குறைந்த விலையில் ஆக்சிஜன் உருவாக்கி!
கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே போகிறது.
கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே போகிறது. மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றுவது மிகப் பெரிய பிரச்னையாக உருவெடுத்து உள்ளது.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. மூச்சுத் திணறல் அதிகமாகும்போது அவர்களுக்கு உடனடியாக சுவாசக் கருவிகளின் மூலம் ஆக்சிஜன் அளிக்கப்பட வேண்டும்.
உலகெங்கும், நாடெங்கும், கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில், ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு பற்றாக்குறை ஏற்படுகிறது. மேலும் கரோனா பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் ஆக்சிஜன் சிலிண்டர்களைத் தயாரிப்பது மட்டுமல்ல, அவற்றை உரிய நேரத்தில் தேவைப்படும் பகுதிகளுக்கு கொண்டு சேர்ப்பதும் கடினமாக இருக்கிறது.
இவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டு பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்தைச் சேர்ந்தIndian Institute of Science (IISc) பேராசிரியர் பிரவீண் ராமமூர்த்தியின் தலைமையிலான குழு, குறைந்த விலையிலான"ஆக்சிஜன் உருவாக்கி' களை (OXYGENGENERATORS) உருவாக்கியுள்ளது.
இது குறித்து பேராசிரியர் பிரவீண் ராமமூர்த்தி கூறியதிலிருந்து...
""மருத்துவமனைகளில் ஆக்சிஜன் அதிகம் தேவைப்படும் காலம் இது. ஆக்சிஜனை மருத்துவமனைகளுக்கு வழங்குபவை ஆக்சிஜன் சிலிண்டர்கள். அவற்றின் பற்றாக்குறை ஒருபுறம் இருக்க, நகரத்திலிருந்து வெகு தொலைவில் உள்ள பகுதிகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்களை உரிய நேரத்தில், தேவைப்படும் அளவுக்குக் கொண்டு செல்வது இன்றைய கரோனா காலத்தில் மிக மிக கடினம்.
ஆக்சிஜன் சிலிண்டர்கள் தவிர, நோயாளிகளுக்கு ஆக்சிஜனைத் தருபவை ஆக்சிஜன் உருவாக்கிகள். நடைமுறையில் உள்ள ஆக்சிஜன் உருவாக்கிகளின் விலை ரூ.40 ஆயிரத்திலிருந்து ரூ.1 லட்சம் வரை உள்ளது. நிறைய "ஆக்சிஜன் உருவாக்கிகள்' தேவைப்படும் இக்காலத்தில் அவ்வளவு விலை கொடுத்து அவற்றை வாங்கிப் பயன்படுத்துவது தனியார் மருத்துவமனைகளுக்கு மட்டுமல்ல, அரசு மருத்துவமனைக்கே மிகவும் சிரமம்.
நடைமுறையில் உள்ள இந்த ஆக்சிஜன் உருவாக்கிகள் மின்சாரத்தால் செயல்படுகின்றன. மின் இணைப்பு இல்லாத இடங்களில் அல்லது மின்சாரம் தடைபடுகிறபோது அவை செயல்படுவதில் பிரச்னைகள் ஏற்படுகின்றன. எல்லா மருத்துவமனைகளிலும் தேவையான அளவுக்கு இன்வெர்ட்டர்கள் இருக்கும் என்று கூற முடியாது.
மேலும் ஏற்கெனவே உள்ள ஆக்சிஜன் உருவாக்கிகளை ஏதேனும் ஓர் இடத்தில் பொருத்த வேண்டும். தேவைப்படும் இடங்களுக்கு எல்லாம் எடுத்துச் செல்ல முடியாது. நகர்ப்புறங்களைத் தாண்டி வெகு தொலைவில் உள்ள சிற்றூர்களில் உள்ள மருத்துவமனைகளில் இந்த ஆக்சிஜன் உருவாக்கியை எடுத்துச் சென்று பொருத்துவதும் கடினமான செயல்.
இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு நான் மற்றும் டாக்டர் அருண் ராவ், டாக்டர் கே.பாஸ்கர் ஆகியோர் அடங்கிய குழு குறைந்த விலையிலான - எந்த இடத்துக்கும் எடுத்துச் செல்லக் கூடிய - ஆக்சிஜன் உருவாக்கியை வடிவமைத்துள்ளோம்.
நாங்கள் உருவாக்கியுள்ள இந்த ஆக்சிஜன் உருவாக்கி இயங்கும் முறை மிகவும் எளிமையானது.
