழுக!-20: நாட்டுக்குத் தொண்டு புரியுங்கள்!

பல இந்தியக் குடும்பங்களில் பெண் குழந்தைகளுக்கு "நிவேதிதா' என்ற பெயர் பெற்றோரால் வைக்கப்படுகிறது.

த. ஸ்டாலின் குணசேகரன்

பல இந்தியக் குடும்பங்களில் பெண் குழந்தைகளுக்கு "நிவேதிதா' என்ற பெயர் பெற்றோரால் வைக்கப்படுகிறது. வழக்கமாக தமிழகத்தில் வைக்கப்படுகிற பல வடமொழிப் பெயர்களில் ஒன்றாகக் கருதி காரணமின்றி இப்பெயரை வைப்பவர்களும் உண்டு. பெரும்பாலானோர் ஜான்சி ராணி, கல்பனா, வள்ளியம்மை, அருணா, பிரீதி என்ற இந்திய வீராங்கனைகளின் பெயர்களை வைப்பது போலவே "நிவேதிதா' என்று தங்களின் குழந்தைகளுக்குக் காரணத்துடன் பெயர் வைக்கின்றனர்.
விவேகானந்தர், தனது இங்கிலாந்து நாட்டு ஆங்கிலேயே சிஷ்யையான மார்கரெட் எலிசபத் நோபிள் என்ற 31 வயதுப் பெண்மணி இந்தியா வந்து தனது ஆன்மீக மற்றும் மக்கள் சேவையைத் தொடங்கிய போது அவருக்கு ஞானதீட்சை கொடுத்து "நிவேதிதா' என்று பெயர் சூட்டினார்.
மார்கரெட் அயர்லாந்தில் பிறந்தவர். அயர்லாந்து மக்களை ஆங்கிலேய அரசு அடிமைப்படுத்தி வைத்திருந்த காலகட்டத்தில் ஆங்கிலேயர்களின் ஆதிக்கப் பிடியிலிருந்து அயர்லாந்தை மீட்டெடுக்க நடைபெற்ற விடுதலைப் போராட்டத்தில் மார்கரெட்டின் தந்தை வழிப் பாட்டனாரும் தாய் வழித் தாத்தாவும் தீவிரமாக ஈடுபட்டவர்கள்.
மார்கரெட்டின் தந்தை சாமுவேல் தனது முப்பத்து நான்காவது வயதிலேயே எதிர்பாராமல் மரணமடைந்தார். தாய் மேரி, மார்கரெட் உட்பட தனது மூன்று குழந்தைகளையும் மிகவும் சிரமப்பட்டு வளர்த்தார். 
பதினேழாம் வயதில் மார்கரெட் தனது கல்லூரிப் படிப்பை முடித்து 1884-ஆம் ஆண்டு இங்கிலாந்து சென்று அங்குள்ள ஒரு பள்ளியில் ஆசிரியர் பணியில் சேர்ந்து பணியாற்றினாள். ஆசிரியர் பணியில் மிகவும் பிடிப்புக் கொண்டவராகத் திகழ்ந்ததோடு மிகுந்த திறமையோடும் ஈடுபாட்டோடும் மாணவர்களுக்குப் பாடம் சொல்லித் தருகிற, முற்றிலும் வித்தியாசமான ஓர் ஆசிரியையாக மார்கரெட் விளங்கினாள்.
ஒரு கட்டத்தில் 1892 ஆம் ஆண்டு மார்கரெட் லண்டன் மாநகரின் புறநகர்ப் பகுதியான விம்பிள்டனுக்குச் சென்று அங்கு சொந்தமாக ஒரு பள்ளியைத் தொடங்கி நடத்தி வந்தாள். அப்பள்ளிக்கு "ரஸ்கின் பள்ளி' என்று பெயரிட்டாள். பத்தாண்டு காலம் தொடர்ச்சியாக ஆசிரியப் பணியை முழு அர்ப்பணிப்போடு செய்து வந்தாள் மார்கரெட்.
ஆசிரியப் பணியில் இருந்துகொண்டே மதம், ஆன்மீகம், சமூகம் குறித்த தேடல் மார்கரெட்டிடம் இடைவிடாமல் இருந்து கொண்டே இருந்தது. "மதம் என்பது இந்தக் கொள்கைகளையோ அந்தக் கோட்பாடுகளையோ நம்புவதல்ல, என்றுமுள்ள உண்மைப் பொருளுக்கான தேடல்தான் மதம்' என்ற கருத்தை தனது பதினெட்டாவது வயதிலேயே வெளிப்படுத்தினாள் மார்கரெட்.
