முகப்பு
இளைஞர்மணி

வெற்றிக்கு வழிகாட்டும் திறன்கள்!

பெரிதாக ஒன்றை நினைப்பவர்கள் அதைச் சாதிப்பதற்கு கடுமையாக உழைப்பது மட்டுமே போதுமானதாக இருக்காது. சாதிப்பதற்கு தேவையான திறன்களையும் அவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
பகிர்:

பெரிதாக ஒன்றை நினைப்பவர்கள் அதைச் சாதிப்பதற்கு கடுமையாக உழைப்பது மட்டுமே போதுமானதாக இருக்காது. சாதிப்பதற்கு தேவையான திறன்களையும் அவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
"மாற்றம் ஒன்றே மாறாதது' என்று சொல்வார்கள். அதுபோல தொழில்நுட்பம் முதல் செயலாக்கம் வரை அனைத்துமே புதிய பாதைகளை நோக்கிப் பயணப்பட தொடங்கியுள்ள காலகட்டம் இது.
தகவல் தொழில்நுட்பத்தில் பெரும் புரட்சி பரவி வரும் இந்த காலகட்டத்தில் இத்தகைய மாற்றங்கள் தான் ஒவ்வொருவரின் எதிர்கால வாழ்க்கையையும் நிர்ணயிக்கின்றன. 
இன்றைய காலகட்டத்தில் இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் மாற்றங்களை எதிர்கொள்வதற்கான திறன்கள் அவசியம். அதற்கான வழிகளைப் பார்ப்போம்.
ஆயிரம் யோசனை:  "அவரிடம் பேசினால் ஆயிரம் யோசனை சொல்வார்' பழைய கால நிலைமையைச்  சொல்வார்கள். ஆனால் இன்றோ ஒவ்வொருவரிடமும் கோடிக்கணக்கான தகவல்கள் பரிமாறப்பட்டு வருகின்றன.  ஆனால் தகவல்களை ஒருங்கிணைக்க தெரியாமல் இளைஞர்கள் திணறுகின்றனர். எனவே கொட்டிக்கிடக்கும் தரவுகளில் இருந்து தேவையான தரவுகளைக் கண்டறிந்து அவற்றைச்  சரியான முறையில் பயன்படுத்தி வெற்றி ஈட்டுவதற்கான திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். அதற்கான பயிற்சியை இளைஞர்கள் மேற்கொள்ள வேண்டும்.
திறன்களைக் கற்றல்: 21ஆம் நூற்றாண்டில் நம்மைச் சுற்றி நடக்கும் விஷயங்களிலிருந்து தரவுகளை ஒருங்கிணைத்து புரிந்து கொள்ள வேண்டியது மிக அவசியமானதாக மாறிவிட்டது. இதற்காக முக்கியமான திறன்களை வளர்த்துக் கொள்வதும், கற்றுக் கொள்வதும் அவசியம். அதை சுருக்கமாக 4-சி என்று ஆராய்ச்சியாளர்கள் அழைக்கின்றனர். கிரிட்டிகல் திங்கிங் , கிரியேட்டிவிட்டி, கொலாப்ரேஷன், கம்யூனிகேஷன் ஆகிய நான்கையும் தான் 4சி என்று சுருக்கமாக அழைக்கின்றனர்.
கிரிட்டிகல்  திங்கிங்: நம்மிடம் இருக்கும் தரவுகளை, வெளியில் இருக்கும் தரவுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து அதில் சிறப்பானது எவையோ அவற்றைத் தேர்வு செய்ய வேண்டும். ஓர்  இலக்கை நிர்ணயித்து அதற்கான வழிகளைத் தேர்வு செய்து பல்வேறு கண்ணோட்டங்களுடன் அதை அணுகி செயல்படுத்த வேண்டும். இத்தகைய திறன் உடையவர்கள் ஒரு பிரச்னை குறித்து விவாதங்களை மேற்கொண்டு, முந்தைய காலகட்டத்தில் அந்தப் பிரச்னைக்குக் கிடைத்த தீர்வுகளையும் யோசித்து, இன்றைய காலகட்டத்திற்குப் பொருத்தமான புதுவிதமான தீர்வினை அளிப்பார்கள்.
கிரியேட்டிவிட்டி: ஒரு பிரச்னைக்கு ஏற்கெனவே உள்ள தீர்வைத் தாண்டி, புதுவிதமான தீர்வினை, இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தரவுகளைச் சேகரித்து உருவாக்குவதுதான் படைப்புத்திறன் (கிரியேட்டிவிட்டி) எனப்படுகிறது. இத்தகைய கிரியேட்டிவிட்டி உள்ளவர்கள் வித்தியாசமாகச் செயல்பட்டு அனைவரின் கவனத்தையும் பெறமுடியும் என்பதுடன் வெற்றியையும் ஈட்ட முடியும். இந்த உலகத்தில் மறைந்து கிடக்கும் எண்ணற்ற ஆற்றல்களைத் தங்களின் படைப்புத்திறனால் வெளிக்கொணர்ந்து இவர்கள் வெற்றியாளர்களாக திகழ்வார்கள்.
