நிவேதிதா பிறந்த அயர்லாந்து நாடு அப்போது இங்கிலாந்திற்கு அடிமைப்பட்டுக் கிடந்தது. தான் அடிமைப்பட்டுக் கிடக்கிறோம் என்பதைக்கூட உணரமுடியாத அரசியல் இருளில் அயர்லாந்து மூழ்கிக் கிடந்தது. காலப்போக்கில் அங்கும்கூட சுதந்திரத்திற்கான போர்க்குரல் ஒலிக்கத் தொடங்கிவிட்டது. அயர்லாந்தில் நடைபெற்ற சுதந்திரப் போராட்டம் நிவேதிதாவுக்குப் புத்தெழுச்சியை உருவாக்கியிருந்ததோடு அவ்வாறான ஓர் அரசியல் எழுச்சி இந்தியாவில் உருவாகவில்லையே என்று இந்தியா வந்த பிறகு ஆதங்கப்பட்டார்.
நிவேதிதா தனது ஆற்றலை, ஆளுமையை எந்தத்துறையின் வளர்ச்சிக்குப் பயன்படுத்த வேண்டும் என்பதை விவேகானந்தர் வரையறுத்துச் சொல்லவில்லை. நிவேதிதா அவர் விரும்பிய துறைகளில் பணியாற்றலாம் என்பதே விவேகானந்தரின் கருத்தாகும். நிவேதிதா செய்யும் சேவை மனிதகுலத்திற்குப் பயன்படுவதாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே விவேகானந்தரின் ஒரே நிபந்தனையாக இருந்தது. அன்று இந்தியா இருந்த சூழலில் ஆங்கிலேய ஆட்சியினர் இந்தியர்களை அடிமைப்படுத்தி வைத்திருந்ததை உணர்ந்ததோடு அதற்கு எதிராகக் குரல்கொடுக்கும் உணர்ச்சியற்றவர்
களாக இந்தியர்கள் இருந்ததையும் நன்கு அறிந்திருந்தார் நிவேதிதா. அத்தகைய விடுதலை உணர்ச்சியை மக்கள் மனதில் உண்டாக்குவதே அன்றைய காலத்தின் தேவை என்பதையும் நன்கு உணர்ந்திருந்தார் நிவேதிதா.
விவேகானந்தரின் மரணத்திற்குப் பிறகு இனி எத்தகைய திசைவழியில் தன்னுடைய சேவைப் பயணத்தைத் தொடர்வது என்று ஆழமாகச் சிந்தித்த நிவேதிதா, ஆங்கிலேயே ஆட்சிக்கு எதிராக களமிறங்கும் முடிவிற்கு வந்தார். ராமகிருஷ்ண மடத்திலுள்ளவர்கள் அவ்வாறு அரசியல் இயக்கங்களில் ஈடுபடக் கூடாது என்பது மடத்தின் விதியாக இருந்தது.
தன்னுடைய அரசியல் நடவடிக்கையால் மடத்திற்கு எக்காரணத்தைக் கொண்டும் அவப்பெயர் உண்டாகிவிடக்கூடாது என்று கருதிய நிவேதிதா, "இந்தியாவை என்னுடைய சுவீகாரத்தாய் நாடாகக் கொண்டவள் நான். என்னுடைய உடல், பொருள், ஆவி அனைத்தையும் இந்தியாவின் பணிவிடைக்காகவென்றே ஒப்படைத்திருக்கிறேன். சுவாமி விவேகானந்தர் என்னுடைய குருநாதர். ஆனால் நான் ஆற்றும் பணிகளுக்கெல்லாம் ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் எவ்வகையிலும் பொறுப்பாகாது. என்னுடைய சொந்தப் பொறுப்பிலேயே அரசியல் துறையில் பணியாற்ற நான் துணிந்துள்ளேன்' என்று இதழ்களிலேயே வெளிப்படையான அறிக்கையொன்றை வெளியிட்டார்.
அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தபடியே அரசியல்களத்தில் தனது கருத்தையும் கவனத்தையும் செலுத்தினார் நிவேதிதா. கல்கத்தாவில் நடைபெற்ற தேசியக் காங்கிரஸ் மாநாட்டுக்கு வந்திருந்த முக்கிய கங்கிரஸ் தலைவர்களோடு தொடர்பு கொண்டு அன்றைய ஆங்கிலேயர் ஆட்சிபற்றியும் அதற்கெதிராக மக்களுக்கு உருவாக வேண்டிய சுதேசிய உணர்வு குறித்தும் விவாதித்தார் நிவேதிதா.
நிவேதிதா தொடர்புகொண்ட தேசியத் தலைவர்களில் முக்கியமானவர் கோபால
கிருஷ்ண கோகலே ஆவார். சுதந்திரப் போராட்ட நடவடிக்கைகளில் மிதவாதப் போக்கைக் கடைபிடித்தவர் கோபால கிருஷ்ண கோகலே. அவரிடமுள்ள அபரிமிதமான மிதவாதப் போராட்ட அணுகுமுறையை நிவேதிதாவால் ஏற்கமுடியவில்லை. கோகலேவின் குணநலன்களும் பெருந்தன்மையும் நிவேதிதாவால் வெகுவாகப் பாராட்டப்பட்டாலும் அவருடைய போராட்ட வடிவத்தாலும் நடவடிக்கைகளாலும் யாதொரு விளைவும் ஏற்படப் போவதில்லை என்று வெளிப்படையாகவே கருத்துத் தெரிவித்ததோடு கோகலேவின் பாதையிலிருந்து விலகுவதாக அறிவித்துவிட்டு திலகரின் தலைமையை ஏற்றார் நிவேதிதா. இவர் ஏற்றதோடு நில்லாமல் தேசப்பற்று மிக்க இளைஞர்கள் பலர் திலகரின் தலைமையை ஏற்றுச் செயல்பட்டதற்குக் காரணமாகத் திகழ்ந்தார்.
மக்களிடையே சுதந்திர வேட்கையைத் தூண்டும் நோக்கில் உரை நிகழ்த்துவதற்கு இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் நிவேதிதாவுக்கு அழைப்புகள் வந்தன. கிழக்கு வங்காளம், பீகார், உத்திரப்பிரதேசம், பஞ்சாப், பம்பாய் முதலிய மாகாணங்களில் சூறாவளி போல் சுற்றுப்பயணம் செய்து அப்பகுதிகளில்
மக்கள் எழுச்சியை உருவாக்கும் விதத்தில் உரை நிகழ்த்தினார் நிவேதிதா.
பரோடா மன்னரிடமிருந்து நிவேதிதாவுக்கு அழைப்பு வந்தது. அவ்வழைப்பை ஏற்று பரோடா சென்ற நிவேதிதாவை மன்னரின் பிரதிநிதியாக வரவேற்றவர் அரவிந்தகோஷ் ஆவார். அவர் அங்குள்ள கல்லூரியொன்றின் பேராசிரியராக விளங்கினார். அரசியல் உணர்ச்சி பொங்கித் ததும்பியவராக விளங்கிய அரவிந்தகோஷிடம் நிவேதிதா, ஒரு புரட்சிகர இயக்கத்தைத் தொடங்க வேண்டும் என்ற கருத்தை முன்மொழிந்தார். அவ்வாறான ஒரு புரட்சிகர இயக்கத்தைத் தொடங்குவதற்கு வங்காளமே இடம் என்றும் நிவேதிதா அரவிந்தகோஷிடம் தெரிவித்தார். இந்த அரவிந்தகோஷ் தான் பின்னாளில் வங்கப் புரட்சியாளராக வடிவெடுத்த
அரவிந்தர்.
