நிலவில் தண்ணீர் இருக்கிறதா, செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழக்கூடிய சாத்திய கூறுகள் இருக்கிறதா என உலகம் முழுவதும் விஞ்ஞானிகள் ஆராய்ச்சியை மேற்கொண்டிருக்கும் வேளையில், "செரஸ்' எனப்படும் குறுங்கோளில் ஒரு கடலே இருந்திருக்கிறது எனக் கண்டறிந்துள்ளனர் அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா விஞ்ஞானிகள்.
சூரிய குடும்பத்தில் உள்ள 9 கோள்களைப் பற்றி அனைவருக்கும் தெரியும். அது என்ன குறுங்கோள்? செவ்வாய் கிரகத்துக்கும், வியாழன் கிரகத்துக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி உள்ளது.
குறுங்கோள் பகுதி (ஆஸ்டீராய்டு பெல்ட்) என அழைக்கப்படும் இப்பகுதியில் சூரியனை மையமாகக் கொண்டு சுற்றிக்கொண்டிருக்கிறது செரஸ் குறுங்கோள். துணைக் கோளுக்கும், குறுங்கோளுக்கும் வித்தியாசம் உள்ளது. சூரியக் குடும்ப கிரகங்களை மையமாகக் கொண்டு துணைக் கோள்கள் சுற்றி வருகின்றன. உதாரணத்துக்கு பூமியை மையமாகக் கொண்டு சந்திரன் சுற்றி வருகிறது. ஆனால், எந்தக் கிரகத்துக்கும் துணைக் கோளாக இல்லாமல் சூரியனை மையமாகக் கொண்டு சுற்றி வருபவை குறுங்கோள்கள்.
கிரகங்கள் தமது சுற்றுப்பாதையில் உள்ளவற்றை விலக்கும் தன்மை கொண்டவை. குறுங்கோள்கள் தமது சுற்றுப்பாதையில் உள்ளவற்றைப் பாதிக்காது.
அந்த வகையில் 4 குறுங்கோள்கள் உள்ளன. அதில் அளவில் மிகப்பெரியதான செரஸ் குறுங்கோளில்தான் உப்புநீர் இருந்திருப்பது ஆராய்ச்சியின் மூலம் தெரிய வந்துள்ளது. இந்தக் குறுங்கோளுக்கு 2011-ஆம் ஆண்டு "டான்' என்ற விண்கலத்தை அனுப்பியது நாசா. 2015-இல் செரûஸ அடைந்த டான், 2018-இல் தனது பணியை நிறைவு செய்தது. டான் விண்கலத்தில் இருந்த எரிபொருள் தீர்ந்துபோனதால், அதன் பணி முடிவடைந்தது. டானின் ஆராய்ச்சி முடிவுகள் கடந்த வாரம் வெளியாயின. அது பல்வேறு வியப்பான தகவல்களை வெளிக்கொண்டு வந்துள்ளது.
946 கி.மீ. விட்டம் கொண்ட செரஸ் குறுங்கோள் 1801-ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. இதற்கு முன்னர் தொலைநோக்கி உதவியுடன் விஞ்ஞானிகள் ஆய்வு செய்தபோது, செரஸில் பல்வேறு பிரகாசமான பகுதிகளைக் கவனித்தனர். அது என்னவென்று டான் விண்கல ஆய்வின் மூலம் தெரிய வந்திருக்கிறது. டான் விண்கலம் செரஸின் தரைப்பரப்பிலிருந்து 35 கி.மீ. உயரத்தில் சுற்றி வந்து ஆய்வு செய்தது. அதில், "அக்கேட்டர்' என்ற பள்ளத்தாக்கில் நீண்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. செரஸில் காணப்பட்ட பிரகாசமான பகுதிகளிலேயே அளவில் பெரியது இந்த அக்கேட்டர் பள்ளத்தாக்கு. இதன் மேற்பரப்பில் காணப்படும் பிரகாசத்துக்கு காரணம், சோடியம் கார்பனேட் அல்லது ஆக்சிஜன், கார்பன், சோடியம் உள்ளிட்டவற்றின் கலவை என இந்தப் புதிய ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது. இந்தப் படிமம் கடல்போன்ற உப்புநீரிலிருந்து வந்திருக்கலாம்; உப்புநீர் சுழன்று ஆவியாகி, பிரதிபலிக்கும் உப்புப் படிவத்தை மேற்பரப்பில் விட்டிருக்கலாம் என்கிற முடிவுக்கு விஞ்ஞானிகள் வந்துள்ளனர். இதன்படி, இந்தப் பள்ளத்தாக்கின் அடியில் 25 மைல் ஆழம், நூற்றுக்கணக்கான மைல் நீளத்துக்கு ஒரு கடலே இருந்திருக்கலாம் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், பள்ளத்தாக்கின் பிரகாசமான பகுதியின் மையத்தில் நீரேற்றப்பட்ட குளோரைடு உப்புகள் இருப்பதையும் டானின் தரவுகள் காண்பிக்கின்றன. இந்த ஹைட்ரோஹலைட் கலவையானது பூமியில் உள்ள கடல்பனியில் பொதுவாக காணப்படும் அம்சமாகும். ஆனால், பூமிக்கு வெளியே ஹைட்ரோஹலைட் கண்டறியப்பட்டிருப்பது இதுவே முதல்முறை.
"200 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்தப் பள்ளத்தாக்கு உருவானதால் ஏற்பட்ட வெப்பத் தாக்கத்தின் விளைவாக உருகிய மேற்பரப்பில் இந்த உப்புப் படிவம் படிந்திருக்கலாம்' எனத் தெரிவித்துள்ளார் டான் விண்கலத்தின் முதன்மை ஆராய்ச்சியாளர் கரோல் ரேமண்ட். இதன்மூலம் செரஸின் தரைப்பரப்புக்கு அடியில் இன்னும் உப்புத் திரவம் இருக்கலாம் எனத் தெரிய வந்துள்ளது.
டானின் இந்த ஆராய்ச்சி முடிவுகள், செரஸ் குறுங்கோளில் உயிர்கள் இருந்தனவா, உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியகூறுகள் இருந்தனவா போன்ற எதிர்கால ஆராய்ச்சிக்கு துணைபுரியும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.