அறிந்து கொள்ள வேண்டியவை இன்னும் ஏராளமாக இருக்கின்றன என்ற தாகமும், தேடல் மனப்பான்மையும் மார்கரெட்டை இடைவிடாமல் மனதளவில் அலைக்கழித்துக் கொண்டே இருந்தது. அந்தக் காலகட்டத்தில் தான் புத்தரின் கருத்துகளையும் சிந்தனைகளையும் தாங்கிய புத்தகங்களைப் படித்து அதில் முழ்கித் திளைத்தார். மூன்றாண்டு காலம் புத்தரின் போதனைகளைப் பயின்றார் மார்கரெட். 
இத்தகைய காலச் சூழலில்தான் மார்கரெட்டின் நெருங்கிய தோழியான இசபெல் மார்கசென் என்ற சமூக செல்வாக்குமிக்க பெண்மணி அப்போது இங்கிலாந்து வந்திருந்த விவேகானந்தரை ஒரு விடுமுறை நாளில் தனது இல்லத்திற்கு அழைத்திருந்தார். விவேகானந்தரின் வருகையை முன்னிட்டு வித்தியாசமான சிந்தைனையுடன் விளங்கும் தனது தோழி மார்கரெட்டையும் வீட்டிற்கு அழைத்தார் இசபெல் மார்கசென். விவேகானந்தரைச் சந்திப்பதற்கு மார்கரெட்டைப் போலவே பத்து , பதினைந்து நண்பர்களும் அழைக்கப்பட்டிருந்தனர்.
இசபெல் மார்கசென்னின் இல்லத்தில் விவேகானந்தர் நடத்திய உரையாடலும் , தெரிவித்த கருத்துகளும் மார்கரெட்டை மிகவும் கவர்ந்தது. பின்னர் இங்கிலாந்தில் விவேகானந்தரால் நிகழ்த்தப்பட்ட பிற சொற்பொழிவுகளையும் தொடர்ந்து கேட்டார் மார்கரெட் , 
விவேகானந்தர் இங்கிலாந்திலிருந்து மறுபடியும் அமெரிக்கா சென்று, அங்கு ஒராண்டு காலம் தங்கி பல சொற்பொழிவுகளை நிகழ்த்திவிட்டு மீண்டும் இங்கிலாந்திற்குத் திரும்பினார். இம்முறை எட்டு மாதங்கள் இங்கிலாந்தில் தங்கியிருந்து பல இடங்களில் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். இவற்றுள் பெரும்பாலான சொற்பொழிவுகளை ஆர்வமுடன் கேட்டார் மார்கரெட். பல நேரங்களில் தான் ஏற்கமுடியாத பல கருத்துக்கள் தொடர்பாக பல கேள்விகளையும் விவேகானந்தரிடம் எழுப்பி விவாதித்தார்.
மார்கரெட்டிற்கு எழுதிய ஒரு கடிதத்தில் விவேகானந்தர், "இவ்வுலகில் நல்லோரும் வல்லோரும் பலருடைய சுகத்திற்காக, பலருடைய நலத்திற்காகத் தங்களைத் தியாகம் செய்யவேண்டும். எல்லையற்ற அன்பும் நீங்காத இரக்கமும் கொண்ட நூற்றுக்கணக்கான புத்தர்கள் இன்று தேவை. அவரது படையில் யார் சேரப்போகிறார்கள்? அவரது உன்னதமான பணியில் ஈடுபட யார் தயாராக இருக்கிறார்கள்?' என்று எழுதியிருந்தார்.
ஒருநாள் விவேகானந்தர் இந்தியப் பெண்கள் கல்வியறிவு பெற வேண்டியதின் அவசியம் குறித்து ஆவேசமாக உரையாற்றிக் கொண்டிருந்த போது, அக்கூட்டத்தில் அமர்ந்திருந்த மார்கரெட்டை நோக்கித் திரும்பி, ""என் நாட்டுப் பெண்களின் கல்வி குறித்து சில திட்டங்கள் வைத்திருக்கிறேன். அதில் நீ எனக்குப் பெரிதும் உதவமுடியும் என்று நம்புகிறேன்'' என்றார்.
இப்படியான விவேகானந்தரின் கேள்விகளையும் முன்மொழிவுகளையும் அடிக்கடி தனக்குள் அசைபோட்டுப் பார்த்த மார்கரெட், அவற்றை, தான் இந்தியாவிற்கு வந்து அந்நாட்டு மக்களுக்காக உழைக்கவேண்டும் என்பதற்கான விவேகானந்தரின் அழைப்பாக ஏற்று 1898-ஆம் ஆண்டு ஜனவரி 28-ஆம் தேதி தனது 31-ஆவது வயதில் இந்தியா வந்து சேர்ந்தார் மார்கரெட். 
