எதிர்மறை எண்ணம்... தோல்வியின் முதல் அடி!
நேர்மறையான எண்ணங்கள் நமது வாழ்வில் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. நம் வாழ்வின் வெற்றிக்கு அவை அடிப்படையாக அமைகின்றன.
நேர்மறையான எண்ணங்கள் நமது வாழ்வில் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. நம் வாழ்வின் வெற்றிக்கு அவை அடிப்படையாக அமைகின்றன. அதன் காரணமாகவே நாம் எப்போதும் நேர்மறை எண்ணத்தைக் கொள்ள வேண்டும் என்று நமது முன்னோர்களும் மூத்தோர்களும் அறிவுறுத்தியிருக்கின்றனர்.
ஆனால், நாம் எல்லா நேரங்களிலும் நேர்மறையாக இருப்பதில் பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன. அவ்வப்போது எதிர்மறை எண்ணங்களும், அத்தகைய எண்ணங்களைக் கொண்ட நபர்களும் நம்மைச் சூழ்ந்து கொள்கின்றனர். முக்கியமாக நம்முடன் பழகும் நண்பர்கள், உடன் பணியாற்றும் நபர்கள், உறவினர்கள் ஆகியோரில் யாராவது எதிர்மறை எண்ணங்களை மட்டுமே கொண்டிருப்பவர்களாக இருந்துவிட்டால், நமது அன்றாட வாழ்வு பெரும் சஞ்சலத்துக்கு உள்ளாகிவிடுறது.
எதிர்மறை எண்ணம் கொண்டிருப்பவர்களிடம் பழகுவது மிகவும் ஆபத்தானது. நம் இலக்கை அடைவதற்கான அத்தனை வழிகளையும் அவர்கள் அடைத்து விடுவார்கள். அவர்கள் வேண்டுமென்றே அவ்வாறு செய்வதில்லை. நம் இலக்கை அவர்களிடம் தெரிவிக்கும்போது, அதற்கு எதிரான கருத்துகளை அவர்கள் தெரிவிப்பார்கள். அதிலுள்ள பாதகங்களை மட்டும் நமக்குத் தெரிவித்துவிட்டு, நம்மைக் காப்பாற்றுவதாக நினைத்துக் கொள்வார்கள்.
அவர்கள் தெரிவிக்கும் கருத்துகளும் உண்மையைப் போலவே நமக்கும் தோன்றும். ஒரு கட்டத்தில் நமது இலக்கின் மீதே நமக்கு சந்தேகம் தோன்றும் அளவுக்கு அவர்களின் எதிர்மறை எண்ணங்கள் நமக்குள் குடியேறியிருக்கும். பின்னர் நாளடைவில் நாமும் நம் இலக்கின் மீதுள்ள விருப்பு
களைத் துடைத்தெறிந்துவிட்டு, எதிர்மறை எண்ணம் கொண்டவராக மாறிவிடுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.
எனவேதான் எதிர்மறை எண்ணங்களைக் கொண்டிருப்போருடன் மிகவும் கவனமாக நட்பு கொள்ள வேண்டியிருக்கிறது. எதிர்மறை எண்ணம் உடையவர்களிடம் நாமாக வலியச் சென்று நட்போ உறவோ கொள்வதில்லை. நம்முடன் பணியாற்றும் நபர்களையும் நமது உறவினர்களையும் நாம் தேர்ந்தெடுப்பதில்லை. அவை தானாக நடக்கின்றன.
எனவே, எதிர்மறை எண்ணம் கொண்டிருப்பவர்களை எவ்வாறு சமாளிப்பது என்பதை நாம் முறையாகத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். இல்லாவிட்டால், நமக்குத் தெரியாமலேயே அவர்கள் நமக்குள் ஐக்கியமாகி விடுவார்கள். அவர்களின் எண்ண ஓட்டங்களும் நமது எண்ண ஓட்டங்களும் கிட்டத்தட்ட ஒன்றாக மாறிவிடும்.
முதலில் நண்பர்களைக் கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். நமது விருப்பு, வெறுப்புகள், இன்ப துன்பங்கள், வாழ்வின் இலக்குகள் போன்றவற்றைப் பகிர்ந்து கொள்ளும் நண்பர்கள் வட்டம் சிறப்பானதாக அமைய வேண்டும். பெரும்பாலான சமயங்களில் நம் வாழ்க்கையில் முக்கியப் பங்காற்றுவர்கள் நம் நண்பர்களே. எனவே, அவர்கள் நேர்மறைவாதியாக இருக்க வேண்டியது மிக முக்கியம்.
