சமூகவியல் படியேறி சாதித்தவர்கள்!
உலகெங்கும் பரந்து விரிந்து கிடக்கிறது மானிட சமூகம். அது தன்னுள் தேசம், இனம், மொழி, நிறம், சாதி, மதம், வட்டாரம், வர்க்கம் என்றெல்லாம் பிரிவுகளை உண்டு பண்ணி சிறு சிறு குழுக்களாக...
மனிதாபிமானமற்ற ஒன்று
தெய்வீகமானதாக இருக்க முடியாது.
- ஃபிரடெரிக் டக்ளஸ்
உலகெங்கும் பரந்து விரிந்து கிடக்கிறது மானிடசமூகம். அது தன்னுள் தேசம், இனம், மொழி, நிறம், சாதி, மதம், வட்டாரம், வர்க்கம் என்றெல்லாம் பிரிவுகளைஉண்டு பண்ணி சிறு சிறு குழுக்களாக... சிறிய சமூகங்களாகவும் வாழ்ந்துகொண்டிருக்கிறது. அப்படி வாழ்கின்ற அனைத்து சமூகங்களும் இன்று ஓர் ஒற்றைச் சொல்லுக்குப் பயந்து, நடுங்கி வீட்டிற்குள் அடைபட்டு பீதியில் வீதியை மறைவாக நின்று பார்த்துக் கொண்டிருக்கிறது.
உலகெங்கும் உள்ள மானிடர்கள் மற்றும் அவர்களிடையே உள்ள பிரிவுகள், அதன் தோற்றம், பண்பாடு, கலாச்சாரம்... இவற்றோடு இப்போது ஏற்பட்டிருக்கும் உயிரச்சம் கலந்த உலக பீதி, இதையெல்லாம் ஒரு பாடத்திட்டம் நமக்கு சொல்லித் தருமேயானால், அதுவே சமூகவியல் பாடம். சமூகவியல் என்பது சமூகம் குறித்த ஆய்வு ஆகும். அது மனிதர்கள் ஒருவருக்கொருவர் எவ்வாறு தொடர்பு கொள்கிறார்கள் என்பதையும் மற்றும் சமூக கட்டமைப்புகள் (குழுக்கள், சமூகங்கள், நிறுவனங்கள்), சமூகப் பிரிவுகள் (வயது, பாலியல், வர்க்கம், இனம், முதலியன), சமூக நிறுவனங்கள் ஆகியவற்றால் மனித நடத்தை எவ்வாறு வடிவமைக்கப்படுகின்றது என்பதையும் ஆராயும் ஒரு துறையாகும்.
நாம் இதே பகுதியில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இலக்கியப் பாடம் மற்றும் பட்டம் குறித்து சுட்டிக்காட்டிய அதே பொதுவான, பலம் மற்றும் பலவீனப்பார்வைகளை இந்தப் பட்டப் படிப்பின் மீதும் பொதுச்சமூகம் கொண்டிருக்கிறது.
மும்பையில் உள்ள டாடா சமூக அறிவியல் கல்வி நிறுவனம் சமூகவியல் சார்ந்த பட்டப்படிப்புகளுக்கு கொடுக்கின்ற முக்கியத்துவத்தை விஞ்சுகிற அளவுக்கு டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் கொடுக்கின்ற சமூகவியல் பட்டத்திற்கு மதிப்பும், மரியாதையும் இருக்கிறது. சென்னையில் உள்ள லயோலா கல்லூரியின் சமூகவியல் பட்டம் தென் மாநிலங்களில் பிரசித்தி பெற்றது. இவற்றைத் தவிர்த்து நம் நாட்டின் பெரும்பாலான கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அளிக்கும் சமூகவியல் பட்டமென்பது மதம், தத்துவம், சமூகவியல் ஆகியவற்றின் கூட்டுப் படிப்பாகவும் (RPS - religion, philososphy, sociology), ஒருங்கிணைந்த ஐந்தாண்டு சமூக அறிவியல் படிப்பாகவும் இப்பொழுதும் உயிர்ப்போடு இருக்கிறது.