நம் சுற்றுப்புறத்தில் உள்ள காற்றில் 78.09 சதவீதம் நைட்ரஜன் உள்ளது. ஆக்சிஜன் 20.95 சதவீதம் உள்ளது. சுற்றுப்புறத்தில் உள்ள காற்றிலிருந்து இந்த 78.9 சதவீத நைட்ரஜனைத் தனியாகப் பிரித்துவிட்டால், காற்று முழுக்க ஆக்சிஜன் மட்டுமே நிறைந்திருக்கும். இந்த அடிப்படையில்தான் நாங்கள் இந்த ஆக்சிஜன் உருவாக்கியை வடிமைத்திருக்கிறோம்.
கரோனா காலத்தின் ஊரடங்கு உத்தரவால் நடைமுறை வாழ்க்கை தேக்கமடைந்திருக்கிறது. இந்த ஆக்சிஜன் உருவாக்கியை வடிவமைக்கத் தேவைப்படும் பொருள்களை எங்கே சென்று வாங்குவது? மேலும் ஏற்கெனவே இல்லாத மாதிரி புதிய பொருள்களைக் கொண்டு இந்தக் கருவியை உருவாக்கினால்... ஒன்று நீண்ட காலம் பிடிக்கும். இன்னொன்று அதற்கான மூலப் பொருள்கள் கிடைக்காது.
அதனால் ஏற்கெனவே உள்ள வேறு பயன்பாட்டுக்குரிய பொருள்களைக் கொண்டு இந்த ஆக்சிஜன் உருவாக்கியைத் தயாரித்திருக்கிறோம். நீரை வடிகட்டித் தூய்மைப்படுத்தும் கருவிகள் எல்லா வீடுகளிலும் உள்ளன. அந்தக் கருவிகளுக்கான உதிரி பாகங்கள் ஏற்கெனவே தயாரிக்கப்பட்டு எல்லா இடங்களிலும் எளிதாகக் கிடைக்கும் வகையில் உள்ளன. அவற்றைப் பயன்படுத்தி நாங்கள் இந்த ஆக்சிஜன் உருவாக்கியைத் தயாரித்திருக்கிறோம்.
சுற்றுப்புறத்தில் உள்ள காற்றை அழுத்தம் கொடுத்து இந்தக் கருவிக்குள் அனுப்புகிறோம். இந்தக் கருவியில் உள்ள ஜியோலைட் என்ற நைட்ரஜனை உறிஞ்சும் கனிமப் பொருளின் வழியாகக் காற்று அழுத்தத்துடன் செலுத்தப்படுகிறது. அவ்வாறு செலுத்தும்போது காற்றில் உள்ள நைட்ரஜன் வடிகட்டப்பட்டு, ஆக்சிஜன் நிரம்பிய காற்று மட்டும் வெளி வருகிறது.
இந்த ஆக்சிஜன் நிரம்பிய காற்றை சுவாசக் கருவிகளின் மூலமாகவோ, வென்டிலேட்டர்களின் மூலமாகவோ பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்குப் பயன்படுத்த முடியும்.
ஜியோலைட்டிலிருந்து ஆக்ஜிசன் நிரம்பிய காற்று வெளியேறுவதால் அந்த இடத்தில் வெற்றிடம் ஏற்படுகிறது. அந்த வெற்றிடத்தை நிரப்ப வெளிக்காற்று உள்ளே நுழைகிறது. நைட்ரஜன் அந்தக் காற்றுடன் கலந்து சுற்றுப்புறத்துக்கு கேடு ஏற்படுத்தாத அளவில் வெளிக்காற்றுடன் மீண்டும் கலக்கிறது.
ஒரு குறிப்பிட்ட நோயாளிக்கு தேவைப்படும் காற்றில் கலந்துள்ள ஆக்சிஜனின் அளவு, இன்னொரு நோயாளிக்கு அவருடைய உடல்நிலையின் தன்மையைப் பொருத்து அதிகமாகவோ, குறைவாகவோ இருக்கக் கூடும். எனவே ஒவ்வொரு நோயாளிக்கும் சுவாசிக்கும் காற்றில் எந்த அளவுக்கு ஆக்சிஜன் கலந்திருக்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொண்டு அந்த அளவுக்கு மட்டுமே ஆக்சிஜனைத் தர வேண்டும்.
நோயாளிக்கு மருத்துவம் செய்யும் மருத்துவரோ, மருத்துவப் பணியாளரோ ஒவ்வொரு நோயாளிக்கும் தர வேண்டிய ஆக்சிஜனின் அளவைக் கூட்டியோ குறைத்தோ தரும்விதமாக இக்கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கென சென்சார்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த ஆக்சிஜன் உருவாக்கியை அதிக அளவில் தயாரிக்கும்போது இன்னும் குறைந்த விலையில் தயாரிக்க முடியும் எனக் கருதுகிறோம்'' என்றார்.