இந்தியா வந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகே "நிவேதிதா' என்று பெயர் சூட்டப்பட்டார். 
கல்கத்தாவில் நிவேதிதாவை பொதுமக்களுக்கு அறிமுகப் படுத்துவதற்கென்றே விவேகானந்தரால் ஒரு சிறப்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் விவேகானந்தர் நிவேதிதாவை அறிமுகப்படுத்தி உரை நிகழ்த்தினார். அக்கூட்டத்தில் உரையாற்றிய நிவேதிதா, ""ஆத்மஞானப் பொக்கிஷம் அனைத்துக்கும் உறைவிடம் உங்கள் நாடு. அதன் பெருமையை முன்னிட்டு அதற்குக் குற்றேவல் புரிய நான் இங்கு வந்துள்ளேன். சேவை செய்வதில் எனக்குப் பேரார்வமுண்டு. எனது ஊக்கத்தையும் ஆற்றலையும் இந்த நாட்டுக்கு ஒப்படைத்துவிட விரும்புகிறேன்'' என்று குறிப்பிட்டார்.
கல்கத்தாவிலுள்ள அன்னை சாரதா தேவியின் வீட்டில் தங்கியிருந்தவாறு அங்கிருந்து சற்று தொலைவில் உள்ள பேலூர் ராமகிருஷ்ணா மடத்திற்கு அடிக்கடி சென்று விவேகானந்தரிடம் உபன்யாசமும் வழிகாட்டுதலும் பெறுவது , கல்கத்தா மற்றும் சுற்றுப்புறங்களில் வாழும் மக்களுக்கு சேவை செய்வது என்று தனது பணியை ஈடுபாட்டுடன் செய்து வந்தார் நிவேதிதா. கல்கத்தாவில் பிளேக் நோய் திடீரென்று தாக்கியதால் அந்நோய்க்கு ஆட்பட்ட நோயாளிகளை மட்டும் விட்டு விட்டு அவர்களின் உறவினர்கள் சாவுக்குப் பயந்து தப்பித்து ஓடிவிட்டனர். இவ்வாறு கேட்பாரற்றுக் கிடக்கிற பிளேக் நோயாளிகளுக்கான நிவாரண சிகிச்சை முகாம் ஒன்று விவேகானந்தரின் ஆலோசனையின் அடிப்படையில் நிவேதிதாவின் தலைமையில் அமைக்கப்பட்டது. தனது உயிரைத் துச்சமென மதித்து, களமிறங்கி உயிர்காக்கும் சேவையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார் நிவேதிதா. 
இவ்வாறான பல சமூகப்பணிகளை தன்னார்வத்துடன் இந்திய நாட்டையும் மக்களையும் மதித்துச் செய்த நிவேதிதாவை மக்கள் மிகவும் நேசித்தனர். கல்கத்தாவில் பெண்களுக்கான கல்வி நிலையம் ஒன்றையும் ஏற்படுத்தி சிறப்பாக நடத்தி வந்தார். பல இடங்களில் சொற்பொழிவாற்றுவதையும் பல ஏடுகளில் எழுதுவதையும் தனது பணியாக மேற்கொண்டார்.
கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் நிவேதிதாவின் சொற்பொழிவைக் கேட்க அவர் உரை நிகழ்த்துகிற கூட்டங்களில் பார்வையாளர்களில் ஒருவராக ஈடுபாட்டுடன் பங்கேற்பதை வழக்கமாக வைத்திருந்தார். அப்போது அவர் ஒரு சிறந்த கவிஞராக விளங்கியபோதிலும் பெரும் புகழ் பெற்றவராகத் திகழவில்லை. தாகூரின் தந்தை தேவேந்திரநாத் தாகூரைச் சந்தித்துப் பேசினார் நிவேதிதா. தாகூரின் ஒட்டு மொத்தக் குடும்பத்தின் அன்பையும் மதிப்பையும் பெற்றவராக விளங்கினார் நிவேதிதா. 