எந்தவொரு செயலைச் செய்வதற்கு முன்பும் நெருங்கிய நண்பர்களுடனோ, குடும்ப உறுப்பினரிடமோ, உறவினரிடமோ ஆலோசிப்பது பெரும்பாலானவர்களின் பழக்கம். அவ்வாறு ஆலோசனை கேட்கும்போது, நமக்கு ஆலோசனை
வழங்குபவர்கள் கேட்கும் நபர்கள் நம் வாழ்வின் மீது அக்கறை கொண்டவர்களாகவும் நம்மை ஊக்குவிப்பவர்களாகவும் நேர்மறையான எண்ணங்களை நம்முள் விதைப்பவர்களாகவும் இருக்க வேண்டும்.
நம் நண்பர்களும் உறவினர்களும் நேர்மறை எண்ணம் கொண்டவர்களாக இருந்தால் மட்டுமே எந்தவொரு விஷயத்திலும் நம்மால் துணிந்து செயலாற்ற இயலும்.
இல்லையேல், அந்த விஷயத்தைப் பாதியில் கைவிடும் சூழலோ அல்லது அதைத் தொடங்குவதில் தாமதமோ ஏற்படக்கூடும். எதிர்மறை எண்ணம் கொண்டவர்களால் நம் கனவுகள், கனவுகளாகவே நிறைவடைந்து விடுவதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளன. நம் முன்னேற்றத்தைத் தடுப்பவர்களாக அவர்கள் இருப்பார்கள்.
எவ்வளவு நெருங்கிய நண்பராகவோ அல்லது உறவினராகவோ இருந்தாலும் கூட, எதிர்மறை எண்ணங்களை நம்முடன் பகிர்பவர்களை விட்டு விலகியிருப்பதில் தவறே கிடையாது. அவர்களால் நாம் எந்தவிதப் பலனையும் அடையப் போவதில்லை. அவர்களுடைய நட்பும் உறவும் அவ்வளவு மதிப்புமிக்கதாகவும் ஆகிவிடாது.
அதேபோல், எதிர்மறை எண்ணம் கொண்டிருப்பவர்களிடம் சென்று "இப்படியெல்லாம் நடந்து கொள்ளாதீர்கள். நல்லதை மட்டுமே கூறுவதற்குப் பழகிக் கொள்ளுங்கள்' என்று அறிவுரை கூறுவதையும் அறவே தவிர்த்துவிட வேண்டும். நீங்கள் என்ன கூறினாலும், அவர்களின் மனதுக்குள் எதுவும் சென்றடையாது. உங்களைத் தான் அவர்கள் தவறாக நினைப்பார்கள். எனவே, அவர்களைத் திருத்தும் வேலையை உங்கள் தலையில் சுமக்க வேண்டாம்.
உங்களுக்கென்று எல்லையை வகுத்துக் கொள்ளுங்கள். உங்களின் மதிப்பு, நேரம், நம்பிக்கை என அனைத்திலும் எல்லையை வரையறுத்துக் கொள்ளுங்கள். அதை எதிர்மறைவாதிகள் சீண்டுவதற்கு முயலும்போது அவர்களிடம் தெளிவாக உரைத்துவிடுவது நல்லது. "என்னுடைய எல்லைகளை நான் தெளிவாக வரையறுத்துள்ளேன். அவற்றைக் கொண்டு வெற்றி பெற முடியும் என நம்புகிறேன்' என்று பொறுமையாக அவர்களிடம் கூறிவிடுங்கள். அவர்கள் மீது கோபம் கொண்டு வேறு எதையும் கூற வேண்டும் என்ற அவசியம் இல்லை.
உங்கள் இலக்கிலும் எண்ணங்களிலும் உறுதியாக இருங்கள். எதிர்மறைவாதிகளின் மீது குற்றம் சுமத்த வேண்டாம். அதுவும் வீண்வேலை தான். அவர்கள் உங்கள் வாழ்வில் எந்த முக்கியத்துவத்தையும் ஏற்படுத்தவில்லை எனில் அவர்களிடமிருந்து அமைதியாக விலகி விடுங்கள். அவர்கள் மீது கோபம் கொள்வதும் வீணே.
உங்களை எப்போதும் நேர்மறையாக வைத்துக் கொள்ளுங்கள். புத்தகம் படிப்பது, தன்னம்பிக்கையை வளர்க்கும் சொற்பொழிவுகளைக் கேட்பது, சுயமுன்னேற்றத்துக்கான செயல்களில் ஈடுபடுவது என உங்களின் நேரத்தைப் பயனுள்ளதாகச் செலவிடுங்கள். அதுவே எதிர்மறைவாதிகளிடமிருந்து உங்களுக்கு விடுதலை அளிக்கும்.
நேர்மறை எண்ணங்களை எப்போதும் கைக்கொண்டு வாழ்வில் முன்னேற்றமடைவோம்.