முதல் மருத்துவப் பரிசோதனை ரோபோ!
கரோனா தொற்று பரவத் தொடங்கி ஓராண்டு ஆகியும், முழுவதும் தடுக்க முடியாமல் ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் ஆகியோர் உயிரைப் பணயம் வைத்து அச்சத்துடன் பணியாற்றி வருகின்றனர்.
கரோனா தொற்று பரவத் தொடங்கி ஓராண்டு ஆகியும், முழுவதும் தடுக்க முடியாமல் ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் ஆகியோர் உயிரைப் பணயம் வைத்து அச்சத்துடன் பணியாற்றி வருகின்றனர். அதில், பலரும் தங்களது உயிரைத் தியாகம் செய்து நோயாளிகளைக் காப்பாற்றியும் வருகின்றனர். முன்களப் பணியாளர்களின் சேவை இல்லை என்றால் உலகில் மனித இனத்தை கரோனா அழித்து இருக்கும் என்றேகூறலாம்.
எனினும், கரோனா தொற்று தொடங்கியதில் இருந்தே, நோயாளிகளிடம் சென்று பொருள்களை வழங்க, வளர்ந்த நாடுகள் ரோபோக்களைப் பயன்படுத்தின. சில நாடுகள் தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்தி தொற்று பாதித்தவர்களின் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிய செயலிகளை அறிமுகம் செய்தன.
ஆனாலும், தினம்தோறும் தொற்று உள்ளவர்களுடன் நேரடி தொடர்பில் இருக்கும் மருத்துவப் பணியாளர்களுக்கு முகக்கவசம், முழு தடுப்பு உடை ஆகியவை மட்டுமே பாதுகாப்பு அரணாக உள்ளன.
இந்நிலையில் கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட எகிப்து நாட்டில் கரோனா நோயாளிகளுக்கு அனைத்துவிதமான பரிசோதனைகளையும் மேற்கொள்ளும் ரோபோ ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
26 வயதான பொறியாளர் முகமது எல் கோமி என்பவர் அந்நாட்டு அரசு உதவியுடன் "சிரா-03' என்ற இந்த ரோபோவைத் தயாரித்துள்ளார். கரோனாவுக்கான "ஸ்வாப்' பரிசோதனை, உடல் வெப்ப அளவு, ரத்தப் பரிசோதனை, இசிஜி, அல்ட்ரா சவுண்ட், எக்ஸ் ரே ஆகிய பரிசோதனைகளை நோயாளிகளைத் தேடிச் சென்று மேற்கொள்கிறது இந்த ரோபோ.
பரிசோதனை முடிவுகளை ரோபோவின் உடல் பகுதியில் இணைக்கப்பட்டுள்ள திரையில் பார்த்து விடலாம். சுமார் 10 மருத்துவப் பணியாளர்கள் மேற்கொள்ள வேண்டிய பரிசோதனைகளை ஒரே ரோபோ செய்துவிடுவதால் தொற்று பரவல் தடுக்கப்படுகிறது. முகக்கவசம் அணியாதவர்களையும் சிரா-3 எச்சரிக்கிறது.
""ரிமோட் மூலம் உலகின் எந்த மூலையில் இருந்தும் இந்த ரோபோவை இயக்கலாம்'' என்கிறார் முகமது எல் கோமி. எக்ஸ் ரே, ரத்த மாதிரி பரிசோதனைகளை மனிதர்களை விட மிகத் துல்லியமாக மேற்கொள்ளும் "சிரா-03'தான் உலகின் முதல் மருத்துவப் பரிசோதனை ரோபோவாகும். வெறும் இயந்திரங்களைக் கண்டு மனிதர்கள் பயந்துவிடக்கூடாது என்பதற்காகதான் முகம், கைகளை வைத்து மனிதர்களைப் போல் சிரா-3 உருவாக்கப்பட்டது என்றும் சோதனை முடிந்ததும் விரைவில் இது எகிப்து முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் பணியில் ஈடுபடுத்தப்படும் என்றும் முகமது எல் கோமி நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்.