முந்தி இருப்பச் செயல் - 8
மனித வாழ்வில் நாம் அதிகம் ஈடுபடும் நடவடிக்கை பேசுவதாக இருந்தாலும், ஏறத்தாழ ஒரு வயது நிறைவடைந்த பிறகுதான் ஒரு குழந்தை பேசத் தொடங்குகிறது.
கேட்கும் திறன்-1
மனித வாழ்வில் நாம் அதிகம் ஈடுபடும் நடவடிக்கை பேசுவதாக இருந்தாலும், ஏறத்தாழ ஒரு வயது நிறைவடைந்த பிறகுதான் ஒரு குழந்தை பேசத் தொடங்குகிறது. ஆனால் நம் வாழ்வின் முந்தைய நிலையிலேயே கேட்கத் தொடங்கிவிடுகிறோம். அதாவது தாயின் வயிற்றில் இருக்கும்போதே, மனித சிசு கேட்கத் தொடங்கிவிடுகிறது.
சிசுவின் முதல் ஒன்பது வாரத்தில் உட்காது உருவாகிறது. பதின்மூன்றாவது வாரத்திலிருந்து வெளிக் காது வடிவம் பெறத் தொடங்குகிறது. ஒருவருடைய காதுகள் இன்னொருவரின் காதுகளைப் போல இருப்பதில்லை என்பதை கவனித்திருக்கிறீர்களா? ஒவ்வொரு மனிதனின் காதுகளும் தனித்துவத்தோடு இருப்பது மனித உடலின் சிறப்பியல்புகளுள் ஒன்று.
உலகின் ஒளியைக் காணும் முன்பே, வயிற்றிலிருக்கும் சிசு உட்புற மற்றும் வெளிப்புற ஒலிகளைக் கேட்கத் தொடங்குகிறது. தனது பதினாறாவது வாரம் முதலே, ஒரு சிசு தன் அம்மா பேசுவதை, பாடுவதை, இசையைக் கேட்டு ரசிப்பதை எல்லாம் கேட்கிறது.
பூவுலக வாழ்வு தொடங்கும் முன்பே கேட்கத் தொடங்கும் நாம், சாகும் வரை கேட்கிறோம். மனிதன் சாகும்போது கடைசியாகச் சாவது காதுதான் என்று பரவலாக நம்பப்படுகிறது. மரணப்படுக்கையில் கிடக்கும் மனிதரிடம் உயிர் பிரியும் தறுவாயில் அவருடைய குழந்தைகளும், உறவினர்களும் அவரிடம் பேசுவதைப் பார்த்திருக்கிறீர்களா? யார் யார் உடனிருக்கிறோம் என்று அவருக்குச் சொல்லி, நாங்கள் சொத்துகளைச் சண்டையிடாது பிரித்துக் கொள்வோம், ஒருவரையொருவர் கவனித்துக் கொள்வோம் என்றெல்லாம் பிரியவிருக்கும் அந்த உயிரிடம் பேசி, அந்த ஆன்மா அமைதியாக, நிறைவுடன் பிரிந்து செல்ல உதவுவார்கள்.
நாமனைவரும் பிறக்கும் முன்னரே பயிலும், வாழ்க்கையில் அதிகம் பயன்படுத்தும், சாகும் தருணம் வரை கைக்கொள்ளும் திறன் என்பது கேட்பதுதான். ஆனால் இது எங்கும் யாராலும் கற்பிக்கப்படுவதேயில்லை என்பதுதான் வேதனையான உண்மை.
கேட்பது, செவிமடுப்பது இரண்டும் வெவ்வேறானவை. காதுகேட்கும் நிலையில் உள்ளவர்கள் அனைவராலும் கேட்க முடியும். ஆனால் காதில் கேட்பதை மனதில் உள்வாங்குவதுதான் செவிமடுப்பது என்பது. நம்மில் பலருக்கும் செவிமடுக்கும் திறன் பெருமளவில் இல்லை என்பதுதான் யதார்த்தம்.