கொலாப்ரேஷன்: டீம் ஸ்பிரிட் ...டீம் ஒர்க் என்று சொல்வார்கள். கிரிக்கெட் போன்ற குழு விளையாட்டு
களில் முழு குழுவும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே வெற்றி சாத்தியம். அதுபோல்  ஓர் இலக்கை நோக்கி பயணப்படுவதற்கு பலர் தயாராக இருக்கும் சூழலில் அத்தனை பேரும் ஒருங்கிணைந்து கருத்துகளைப் பரிமாறி, தரவுகளை உள்வாங்கி, தகவல்களை வெளிப்படுத்தி செயல்படுத்தினால் மட்டுமே வெற்றிக்கனியை எட்ட முடியும். குழு செயல்பாடுகளில் தனிநபர்களின் சொந்த விருப்பு ,வெறுப்புகள் இடம் பெறாமல் பாதுகாத்துக் கொள்ளப்பட வேண்டும் என்பது கொலாப்ரேஷனில் அதாவது  ஒருங்கிணைந்து செயல்படுதலில் மரபுரீதியான விதியாகப் பின்பற்றப்பட வேண்டியது அவசியம்.
கம்யூனிகேஷன்: உலகத்தின் ஓர் இடத்தில் இருப்பவர் இன்னோர் இடத்தில் இருப்பவருடன் தொடர்பு கொண்டு தகவல்களைப் பரிமாறி கொள்வது மிக எளிதான விஷயமாக மாறிவிட்டது. இத்தகைய தகவல் தொடர்பு இல்லாத நிலையை கற்பனை செய்து கூட பார்க்க முடியாத காலகட்டம் இது. இத்தகைய தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை கற்று அதன் நுண்ணிய திறன்களையும் கையாண்டால் நமது வெற்றியை யாராலும் தட்டிப் பறிக்க முடியாது. ஒரு தனி மனிதன் தனது எண்ணங்கள், கருத்துகள், சிந்தனைகள் போன்றவற்றை சமூகத்தின் பார்வைக்கு எழுத்து வடிவிலோ, பேச்சு வடிவிலோ தெரிவித்து தனது திறமைகளை வெளிப்படுத்த முடியும்.
உலகளாவிய வலைப்பின்னல்: தகவல் தொடர்பு மற்றும் ஒருங்கிணைந்து செயல்படுதல் ஆகிய இரண்டு திறன்களுமே ஒரு சிறிய குழுவிற்கு மட்டுமோ அல்லது ஒரு நகரத்திற்குள் மட்டுமோ அல்லது ஒரு நாட்டிற்குள் மட்டுமோதான் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற அவசியமில்லை. நாடு தாண்டி உலகம் முழுவதும் இந்த இரண்டு திறன்களும் அவசியமாக மாறிவிட்டன. நமது திறன் மூலம் வெளிப்படும் விஷயங்களை உலகம் முழுவதும் தெரிவித்து அங்கு உள்ளவர்களும் அவற்றைப் பயன்படுத்த வழி செய்ய முடியும். மேலும் அங்கு உள்ளவர்களின் திறன்களின் மூலம் பெறப்பட்ட விஷயங்களை நாம் பயன்படுத்திக் கொள்ள முடியும். மிகப்பெரும் அளவில் வணிகம் செய்ய விரும்புபவர்கள், பெரு நிறுவனங்களைத் தொடங்க ஆர்வம் உள்ளவர்கள், தங்களின் உற்பத்தியை உலகச் சந்தையில் விற்க நினைப்பவர்கள் என அனைவருக்குமே இந்த உலகளாவிய வலைப்பின்னல் மிக அவசியம்.  
தொழில்நுட்பத் திறன்: பொறியியல் கல்வி கற்றவர்கள் கூட தொழில்நுட்பத் திறனை பெற்று இருப்பதில்லை. "கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள். கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்' என்று சொல்வார்கள். அது போல் மாறி வரும் காலச் சூழலுக்கு ஏற்ப நாள்தோறும் மேம்பட்டு வரும் தொழில்நுட்ப திறன்களை அறிந்து கொண்டு செயல்பட வேண்டியது 21 - ஆம் நூற்றாண்டில் அவசியமான ஒன்றாகும். கல்லூரிப் படிப்பு முடிந்து வெளிவரும் மாணவர்களிடம் இருக்க வேண்டிய முக்கியமான விஷயமே தொழில்நுட்பத் திறன் தான். அத்தகைய திறன் கொண்டவர்களைத் தான் இன்றைய உலகம் எதிர்பார்த்து காத்திருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.