முகப்பு
இளைஞர்மணி

வெற்றியாளர்கள்! - பிர்லா குழுமம்: குமார் மங்கலம் பிர்லா

இருபதாம் நூற்றாண்டின் இறுதி பத்தாண்டுகள் வரை இந்தியாவில் மிகப்பெரிய பணக்காரர்கள் வரிசையை டாட்டா, பிர்லா என்றுதான் அழைப்பார்கள்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:08 PM
பகிர்:


இருபதாம் நூற்றாண்டின் இறுதி பத்தாண்டுகள் வரை இந்தியாவில் மிகப்பெரிய பணக்காரர்கள் வரிசையை டாட்டா, பிர்லா என்றுதான் அழைப்பார்கள். டாட்டா பற்றிய பல தகவல்கள் மக்களுக்கு போய் சேர்ந்து விட்டன. ஆனால், பிர்லா பற்றி விரிவாக அறிந்தவர்கள் மிகக்குறைவு. 

பிர்லா குழுமம் "ஆதித்ய பிர்லா குரூப்' என்று அழைக்கப்படுகிறது. இக்குழுமத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லா. மும்பையை தலைமையகமாகக் கொண்ட பிர்லா குழுமத்தின் ஆண்டு வருவாய் 40 பில்லியன் டாலர்கள். இதில் 50 சதவிகிதத்துக்கு மேல் அயல்நாடுகளில் இருந்து வருகிறது. உலகின் 36 நாடுகளில், 6 கண்டங்களில், 1,36,000 தொழிலாளர்கள், 42 தேசிய இனத்தவர்கள் இதில் பணியாற்றுகின்றனர். உலகம் முழுவதும் தடம் பதித்த ஒரு சில இந்திய நிறுவனங்களில் இது குறிப்பிடத்தக்கது. 

திருச்சியில் அகண்ட காவிரியாக ஓடும் ஆற்றின் தொடக்கம் குடகு மலையில் சிறிய சுனை நீராக ஆரம்பிப்பதுபோல் பிர்லா குழுமத்தின் தொடக்கம் 1857-இல் இராஜஸ்தானில் பிலானியை அடுத்துள்ள "பிர்லா ஹவேலி' என்ற வீட்டில் இருந்து தொடங்கி பல தலைமுறைகளாகத் தொடர்கிறது.  இங்கு மார்வாடி இனத்தில் பிறந்த சிவநாராயணன் பிர்லா தங்கள் குடும்ப வழக்கப்படி நகை அடகு பிடித்து வட்டி வாங்கி வாழ்க்கை நடத்துவதில் ஈடுபாடு இல்லாதவராக வணிகத் துறையில் ஆர்வம் காட்டத் தொடங்கினார். 

அப்போது சிறந்த வணிகமாக இருந்த பருத்தி விற்பனை தொழிலில் இறங்கினார்.  மும்பை, அகமதாபாத் ஆகிய இடங்களுக்குச் சென்று தொழிலை அறிந்து கொண்டு பருத்தியை வாங்கி  அகமதாபாத்தில் இருந்து மும்பை வழியாக இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்தார். வணிகம் செய்ய வசதியாக 1863- இல் மும்பைக்கு குடி பெயர்ந்தார். அத்துடன் சீனாவுக்கு சில பொருள்களை ஏற்றுமதி செய்தும் பெரும் செல்வத்தை ஈட்டினார். 

சிவநாராயணன் பிர்லாவுக்கு குழந்தை இல்லாததால் அவர்கள் குடும்பத்தில் பிறந்த ஒரு குழந்தையைத் தத்தெடுத்து அதற்கு பல்தேவ்தாஸ் பிர்லா என்று பெயிரிட்டார். 

தந்தையிடமிருந்து தொழிலை கற்றுக் கொண்ட பல்தேவ்தாஸ் 1887- இல் கொல்கத்தாவுக்குச் சென்று தொழிலை மேம்படுத்தினார். அவரது மகனான ஜி.டி.பிர்லா என்று அழைக்கப்படும் கன்ஷிராம்தாஸ் பிர்லா பருத்தி தொழிலுடன் சணல் வணிகமும் நடத்தி ஜி.எம்.பிர்லா கம்பெனி என்ற நிறுவனத்தை 1914- இல் தொடங்கினார். 