பள்ளிகளில் மூன்று வயதே நிரம்பிய பச்சைக் குழந்தைகளுக்கு அந்நிய மொழியில் "கேஜி' வகுப்புகள் நடத்தி, "எழுது, வரை, வர்ணம் தீட்டு' என்று கொடுமைப்படுத்துகிறோம். ஆனால் எந்த வகுப்பிலும் துல்லியமாக கேட்கச் சொல்லிக் கொடுப்பதில்லை.
பெண்கள் பேசுவதை பல ஆண்கள் கவனமாகச் செவிமடுப்பதில்லை. பலர் தம்மைவிட ஏதாவது ஒரு விதத்தில் "தாழ்ந்தவர்கள்' என்று கருதுபவர்கள் பேசுவதைச் செவிமடுப்பதில்லை. அவர்களெல்லாம் பேசுவது காதுகளில் விழலாம்; ஆனால் உள்ளுக்குள் நுழைவதில்லை.
பலரும் செம்மையாகச் செவிமடுக்காமல் இருப்பதற்கான சமூக-பொருளாதார-அரசியல் காரணங்களை எல்லாம் விட்டுவிடுவோம். தனிப்பட்ட முறையிலும் இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. ஒருவர் நம்மிடம் பேசிக் கொண்டிருக்கும்போது, நாம் பெரும்பாலும் “இதற்கு எவ்வாறு பதிலளிப்பது” என்று சிந்திக்கிறோம். அல்லது பேசிக் கொண்டிருப்பவர் விவரிப்பது போன்ற நம்முடைய சொந்த அனுபவத்தை நினைத்துக் கொண்டிருக்கிறோம். அல்லது முற்றிலும் வேறான ஒரு சிந்தனையில் மூழ்கிக் கிடக்கிறோம்.
ஒருவர் பேசுவதைக் கவனமாகச் செவிமடுப்பது நமது உடலில் ஒருவித அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. நாடித்துடிப்பும், இரத்த அழுத்தமும் உயர்கின்றன. சிலருக்கு உள்ளங்கைகள் வியர்க்கின்றன. நாம் சோர்வாகவோ, கோபமாகவோ, விரக்தியாகவோ இருக்கும்போது, நம்மால் கவனமாகக் கேட்க முடிவதில்லை. அதேபோல, நாம் மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருந்தாலும் எளிதில் சோர்வடையமாட்டோம்; ஆனால் சிரத்தையுடன் கொஞ்ச நேரம் கேட்டுக் கொண்டிருந்தாலே சோர்வடைந்துவிடுவோம். கேட்பதற்கு அதிக சக்தி, பொறுமை, நிதானம், கவனம் தேவைப்படுகிறது.
இதனால்தான் நம்மில் பெரும்பாலானோர் பெரும்பாலான வேளைகளில் கவன
மாகக் கேட்பதில்லை. கவனமாகக் கேட்கும் இயல்பில்லாதவர்கள் தங்கள் தொழிலில் உயர்வதுமில்லை. மனநல மருத்துவர்கள், விற்பனையாளர்கள், ஆற்றுப்படுத்துபவர்கள், வழக்கறிஞர்கள், சமூக சேவகர்கள், காவல்துறையினர், ஆசிரியர்கள் போன்றோருக்கு மட்டுமல்ல, அனைத்துத் துறைகளில் பணிபுரிபவர்களுக்கும் கேட்கும் திறன் மிக முக்கியமானதாக இருக்கிறது.
முன்பெல்லாம் மருத்துவர்கள் தங்கள் நோயாளிகளைப் பேச வைத்துக் கேட்பார்கள். ஒரு பொதுவான உரையாடலுக்குப் பிறகுதான், நோய், மருத்துவம் பற்றி கவனம் திரும்பும். கவனமாகக் கேட்கும் இயல்பு கொண்ட மருத்துவருக்கு அந்த உரையாடல் நோயாளியின் மனநிலை, பின்புலம், கவலைகள், பயங்கள் போன்ற பல விடயங்களைச் சுட்டிக்காட்டிவிடும். இதனால் அவர் வழங்கும் நிவாரணமும் மேம்பட்டதாக இருக்கும்.
எந்த ஆசிரியர் தன் மாணவர்களைப் பேச வைத்து கவனமாகக் கேட்கிறாரோ, அவர் மிகவும் விரும்பப்படுகிற ஆசிரியராக இருக்கிறார். எந்த மேலாளர் தன் ஊழியர்களின் கருத்துகளை, எண்ணங்களைக் கவனமாகக் கேட்டு வழி நடத்துகிறாரோ, அவர் வெற்றிகரமானவராகத் திகழ்கிறார்.
