முகப்பு
இளைஞர்மணி

வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 271

​ஊரடங்கு பிரகடனம் செய்யப்ப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான வீரபரகேசரியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
பகிர்:


ஊரடங்கு பிரகடனம் செய்யப்ப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான வீரபரகேசரியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள். வீரபரகேசரி தன்னை சோழப்பேரரசின் சக்ரவர்த்தியாக நம்பி தனது சேவகர்களின் உதவியுடன் தனது பெரிய வீட்டில் வாழ்ந்து வருகிறவர். அங்கு மன்னரின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடக்கிறது. அப்போது நிதியமைச்சருக்கும் ஜூலி கணேஷ் ஆகியோருக்கும் இடையிலான உரையாடலில் பயன்படுத்தப்பட்ட right under the nose எனும் சொற்றொடர், loo எனும் பிரயோகத்தின் பின்னுள்ள தோற்றக் கதை என்ன, அர்த்தமென்ன எனும் கேள்விகளை ஜூலியிடம் கணேஷ் கேட்கிறான். அதற்கு ஜூலி என்ன பதில் சொல்லப் போகிறது எனப்
பார்ப்போமா?

ஜூலி: முதலில் under the nose க்கு வருகிறேன். ஒரு சம்பவம் நம் கண் முன்னாலேயே நடக்கிறது, ஆனால் அதை நாம் கவனிக்க முடியாத அளவுக்கு இருந்திருக்கிறோம் என்றால் the incident took place right under our nose எனப் பொருள் வரும். உதாரணமாக, பன்னிரண்டு வயதுப் பையன் வீட்டில் தன் அறையில் மறைந்திருந்து சிகரெட் பிடிக்கிறான், அதை அவனது பெற்றோர்கள் கவனிக்கவில்லை. பின்னர் அவன் போதைப் பழக்கத்துக்கு ஆளாகிறான். அப்போது அது தெரிய வரும் அவர்கள் அதிர்ச்சியாகிறார்கள். இத்தனை வருடங்கள் தம் அருகாமையிலேயே இத்தனை தப்புகள் நடந்துள்ளனவா என வியக்கிறார்கள். அம்மா யோசிக்கிறாள்: has my son abused drugs here in my house right under my nose? இந்த மூக்கு என்பது ஓர் உயரத்தில் இருந்து பார்ப்பதைக் குறிக்கிறது. அதாவது ஒருவர் உயரமான இடத்தில் இருந்து தனக்கு கீழே நடப்பனவற்றைக் கண்காணிக்கிறார். அப்போது என்னவாகும்? சில நேரம் நமது உயரத்துக்குக் கீழே நடக்கிற விசயங்கள் கண்ணுக்குப் படாமலேயே போய்விடும். இப்படி ஓர் அப்பட்டமான விசயம் நம் கவனத்தில் படாமல் போவதை right under our nose என்கிறார்கள். புரியுதா?

கணேஷ்: ஆங்... புரியுது.

ஜூலி: அடுத்து loo-வுக்கு வருகிறேன். முதலில் நீ தெரிஞ்சுக்க வேண்டியது இந்த லூ என்பது பிரிட்டிஷ்காரர்களின ஆங்கிலத்தில் கழிப்பறையைக் குறிப்பிட பயன்படும் ஒரு informal ஆன கொச்சையான பதம்.  
கணேஷ்: ஓ! அப்போ அமெரிக்க ஆங்கிலத்தில் கழிப்பறையை என்ன சொல்லுவாங்க?
ஜூலி: பாத்ரூம்.
கணேஷ்: ஏன் பாத்ரூம்?
ஜூலி: இப்படி ஒவ்வொண்ணையும் நோண்டி நோண்டிக் கேட்காதே... சரியா?
புரொபஸர்: அவனை ஏன் திட்டுறே? நான் சொல்றேன்டா. அந்த காலத்தில் குளிப்பதற்கும் கழிவு
களைப் போக்குவதற்கும் ஒரே இடமே வைத்திருந்தார்கள். நமது வீடுகளில் எப்படி குளியலறையும் டாய்லெட்டும் இணைந்து இருக்கிறதோ அப்படி. அதனால் கழிப்பறைக்கு பாத்ரூம் எனச் சொல்லும் பழக்கம் உண்டானது. இப்போது அப்படி அல்ல. பெரும்பாலான பொதுவிடங்களில் குளியலறை இருக்காது; கழிப்பறை மட்டுமே உண்டு. ஆனாலும் பழக்கம் காரணமாகவும் சங்கோஜப்பட்டும் பாத்ரூம் என அதைச் சொல்கிறோம்.  
ஜூலி: அதுவும் வாஷ்ரூம் எனக் கேட்பது தான் இப்போதைய பேஷன். 
புரொபஸர்: வாஷ்ரூம் என்பதும் பாத்ரூம் என்பது பொருளிலும் உருவாக்கத்திலும் ஒரே வகையான சொற்களே. அமெரிக்க ஆங்கிலத்தில் பாத்ரூம் என்றால் கனெடிய, அதாவது கனடா நாட்டவர்களின் ஆங்கிலத்தில் அதையே வாஷ்ரூம் என்பார்கள்.
கணேஷ்: ஓ... நாமதான் ஸ்டைலுக்காக வாஷ்ரூம், பாத்ரூமுன்னு கலந்து கட்டி அடிக்கிறோமா? யாராவது பாத்ரூம் எங்கேன்னு கேட்டால் என்னடா இவனுக்கு நாகரிகமே தெரியாதான்னு ஒரு கும்பல் நினைக்குது. இந்த சொற்கள் எல்லாம் ஒவ்வொரு நாட்டிலும் புழக்கத்தில் இருக்கும் சாதாரண சொற்கள்ன்னு தெரியாமப் பண்றாங்க. 
புரொபஸர்: ஆமா. சரி நான் இந்த loo எப்படி வந்ததுன்னு சொல்லணும் இல்லியா? இது பற்றி நிறைய கதைகள் இருக்கு. கழிப்பறையின் அழுக்குத் தண்ணீரை வேலைக்காரிகள் மாடியில் இருந்து ரோட்டில் கொட்டும் போது தெருவில் போகிறவர்களை எச்சரிப்பதற்காக பிரெஞ்சில் கத்துகிற சொற்றொடரில் இருந்து loo வந்ததாக ஒரு கதை உண்டு. ஆனால் இதற்கெல்லாம் சான்றில்லை. ஓரளவுக்கு சான்று இருக்கக் கூடிய விவரம் இந்த சொல் Waterloo எனும் brand name இல் இருந்து வந்தது என்பது.
கணேஷ்:  Brand name ஆ?
புரொபஸர்: ஆமா, cistern என சொல்லுவார்களே, அதாவது flush tank, அதை அந்த காலத்தில் இரும்பில் செய்து  வைத்திருப்பார்கள். அப்படியான ஒரு பிரபலமான பிளஷ் டேங்க் கம்பனியின் பெயர்தான் Waterloo. அதில் இருந்தே கழிப்பறைக்கு கர்ர் எனும் பெயர் மருவித் தோன்றியதாகச் சொல்கிறார்கள். 

கணேஷ்: அப்படி சுற்றி இப்படி சுற்றி சப்புன்னு ஆயிப் போச்சே ஜூலி!

ஜூலி: ஆமால்ல.

(இனியும் பேசுவோம்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.