நிவேதிதாவுக்கு அறிவியலில் பேரார்வம் இருந்துள்ளது. கல்கத்தா பல்கலைக்கழகத்தின் இயற்பியல் பேராசிரியரும் விஞ்ஞானியுமான ஜெகதீச சந்திர போசுடன் மிக நெருக்கமான தொடர்பு வைத்திருந்ததோடு அவர் அறிவியல் துறையில் வளர்ச்சியடையவும், புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளவும், அவரின் கண்டுபிடிப்புகளை உலகறியச் செய்யவும் வேறு எவரைக் காட்டிலும் ஓயாமல் உடனிருந்து ஊக்கப்படுத்திக் கொண்டும் உதவி செய்துகொண்டுமிருந்தார் நிவேதிதா. 
உலக அறிவியல் மேதைகள் பலரையும் ஜெகதீச சந்திர போசுக்கு அறிமுகப்படுத்தினார் நிவேதிதா. காலப்போக்கில் ஜெகதீச சந்திர போசின் குடும்ப உறுப்பினரைப் போல அவர் குடும்பத்தினர் அனைவரின் பேரன்பையும் பெருமதிப்பையும் பெற்று விளங்கினார் நிவேதிதா. ஆங்கிலேய அரசே ஜெகதீச சந்திர போசின் வளர்ச்சிக்குத் தடையாக இருந்த சூழலில் அவற்றைத் தகர்த்தெறிந்ததோடு அவர்களே ஜெகதீச சந்திர போசுக்கு "சர்' பட்டம் கொடுக்கும் அளவுக்கு போசின் ஆய்வுத்தரமும் அகில உலக அங்கீகாரமும் உயர உடனிருந்து முழுமையாக ஒத்துழைத்தவர் நிவேதிதா.
இங்கிலாந்தில் இருப்பது போல இந்தியாவில் அறிவியல் ஆராய்ச்சிக் கழகம் ஒன்றைத் தொடங்கி செயல்வடிவப்படுத்திய ஜெகதீச சந்திர போசுக்கு அதற்கான பின்புலமாக விளங்கியவர் நிவேதிதா. இதற்கெல்லாம் வெறும் அன்பையும் நட்பையும் தாண்டிய ஓர் அறிவியல் பார்வையும், இங்கிலாந்தைப் போல இந்தியாவும் அறிவியலில் வளர வேண்டும் என்ற நற்சிந்தனையும் நிவேதிதாவுக்குக் காரணங்களாக இருந்திருக்கின்றன.
கல்கத்தாவில் நடைபெற்ற அகில இந்தியக் காங்கிரஸ் மாநாட்டிற்கு வந்திருந்த காங்கிரஸ் இயக்கத்தின் முக்கியத் தலைவர்கள் பலரும் பேலூர் மடத்திற்கு வருகைபுரிந்து விவேகானந்தரைச் சந்தித்ததோடு அன்றைய அரசியல் சூழல் பற்றி மணிக்கணக்கில் அவருடன் உரையாடினர். அத்தலைவர்கள் நிவேதிதாவையும் சந்தித்தனர். அவர்களுடன் நிவேதிதா உணர்வுப்பூர்வமாக உரையாடியதோடு சில முக்கிய அரசியல் கருத்துகளையும் முன்மொழிந்தார். 
விவேகானந்தரின் மரணத்திற்குப் பிறகும் இந்திய விடுதலை இயக்கத்திற்குத் தூண்டுகோலாகத் திகழ்ந்தவர்களில் நிவேதிதா முதல் வரிசையில் நிற்கிறார்.
""நான் சுதந்திர வாழ்வு வாழ்வது போன்று நீங்களும் சுதந்திரவாழ்வு வாழுங்கள். எதேனும் ஒரு விதத்தில் நாட்டுக்குத் தொண்டு புரியுங்கள்'' என்று தனது உரைகளில் இந்திய இளைஞர்களுக்கு அழுத்தமான வேண்டுகோளை இடைவிடாது விடுத்துவந்தார் நிவேதிதா. 

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

ஷிகர் தவானுக்கு மறுமணம்..! 40 வயதில் ஐரீஷ் காதலியைக் கரம்பிடித்தார்!

பாஜகவில் இணைந்த அசாம் காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர்!

கொச்சியில் விருது பெற்ற தேவிகள்!

SCROLL FOR NEXT