அரவிந்தரும் ஒரு புரட்சிகர இயக்கத்தைத் தொடங்கவேண்டுமென்ற கருத்தை ஆதரித்ததோடு ஏற்கனவே அத்தகைய சிந்தனை தமக்கு உண்டு என்றும் விரைவில் அவ்வாறான ஓர் இயக்கம் தொடங்கப்படவுள்ளதாகவும் நிவேதிதாவிடம் தெரிவித்தார். அரவிந்தர் தொடர்ந்து பத்தாண்டுகளுக்கும் மேல் ஆங்கிலேயே ஆட்சிக்கெதிரான புரட்சிகர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வங்கத்தில் விடுதலை இயக்கத்தை இளைஞர்கள் மத்தியில் வளர்த்தார். பின்னர் பாண்டிச்சேரிக்குச் சென்று "ஸ்ரீ அரவிந்த ஆசிரமம்' என்ற அமைப்பைத் தொடங்கினார். அந்த ஆசிரமம் இன்றளவும் செயல்பட்டு வருகிறது.
இந்தியாவின் பல பகுதிகளுக்குச் சென்று உரை நிகழ்த்துவதும், அரவிந்தரைப் போல பல படித்த இளைஞர்களைச் சந்தித்து அவர்களுக்கு தேசாபிமானத்தை வித்தியாசமான கோணத்தில் சொல்லித் தருவதும் நிவேதிதாவின் பணியாக இருந்தது. நிவேதிதா தனது உரையில் ""தேசாபிமானம் என்னும் எண்ணம் புத்தகங்களைப் படித்து வருவதில்லை. ஒருவருடைய சொரூபம் முழுவதையும் பிடித்து வாட்டுகின்ற உணர்ச்சியே "தேசாபிமானம்' என்று அழைக்கப்படுகிறது. ஒரு மனிதனுடைய ரத்தம், எலும்பு, மஜ்ஜை முழுவதும் அந்த எண்ணத்தில் ஊறிவிடுகிறது. அவன் சுவாசிக்கின்ற காற்று அந்த எண்ணமயமாய் விடுகிறது. அவன் காதில் விழும் ஓசை ஒலிகளெல்லாம் உள்ளத்தினுள்ளே உணர்வுமயமாய் விடுகின்றன. அத்தகைய உணர்வு படைத்த மனிதன் வாழ்க்கையில் உயர்ந்த செயல்களைச் சாதிக்க முடியும். அவருடையே கனவே நனவாக உருவெடுக்கும். தேசத்தைப் பற்றி அப்படி உணர்பவனே "தேசாபிமானி' '' என்று குறிப்பிட்டுள்ளார்.
நிவேதிதா, தனக்கு விவேகானந்தர் சொன்ன அரசியல் கருத்தொன்றை அடிக்கடி இளைஞர்களிடம் நினைவுபடுத்திக் கொண்டேயிருந்தார். "எதிர்பாராத ஒருமுறையில் இந்தியாவுக்கு சுதந்திரம் திடீரென்று ஒருநாள் வந்துசேரும். அதன்பிறகு அந்த சுதந்திரத்தைக் காத்து வைப்பதுதான் மிகக் கடினமானதாக இருக்கும். சரியான முறையில் நாடு தன் கடமையைச் செய்து வராவிட்டால் மூன்று தலைமுறைக்குள் அது பெற்ற சுதந்திரம் கனவு போன்று கைநழுவிப் போய்விடும். பெற்ற சுதந்திரத்தை வைத்து அனுபவிக்கத் தகுதியுடையதாக நாடு தன்னை ஆக்கிக் கொள்ள வேண்டும்' என்று நிவேதிதா தனது உரைகளில் விவேகானந்தரின் கருத்தாக எடுத்துக் கூறியுள்ளார்.
விவேகானந்தர் நாட்டின் சுதந்திரத்தை அந்நியர்களிடமிருந்து மீட்டெடுப்பதை மட்டும் பேசவில்லை, சுதந்திரம் கிடைத்ததற்குப் பிறகு இச்சுதந்திரத்தைப் பாதுகாப்பது குறித்தும் பலப்படுத்துவது குறித்தும் பேசியுள்ளார் என்பதை நிவேதிதாவின் உரைகள் மூலம் அறிகிறோம்.
