முகப்பு
இளைஞர்மணி

நிலம்... நீர்!

நீர் மேலாண்மையிலும், நிலப் பயன்பாட்டு முறையிலும் நேர்ந்துள்ள பாரிய மாற்றங்கள் கடலோர நன்னீர்நிலைகளையும் உவர்நீர்ப் பரப்புகளையும் கடும்பாதிப்புகளுக்கு உள்ளாக்கியுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:10 PM
பகிர்:

நீர் மேலாண்மையிலும், நிலப் பயன்பாட்டு முறையிலும் நேர்ந்துள்ள பாரிய மாற்றங்கள் கடலோர நன்னீர்நிலைகளையும் உவர்நீர்ப் பரப்புகளையும் கடும்பாதிப்புகளுக்கு உள்ளாக்கியுள்ளது. இயந்திரம், செயற்கை உரம் சார்ந்த தீவிர வேளாண்முறைகள், தொழிற்பேட்டைகள், நகர்மயமாதல் போன்ற பிரச்னைகள் நெய்தல் திணை நிலங்களைக் காயப்படுத்தியுள்ளன.

திணை நிலச் சூழலியலில் திறந்தவெளிகளின் மதிப்பு என்ன? நகர்ப்புற மக்களைப் பொறுத்தவரை அது பொருளாதார மதிப்பற்ற, பயனற்ற நிலம். கிராமப்புற மக்கள் நிலத்தைப் பொதுச்சொத்தாய்ப் பார்ப்பவர்கள்; பொதுச் சொத்து வளங்களைப் பேணிப் பராமரிப்பவர்கள்.

தனியுரிமை நிலம், மதில்சுவர்கள், அடுக்ககங்கள், கேட்டட் கம்யூனிட்டி எனப்படும் தனிக்குடிமைச் சமூகங்கள் என வளர்ந்துவிட்டிருக்கும் நகர நாகரிகம், திணை நிலங்களின் இயற்கையோடு இயைந்த வாழ்க்கை முறைகளிலிருந்து அந்நியப்பட்டு போனது. நிலம் சந்தைப்பொருள் ஆக்கப்பட்டுவிட்டது. இயற்கை வழங்கிவரும் நீடித்த சூழலியல், பொருளியல், சுகாதாரச் சேவைகளை நகர்ப்புறப் பண்பாடு கணக்கில் கொள்வதில்லை.

திறந்தவெளி நிலங்களும் அதனுடன் இணைந்த நீர்ப்பரப்புகளும் உலகளாவிய நீரியல், பருவநிலைச் சுழற்சி நிகழ்வுகளில் பெரும் பங்காற்றுகின்றன. நிலத்தடி நீர் மட்டம், வெள்ளப்பெருக்கு, வறட்சி, பொதுப் பயன்பாட்டுக்கான நன்னீர்ப் பெறுமதி - எல்லாவற்றிலும் திறந்த வெளி நிலங்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. நிலங்களைக் கட்டுமானங்களால் நிரப்பிவிடுவது என்பது இயற்கையின் மீது தொடுக்கப்படும் நெருக்கடி நிலைதான்.

நிலப்பரப்புகளை, காலங்களை, பொழுதுகளை நாம் எவ்வாறு கையாள வேண்டும் என நீர் நமக்குக் கற்றுத் தந்திருக்கிறது. நெகிழ்தன்மையோடு சமநிலை பேணுவதிலும் நிலத்தைத் தடம்பிடித்துச் செல்வதிலும் பிரபஞ்சத்தில் நீருக்கு இணையான ஆசான் வேறொன்று இல்லை.

வறீதையா கான்ஸ்தந்தின் எழுதிய "கடற்கோள் காலம்' என்ற நூலிலிருந்து...

முழு கட்டுரையைப் படிக்க →