முகப்பு
இளைஞர்மணி

புகைப்படமெடுக்க சிறந்த இடங்கள்!

அலைபேசிகளில் புகைப்படம் எடுத்துக் கொள்வதற்கான வசதிகள் வந்த பின்பு, சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை தங்கள் விருப்பம் போல் பலவிதமான புகைப்படங்களை எடுத்துக் கொண்டு, அதனைப் பல்வேறு சமூக

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:59 PM
பகிர்:


அலைபேசிகளில் புகைப்படம் எடுத்துக் கொள்வதற்கான வசதிகள் வந்த பின்பு, சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை தங்கள் விருப்பம் போல் பலவிதமான புகைப்படங்களை எடுத்துக் கொண்டு, அதனைப் பல்வேறு சமூக வலைதளங்களிலும் பகிர்ந்து மகிழ்ச்சியடைகின்றனர். 

இன்று புகைப்படக்கலை எளிமையாகி விட்டது என்றாலும், புகைப்படங்களை மிகச்சிறப்பாக எடுப்பதென்பது தனிக்கலையாக இன்னும் தொடரத்தான் செய்கிறது. புகைப்படமெடுப்பதற்கு ஏற்ற இடங்களைத் தேர்வு செய்தல், புகைப்படம் எடுப்பதற்கான கோணங்கள் மற்றும் ஒளி அளவீடுகளை மதிப்பிடுதல், தேவைக்கேற்றபடி புகைப்படக் கருவியின் வசதிகளைப் பயன்படுத்துதல், புகைப்படத்தை மேலும் சிறப்பாக்கிட தேவையான கற்பனைத்திறன் கொண்டிருத்தல் என்று புகைப்படமெடுப்பதற்கான தனித்திறன்கள் எத்தனையோ இருக்கின்றன. 

இந்தத் தனித்திறன்களில், புகைப்படமெடுப்பதற்கான சிறந்த இடங்களைத் தேர்வு செய்வது என்பது முதன்மையானதாக இருக்கிறது. இதனைக் கருத்தில் கொண்டு, உலகில் புகைப்படமெடுக்கச் சிறந்த இடங்களைக் கண்டறிவதற்கான வசதிகளுடன் ஓர் இணையதளம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 

இந்த இணையதளத்தில், உலகின் பல்வேறு நாடுகளில் இருக்கும் புகைப்பட மெடுப்பதற்கேற்ற மிகச்சிறந்த இடங்களும், அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களும் நாடுகள் வாரியாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு நாட்டிலும் புகைப்படமெடுப்பதற்கேற்ற இடங்கள் மற்றும் அவற்றின் எண்ணிக்கை, அந்த இடங்களில் எடுக்கப்பட்ட புகைப்படக் காட்சிகள் மற்றும் எண்ணிக்கை, நிகழ்வுகள், புகைப்படக்கலைஞர்கள், அவர்கள் பதிவேற்றிய புகைப்படங்கள் மற்றும் எண்ணிக்கை என்று சில தலைப்புகள் இடம் பெற்றிருக்கின்றன. 

இந்தத் தலைப்புகளில் சொடுக்கினால், தலைப்பிற்கேற்ற புகைப்படங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடையதான பயணம், அங்கு நடைபெறும் விழாக்கள், அந்த நாட்டினைப் பற்றி அறிந்து கொள்வதற்கான இணையதள முகவரிகள் போன்றவையும் தரப்பட்டிருக்கின்றன. 

இதே போன்று, ஒவ்வொரு நாட்டிற்கும் ஏற்ற வழிகாட்டிகள், ஆராய்தல், உதவி உள்ளிட்ட சில தலைப்புகள் இடம் பெற்றிருக்கின்றன. ஆராய்தல் எனும் தலைப்பில் காட்சியகம், நாட்டு வரைபடம், இடங்கள், நிகழ்வுகள், படங்கள், சமூகம், பாணிகள் என்று சில உள்தலைப்புகளும் இடம் பெற்றிருக்கின்றன. இந்தத் தலைப்புகளில் சொடுக்கினால், தலைப்புடன் தொடர்புடைய படக்காட்சிகள் மற்றும் அதற்குரிய இடங்கள், புகைப்படங்கள், நிகழ்வுகள் போன்றவைகளும் கிடைக்கின்றன. 

இத்தளத்தின் முகப்புப் பக்கத்தின் கீழ்பகுதியில் சிறப்புக்கூறுகள் எனும் தலைப்பின் கீழ் புகைப்படமெடுப்பதற்கான இடங்களைத் தேடுதல், சிறந்த நேரம், பருவகாலங்கள் மற்றும் நிலைமைகள், வரைபடங்களைப் பயன்படுத்துதல், சரியான இடங்கள் மற்றும் வாகன நிறுத்தங்கள், உத்வேகம் தரும் புகைப்படங்களுக்கான இடங்கள், பிடித்த இடங்களைச் சேமித்தல், வானிலைத் தகவல்கள், உள்ளூர் உதவிக் குறிப்புகள், படைப்புகள் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகள் போன்ற தலைப்புகளிலும் குறிப்புகள் தரப்பட்டிருக்கின்றன. 

புகைப்படக்கலையில் ஆர்வமுடைய இளைஞர்கள், பல்வேறு நாடுகளில் எடுக்கப்பெற்று இங்கு காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் படங்கள் மற்றும் அதற்கான குறிப்புகளைப் பயன்படுத்தித் தாங்களும் புகைப்படமெடுப்பதற்கான சிறந்த இடங்களைத் தேர்வு செய்து, சிறந்த புகைப்
படங்களை எடுப்பதுடன் இத்தளத்தில் பதிவேற்றிக் காட்சிப்படுத்தலாம், இங்கிருக்கும் புகைப்படக்காரர்களில் ஒருவராக இணைந்து கொள்ளலாம். 

இத்தளத்திற்குச் செல்ல விரும்பும் அனைவரும் https://www.photohound.co/ எனும் இணைய முகவரியினைப் பயன்படுத்தலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.