சுமார் ஒரு கோடி மக்கள்தொகையே கொண்ட சின்னஞ்சிறிய நாடான ஐக்கிய அரபு அமீரகத்தின் (யுஏஇ) "செவ்வாய் கனவு' உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. எண்ணெய் வளம் மிகுந்த யுஏஇ, விஞ்ஞானத்தில் சாதிக்க வேண்டும் என விரும்பியதில் ஆச்சரியம் இல்லை. ஆனால், அதையும் அறிவுப் பொருளாதாரமாக அந்த நாடு பார்ப்பதுதான் வியப்பானது.
செவ்வாய்க் கிரகத்துக்கு விண்கலத்தை அனுப்பவேண்டும் என யுஏஇ 2014-இல் முடிவு செய்தபோது, அறிவியலுக்கு என துறையோ, விண்வெளி ஆய்வு மையமோ, ஓர் அமைச்சரோ கூட அந்த நாட்டில் கிடையாது. ஆனால், ஆறே ஆண்டுகளில் அத்தனையையும் உருவாக்கி, செவ்வாய் கிரகத்துக்கு அனுப்புவதற்கான "ஹோப்' (நம்பிக்கை) என்ற ஆர்பிட்டரையும் தயாரித்து நம்பிக்கை அளிக்கிறது யுஏஇ.
இந்த "செவ்வாய் திட்டத்துக்காக' அமெரிக்காவில் உள்ள கொலராடோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஓர் ஆய்வகத்துடன் யுஏஇ ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கிறது. அதன் துணையுடன் துபையில் உள்ள முகமது பின் ரஷீத் விண்வெளி ஆய்வு நிலையத்தில் உருவாகியுள்ளது ஹோப் ஆர்பிட்டர். ஜப்பானில் உள்ள தானேஹசிமா என்கிற தீவிலிருந்து இந்த ஆர்பிட்டர் ராக்கெட் மூலம் ஏவப்படவுள்ளது.
ஹோப் என்ன செய்யும்?
2021, பிப்ரவரி மாதம் செவ்வாய்க் கிரகத்தை அடைந்து, அதன் பூமத்திய ரேகைக்கு மேல் சுற்றவுள்ளது ஹோப் ஆர்பிட்டர். அங்கு ஒரு செவ்வாய் ஆண்டு (சுமார் இரு பூமி ஆண்டுகள்) சுற்றிவந்து செவ்வாயின் காலநிலை மாற்றத்தை முழுமையாகப் புகைப்படமாகப் பதிவு செய்யும். ஏற்கெனவே நாசாவின் "மேவன்' விண்கலம் செவ்வாயில் இதேபோன்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், காலநிலை மாற்றத்திலும், வளிமண்டல இழப்பிலும் செவ்வாய் தன்னைத்தானே எவ்வாறு மாற்றிக்கொள்கிறது என்பது குறித்து ஹோப் ஆர்பிட்டர் ஆராயும்.
"முதலில் இந்தத் திட்டத்துக்காக இளம் பொறியாளர்களைப் பணிக்கு அமர்த்தியபோது, இவர்களை வைத்துக்கொண்டு எவ்வாறு செவ்வாய்க்கு ஆர்பிட்டரை அனுப்ப முடியும்' என வழக்கமான கேள்விகளை எதிர்கொண்டோம். ஆனால், இப்போது அந்த நம்பிக்கை வந்துள்ளது' என்கிறார் திட்டத்தின் தலைமை விஞ்ஞானிகளில் ஒருவரான சாரா அல் அமிரி. இவர் அந்நாட்டின் விஞ்ஞானத் துறை அமைச்சராகவும் உள்ளார்.
அறிவுப் பொருளாதாரம்
எண்ணெய் உற்பத்தியில் முன்னணி வகிக்கும் யுஏஇ, எண்ணெய்ப் பொருளாதாரத்தைத் தாண்டிய ஒரு விஷயத்தை நீண்டகாலமாகவே திட்டமிட்டு வந்தது. அது அறிவியல் துறைதான் எனக் கண்டறிந்து அதற்கான பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. "மிகப்பெரிய குறிக்கோள்களுக்கான கருவி விண்வெளி என்பதில் யுஏஇ தெளிவாக உள்ளது. நாட்டின் பொருளாதாரத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைக்கும் அமைப்பில் மிகப்பெரிய மாற்றத்தை இது ஏற்படுத்தும்' என்கிறார் செவ்வாய் கிரக திட்டத்தின் தலைவர்களில் ஒருவரான உம்ரான் ஷரஃப்.
அடிப்படை அறிவியல் ஆராய்ச்சி, பட்டப் படிப்புகளை ஊக்குவிப்பதன் மூலமும், அரபு நாடுகள் முழுவதும் உள்ள இளைஞர்களை ஊக்குவிப்பதன் மூலமும் செவ்வாய் கிரக திட்டத்தை ஓர் அறிவுப் பொருளாதாரமாக மாற்றுவதைத் துரிதப்படுத்த முடியும் என நம்புகிறது யுஏஇ. "செவ்வாய் கிரகத்தை அடைவது இங்கு முக்கியம் இல்லை. நமது அறிவுப் பொருளாதாரத்தை மேலும் புதுமையானதாக, ஆக்கபூர்வமானதாக, போட்டித்தன்மையுடையதாக ஆக்குவதன் மூலம் பலப்படுத்த முடியும்' என நோக்கத்தைத் தெளிவாக விளக்குகிறார் உம்ரான் ஷரஃப்.
இதற்கேற்ப யுஏஇ-யில் உள்ள முன்னணி பல்கலைக்கழகங்கள் கடந்த சில ஆண்டுகளில் வானியல், இயற்பியல் மற்றும் பிற அடிப்படை அறிவியலில் புதிய பட்டப் படிப்புகளைத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அறிவியல்தான் எதிர்கால நம்பிக்கையின் ஆதாரம். அதன்மூலம் நாட்டுக்கும், உலகிற்கும் சேவையாற்றுவது மட்டுமன்றி, எண்ணற்ற வேலை வாய்ப்புகளையும் உருவாக்க முடியும் என முதல் அரபு தேசமாக கண்டறிந்துள்ளது ஐக்கிய அரபு அமீரகம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.