அப்போது நடைபெற்று வந்த முதலாம் உலகப்போரில் ஆங்கிலேய இராணுவத்துக்கு சாக்குப் பைகள் அதிக அளவில் தேவைப்பட்டன.

1919- இல் பிர்லா சணல் ஆலை என்ற ஆலை நிறுவப்பட்டு உலகப் போருக்குத் தேவையான சாக்குப் பைகள் அனைத்தையும் இவரது நிறுவனமே உற்பத்தி செய்தது. அடுத்த சில ஆண்டுகளில் பருத்தி ஆலைகள் சிலவற்றைத் தொடங்கியும், வாங்கியும் துணி உற்பத்தித் துறையில் தடம் பதித்தார். சர்க்கரை ஆலைகளையும் நிறுவினார். டெல்லியில் இருந்து வெளிவரும் ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஆங்கில செய்தித்தாளை 1924-இல் நிறுவினார். 

1942- இல் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினார்.  1957 முதல் இந்நிறுவனம் அம்பாசடர் வரிசை கார்களை உற்பத்தி செய்தது. 1970, 80-களில் கார் என்றாலே அரசுத்துறையிலும், தனிநபர்களிடமும், வாடகைக்கும் அதிகமாக இயங்கி வந்தது மார்க்1முதல் 4 வரை எண்ணுள்ள மற்றும் நோவா, கிராண்ட் போன்ற பெயருள்ள அம்பாசடர் கார்களே. உலகமயமாக்கலின் விளைவாக பல்வேறு நிறுவனங்களின் கார்களின் அறிமுகங்கள் படிப்படியாக அதிகரித்ததன் விளைவாக 2014 முதல் அம்பாசடார் கார் உற்பத்தி நிறுத்தப்பட்டது. 

பிர்லா குடும்பத்தினர் பக்தி  மிக்கவர்கள் என்பதால் டெல்லி இலட்சுமி நாராயணன் கோயில் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கோயில்களை நிறுவினார்கள். தேசிய உணர்வின் காரணமாக விடுதலைப் போராட்டத்திலும் அக்கறை காட்டினார்கள். மகாத்மா காந்தி டெல்லி வரும்போது பிர்லா மந்திரில்தான் தங்குவார். நாதுராம் கோட்சே காந்தியை சுட்டுக் கொன்றதும் அங்கு நடைபெற இருந்த பிரார்த்தனை நேரம் ஒன்றின் போதுதான். அந்த துயர நிகழ்வு குறித்து இக்குடும்பத்தினர் மிகுந்த வருத்தம் அடைந்தனர். 

ஜிடிபிர்லாவைத் தொடர்ந்து 

அவரது பேரன் ஆதித்ய வர்மா பிர்லா 1965- இல் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர்களது நிறுவன வணிகத்தை இந்தியாவுக்கு அப்பால் தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா போன்ற 16 நாடுகளில் பல்துறைகளில் இவர் விரிவுபடுத்தினார். 1995- இல் 
புற்றுநோயால் மரணமடைந்த பின் இப்போதைய நிறுவனத் தலைவர் குமார் மங்கலம் பிர்லா தன் 25-ஆம் வயதில் பொறுப்பேற்று நிறுவனத்தை மேலும் பல மடங்கு விரிவடையச் செய்துள்ளார். பிர்லா குடும்பத்தினர் ஆண்டு தோறும் தொழில் துறையில் கிடைக்கும் இலாபத்தை மீண்டும் அதே துறையில் பெருமளவு முதலீடு செய்வதால் இத்தகைய மாபெரும் வளர்ச்சி 
சாத்தியமானது. 
அதுவரை தனித்தனி பெயர்களுடன்இயங்கி வந்த நிறுவனங்களை "ஆதித்ய பிர்லா குழுமம்' என்ற தாய் நிறுவனத்தை அமைத்து ஒரு குடையின் கீழ் கொண்டு வந்தவர் குமார் மங்கலம் பிர்லா. இவரது தந்தை விட்டுச் சென்ற 3.3 பில்லியன் டாலர் வருவாயில் இருந்த நிறுவனத்தை 2019 மதிப்பீட்டின்படி 48.3 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டும் நிறுவனமாக உலகெங்கும் விரிவுபடுத்தினார். தாய் நிறுவனம் தொடங்கிய  வெள்ளிவிழா நிகழ்வை கடந்த ஆண்டு பாங்காக் நகரில் இந்திய பிரதமர் மோடியை அழைத்து வந்து சிறப்பாக நடத்தினார். 