மனித சமூகம், சமூக உறவுகள், சமூக நடத்தைகள், சமூக அமைப்பு முறை, சமூக வாழ்க்கை முறை ஆகியவற்றை அறிவியல் நோக்கில் ஆய்வு செய்து பார்க்க சமூகவியல் பயன்படுகிறது. சமூக ஒழுங்கு, ஒழுங்கின்மை, மாற்றங்கள் ஆகியவை பற்றிய அறிவுத் தொகுதியை உருவாக்கும் நோக்கில் செயல்முறை ஆய்வுகளையும், பகுப்பாய்வு முறைகளையும் பயன்படுத்த சமூகவியல் கற்றுத் தருகிறது.சமூகம் தனிமனிதனை எப்படி பாதிக்கின்றது, தனிமனிதன் சமூகத்தை எப்படி பாதிக்கின்றான் என்பதும் பற்றி சமூகவியல் படிப்பதால் கற்றுகொள்ளலாம். ஒரு சமூகவியல் மாணவன் சமூகத்தில் நிகழும் மாற்றங்களை எளிதாகப் புரிந்து கொண்டு, அதற்கு ஏற்றாற்போல் அவனது வாழ்க்கையை வகுத்துக்கொள்ள முடியும். அரசுப் பதவிகளுக்கு முக்கியத் தேவையான தகுதியான குழுவாக இருக்கும் மக்களை எப்படிக் கையாள்வது என்கிற வித்தையை சமூகவியல் ஒரு மாணவனுக்கு கற்றுத் தருகிறது. இதற்கு முன் பார்த்திராத ஒரு சமூகத்தை பற்றி உற்று நோக்கி, விசாலமாக பார்க்கவும், புரிந்து கொள்ளவும் இந்தப் படிப்பு பயன்படுகிறது. மேலும், பேச்சுத்திறனையும், சொல்லாற்றலையும் மேம்படுத்துவதில் சமூகவியல் கல்வி முக்கிய பங்கு வகிக்கிறது.
இன்றைக்கு உலகெங்கும் சிக்கலைத் தீர்க்கின்ற அறிவியலாக சமூகவியல் பார்க்கப்படுகிறது. சமூகவியலாளரில் மிகப் பலர் கள ஆய்வுகளில் ஈடுபட்டு; மனிதர்களை நேராகச் சந்தித்து; முதல் நிலைத் தரவுகளைச் சேகரித்து முடிவுகளை அறிவிப்பதனால், பல நேரங்களில் அவர்கள் சமூக விஞ்ஞானிகள் என்றும் போற்றப்படுகின்றனர்.
இப்படிப்பட்ட சமூகவியலை தங்களது பட்டப்படிப்பிற்கான இளங்கலை மற்றும் முதுகலைப் பாடமாக எடுத்தவர்கள் மாநில மற்றும் மத்திய - அகில இந்திய அளவில் நடத்தப்படும் போட்டித்தேர்வுகளில் சுலபமாக வெற்றி பெற்றிருப்பதற்கு நிறையச் சான்றுகள்நம் முன் இருக்கின்றன. தங்களது அடிப்படைக் கல்வியை அல்லது இளங்கலைப் பட்டத்தை கணிதமாக, அறிவியலாக, பொறியியலாக, மேலாண்மையாக, வேறு ஏதாவது பாடங்களாகப் படித்துவிட்டு , இந்திய குடிமைப் பணித் தேர்வுகளிலும், மாநில அளவிலான குரூப் - ஐ தேர்வுகளிலும், சமூகவியலை விருப்பப்பாடமாக எடுத்து வெற்றி பெற்றவர்கள் ஏராளம். தினந்தோறும் தரமான செய்தித்தாள்களை ஆழமாக படிக்கின்ற எந்த மாணவரும் சமூகவியல் படியேறி சாதிக்கலாம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
தமிழக காவல் பணியில் ஐ.பி.எஸ்., அதிகாரியாக தனக்கென்று தனி முத்திரைப் பதித்து துணிச்சலான அதிகாரி என்று பெயரெடுத்த அஸ்ரா கார்க் ஐ.பி.எஸ்., இப்பொழுது மதுரை மத்திய சரக்கு மற்றும் சேவை வரிகளின் இணை ஆணையராக (JC, CGST) இருக்கும் வெ. பாண்டிராஜா ஐ.ஆர்.எஸ்., ஆகிய இருவரும் இந்திய ஆட்சி பணி தேர்வான யு.பி.எஸ்.சி., தேர்வின் முதன்மைத் தேர்வில் அவர்களது விருப்பப்பாடமாக தேர்ந்தெடுத்து எழுதியதில் ஒன்று சமூகவியல். அடிப்படையில் இவர்கள் இருவருமே பொறியியல் பட்டதாரிகள்.
இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற குடிமைப்பணிகள் தேர்வில் ஐ.ஏ.எஸ்., பிரிவில் நாட்டிலேயே 37-வது இடத்தை பிடித்து தேர்ச்சி பெற்ற வைத்தியநாதன், அடிப்படையில் ஒரு மருத்துவர். இவர் குடிமைப்பணிகள் தேர்வில் அவரது முதன்மை விருப்பப் பாடமாக சமூகவியலை எடுத்து படித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.