சுதந்திரப் போராட்டக் காலகட்டங்களில் நிவேதிதா இந்திய சுதந்திரம் குறித்தும் பெண்விடுதலை பற்றியும் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும் நிகழ்த்திய உரைகளும், எடுத்த பல நடவடிக்கைகளும் மகாகவி பாரதியின் நெஞ்சில் அழுத்தமான எழுச்சியை உருவாக்கியது. பாரதி - நிவேதிதா சந்திப்பு பாரதி
யின் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக விளங்கியுள்ளது. பாரதி, நிவேதிதாவைச் சந்திப்பதற்கு முன்பே பெண் விடுதலை குறித்து கவிதைகள், கட்டுரைகள் எழுதியிருந்தாலும், "சக்கரவர்த்தினி' என்ற மகளிருக்கான இதழின் ஆசிரியராக விளங்கியிருந்தாலும் நிவேதிதாவைச் சந்தித்த பிறகு பெண்விடுதலைச் சிந்தனை குறித்தும் தேசவிடுதலைப் போராட்டம் பற்றியும் புதிய சிந்தனைக்கும் செயலூக்கத்திற்கும் ஆட்பட்டு புதிய தெளிவு கிடைத்தவராக விளங்கியுள்ளார்.
பாரதி தனது முதல் கவிதைத் தொகுப்பான "ஸ்வதேச கீதங்கள்" என்ற நூலை 1908 ஆம் ஆண்டு வெளியிட்டார். இந்நூலை நிவேதிதாவிற்கு சமர்பித்தார். பாரதியின் இரண்டாவது நூல் " ஜன்ம பூமி' என்பதாகும். இந்நூல் 1909 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்நூலையும் நிவேதிதாவிற்கே சமர்ப்பணம் செய்துள்ளார் பாரதி. "ஞானரதம்' என்ற பாரதியின் மூன்றாவது நூலையும் நிவேதிதாவிற்கே சமர்ப்பித்துள்ளார்.
1910 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பாரதியின் நான்காம் நூலான "துவைதம்' என்ற உரைநடை நூலின் முதல் பக்கத்தில் "நிவேதிதா தேவிக்கு சமர்ப்பணம் செய்யப்படுகிறது' என்று எழுதியுள்ளார் பாரதி.
மகாகவி பாரதியின் முதல் நான்கு நூல்களுமே நிவேதிதாவுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ள செய்தி ஆழ்ந்து கவனத்தில் கொள்ளத்தக்கதாகும். இந்நான்கு நூல்களுக்குப் பிறகு வந்த பாரதியின் எந்த நூலும் யாருக்கும் சமர்ப்பிக்கப்படவில்லை என்பதையும் குறிப்பிடுதல் அவசியமாகும்.
இந்த சமர்ப்பணங்கள் தவிர நிவேதிதாவைப் பற்றி கட்டுரைகளையும், சிறுகுறிப்புகளையும், ஒரு கவிதையையும் எழுதியுள்ளார் பாரதி. இவற்றின் மூலம் பாரதியிடம் நிவேதிதாவின் தாக்கம் எந்த அளவிற்கு வலுவாக இருந்துள்ளது என்பதை அறிய முடிகிறது.
நிவேதிதாவிடம் நன்கு பழகும் வாய்ப்பினைப் பெற்றிருந்தார், வங்கக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர். அவர் "கோரா' என்ற பிரசித்திபெற்ற நாவலை எழுதியுள்ளார். அந்நாவலில் நிவேதிதாவின் வாழ்வில் நடைபெற்ற பல முக்கிய நிகழ்ச்சிகளை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார் தாகூர். இந்த நாவல் நிவேதிதா மறைந்து 13 ஆண்டுகளுக்குப் பிறகு 1924 ஆம் ஆண்டு வெளிவந்தது.
இப்படி தேசியச் சிந்தனைமிக்க பல ஆளுமைகளுக்குப் பலவிதங்களில் அரசியல் மற்றும் சமூகக் கருத்துகள் சார்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிவேதிதா, விவேகானந்தரிடமிருந்து பெற்ற தேசபக்த ஜோதியைக் கொண்டு எண்ணற்ற ஞானச்சுடர்களை ஏற்றி வைத்தவர் என்றால் அது மிகையாகாது.
(தொடரும் )
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.