இயந்திரமயமான நவீன உலகில் நாம் பேசுவதைக் கேட்பதற்கு யாரும் இல்லாத நிலையில்தான் பலரும் தவித்துக் கொண்டிருக்கிறோம். அமெரிக்காவில் தனிமையில் வாடுகிறவர்கள் ஒரு நிமிடத்துக்கு இத்தனை டாலர் என்று விலை கொடுத்து பாலியல் அல்லது ஜோதிடம் தொடர்பான தொலைபேசி இணைப்புகளில் உரையாடி ஆசுவாசம் அடைகின்றனர்.
கவனமாகக் கேட்கிறவர்களிடம் மனம்விட்டுப் பேச முடிகிறது. நாம் மனம்விட்டுப் பேசும்போது கூர்மையாகக் கேட்கிறவர்களை நாம் இயற்கையாகவே அதிகம் விரும்புகிறோம்; நம்புகிறோம்; அவர்களைத் தேடிச் செல்கிறோம். அதனால் அவர்கள் மிகவும் அறியப்பட்டவர்களாக, விரும்பப்படுகிறவர்களாக இருக்கிறார்கள். தனிப்பட்ட வாழ்விலும், பணியிடத்திலும், உறவுகளைக் கட்டமைக்க, தக்க வைக்க கேட்கும் திறன் மிகவும் உதவுகிறது.
சீன மொழியில் கேட்பதற்கு நான்கு படங்களைச் சேர்த்து வரைகிறார்கள். காது, கண், மனது, இதயம் எனும் நான்கு படங்கள்தாம் அவை. காது கேட்பதைக் குறிக்கிறது. கண் கேட்பதை மனக்கண்ணால் பார்ப்பதைக் குறிக்கிறது. மனது அது குறித்து சிந்திப்பதைக் குறிக்கிறது. இதயம் கேட்கும்போது உணர்வதைக் குறிக்கிறது. இவை அனைத்தும் ஒன்றாக விரவிக் கலந்து, சிதறாத கவனத்தோடு நடக்கும் முழு உடலின் அனுபவம்தான் கேட்பது என்று கொள்ளப்படுகிறது.
காது, கண், மனது, இதயம் எனும் நான்கினுள், நேர்த்தியாகக் கேட்பதற்கு மனது மிகவும் முக்கியமானது என்று சொல்கின்றனர் ஜப்பானியர்கள். ஜப்பானிய தத்துவஞானி நான்-இன் அவர்களை ஒரு மேற்கத்தியப் பேராசிரியர் சந்தித்து, "ஜென்' தத்துவம் குறித்து கற்பிக்கும்படி கேட்டுக் கொண்டாராம். குருவானவர் ஒரு தேநீர் கோப்பையை அவர் முன்னால் வைத்து, அதில் தேநீரை ஊற்றினார். கோப்பை நிரம்பி வழிந்த நிலையிலும், அவர் ஊற்றிக் கொண்டேயிருந்தார். பொறுத்துக் கொள்ள முடியாத பேராசிரியர், ""கோப்பைதான் முழுக்க நிரம்பிவிட்டதே? இன்னும் ஊற்றிக்கொண்டிருந்தால் எப்படி உள்ளே புகும்?'' என்று இடைமறித்தார்.
குரு சொன்னார்: ""இந்த கோப்பையைப் போலவே, உங்கள் மனம் முழுக்க உங்கள் கருத்துக்களும், யூகங்களும் நிறைந்திருக்கின்றன. உங்கள் கோப்பையைக் காலி செய்யாமல், அதில் எதையும் கூடுதலாக ஊற்ற முடியாது''.
கேட்கும் திறனை வளர்த்தெடுக்க, முதலில் நம் மனக் கோப்பைகளை நாம் காலி செய்தாக வேண்டும்.
(தொடரும்)
கட்டுரையாசிரியர்: சுற்றுச்சூழல் ஆர்வலர்
தொடர்புக்கு: spuk2020@hotmail.com.