இந்தியா விடுதலை பெற்ற உடனே குவாலியரில் கிராசிம் இண்டஸ்ட்ரீஸ் என்ற பெயரில் துணி நெசவு ஆலையை நிறுவி ரேயான் இழைகளையும் அவை சார்ந்த உற்பத்தி பொருள்களையும் ஏற்றுமதி செய்தார்கள். இந்தியன் ரேயான் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்தை 1966- இல் வாங்கி இணைத்துக் கொண்டார்கள். இந்திய விடுதலைக்குப் பின் இங்கிருந்து வெளியேறி இங்கிலாந்துக்கு திரும்பிய பலரிடமிருந்து தேயிலை தோட்டங்களை பிர்லா நிறுவனம் வாங்கியது. 

அடுத்ததாக உலோக உற்பத்தி துறையில் இறங்கி கனடா, அமெரிக்காவில் நோவெலியா, அலெரிஸ்  நிறுவனங்களை அமைத்து அதன் மூலம் சுற்றப்பட்ட அலுமினியம் தயாரிப்பில் உலகில் இரண்டாவது பெரிய நிறுவனமாக ஆனது. ஆப்பிரிக்க, ஐரோப்பிய, ஆசிய நாடுகளில் பிளாக் கார்பன் உற்பத்தியிலும் முக்கிய நிறுவனமாக பிர்லா கொடி நாட்டியது. "தாய் கார்பன் பிளாக்' நிறுவனம் தாய்லாந்தில் மிகப்பெரிய நிறுவனமாக வளர்ந்து கார் டயர்கள் போன்ற பல பொருள்களின் உற்பத்திக்கு முக்கிய மூலப்பொருளாக விளங்குவதுடன் இத்துறையில் ஜப்பானிய சந்தையில் பாதிக்கும் மேல் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. உலகில் உற்பத்தியாகும் ஐந்து கார் டயர்களில் ஒன்று பிர்லா நிறுவனத்தின் மூலப் பொருள்களால் உருவானதாகும். 

தாய்லாந்தில் கிடைத்த வெற்றி இந்நிறுவனத்தை 1974-இல் ஃபிலிப்பைன்சுக்கும் அங்கிருந்து 1978-இல் மலேசியாவுக்கும் நகர்த்திச் சென்று அங்கே உலகின் மிகப்பெரிய பாமாயில் ரிஃபைனரி அமைக்க வழிகோலியது. 1982- இல் இந்தோனேசியாவில் இந்தோ பாரத் ரேயான் நிறுவனம் உருவாக்கப்பட்டது. 

1999- இல் நிதித்துறையில் காலூன்றி கனடாவின் சன்லைஃப் காப்பீட்டு நிறுவனத்தை இணைத்துக் கொண்டது. ஆதித்ய பிர்லா கேப்பிட்டல் என்ற அமைப்பின் குடையின் கீழ் நிதிச்சேவைகள் இயங்கி வருகின்றன. செல்பேசி துறையில் "ஐடியா' சேவைகளை அமெரிக்க ஏ.டி&டி நிறுவனத்துடன் இணைந்து தொடங்கி பின்னர் அதனை "வோடா ஃபோனுடன் இணைத்துக் கொண்டது. 

சிமெண்ட் துறையில் இவர்களது "அல்ட்ராடெக் சிமென்ட்'  உற்பத்தி நிறுவனம் உலகிலேயே பெரிய இத்துறையில் நிறுவனமாக விளங்குகிறது. இந்தியாவில் 35-க்கும் மேற்பட்ட நகரங்களில் 100-க்கும் மேற்பட்ட ஆலைகள் உள்ளன. உலக சிமென்ட் சந்தையில் வலுவான நிலையில் உள்ளது. ஒடிசாவில் பல சுரங்கங்களை அமைத்து கனிமங்களை வெட்டி எடுத்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. 

துணித்துறையில் உலகின் மிகப்பெரிய விஸ்கோஸ் ஸ்டேப்பிள் இழை தயாரிப்பு நிறுனம் பிர்லாதான். ஆயத்த ஆடைகள் துறையில் ஆதித்ய பிர்லா ஃபேஷன்ஸ் நிறுவனத்தின் மூலம் இளைஞர்கள் விரும்பும் ஆலன்சோலி, பீட்டர் இங்லேண்ட், லூயிஃபிலிப் போன்ற 200க்கும் மேற்பட்ட பிராண்டுகள் உருவாக்கப்பட்டு அவற்றை விற்பனை செய்யும் 3,061பிரத்யேக விற்பனை நிலையங்கள் இந்தியாவிலும் பிற நாடுகளிலும் இயங்கி வருகின்றன. 25,000-க்கும்  மேற்பட்ட பல்பொருள் விற்பனை அங்காடிகளிலும் இவை விற்பனை ஆகின்றன. 

பிர்லா குழுமத் தலைவர்கள் எப்போதும் கல்வி மற்றும் பொதுநல சேவைகளில் தொடர்ந்து ஆர்வமாக ஈடுபட்டு வந்தனர். அவர்களது சொந்த ஊரான பிலானியில் உலகத்தரமான பொறியியல் கல்லூரியை நிறுவி நடத்தி வருகின்றனர். இவர்கள் நிறுவியுள்ள பள்ளிகளில் 45,000 மாணவர்கள் படிக்கிறார்கள். 4,000 மகளிர் சுய உதவிக் குழுக்கள், முதியோர் கல்வி, பாதுகாக்கப்பட்ட குடிநீர், மருத்துவ முகாம்கள் போன்ற பலவகைகளில் 70 இலட்சம் பேர்களுக்கு பிர்லா குழும உதவிகள் சென்றடைந்துள்ளன. 

கரோனா தீநுண்மி ஒழிப்பு நடவடிக்கைகளில் பங்கேற்று பிஎம்கேர்ஸ் நிதிக்கு 400கோடி ரூபாய்கள் நன்கொடை கொடுத்தது பிர்லா குழுமம். அத்துடன் 10 இலட்சம் முகமூடிகள் விநியோகிக்கவும், 2,80,000 பிபிஇ கருவிகள் மற்றும் வென்டிலேட்டர்கள் வாங்கவும் பிர்லா சமூக சேவைப்பிரிவுக்கு மேலும் 50 கோடிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒரு  லட்சம் கரோனா பாதுகாப்பு ஆடைகள் மற்றும் 10 இலட்சம் மூன்றடுக்கு முகமூடிகள் உருவாக்க மத்திய ஜவுளித்துறைக்கு தனியாக 50கோடிகளை அளித்துள்ளனர். 

இராஜஸ்தானில் ஒரு சிற்றூரில் பிர்லா ஹவேலி என்ற வீட்டில் 1857- இல் தொடங்கி 162 ஆண்டுகள் பல தலைமுறைகளாக விரிவடைந்து 2019- இல் 43,42,930 கோடி ரூபாய்கள் வருவாய் பெற்றுள்ள ஆதித்ய பிர்லா குழுமத்தின் வளர்ச்சி இளைஞர்களுக்கு ஓர்  ஊக்க சக்தியாக விளங்கும் என்பது உறுதி.

முழு கட்டுரையைப் படிக்க →