உலக அளவில் அண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வில், கரோனா பெருந்தொற்றால் மூடப்பட்ட அல்லது தொலைந்துபோன தொழில்களால் வேலைவாய்ப்பை இழந்தவர்கள், புதிய துறைகளில் வேலைவாய்ப்பை பெற ஆர்வம் காட்டுவதாக தெரியவந்துள்ளது. இதுவரை பணியாற்றிய துறையில் வேலைவாய்ப்பு கிடைக்காவிட்டால், புதிய துறைசார்ந்த வேலையை தேர்ந்தெடுப்பதுதான் சரியான முடிவாக இருக்கும். மாற்றுத்துறைசார்ந்த வேலைக்கு நம்மை தயார்ப்படுத்திக் கொள்ளத் தவறுவது புத்திசாலித்தனமான அணுகுமுறையாக இருக்காது.
புதிய துறைசார்ந்த வேலையைத் தேர்ந்தெடுக்க முடிவெடுத்தால், அதற்கான வாய்ப்புகளை எப்படிக் கண்டறிவது? அதற்கும் வழியிருக்கிறது. ஆனால் புதிய
துறைசார்ந்த வேலை மாற்றங்களுக்கு தயார்ப்படுத்திக் கொண்டு, வேலைவேட்டையில் இறங்க சில அணுகுமுறைகளைக் கையாள வேண்டும்.
அதற்கான வழிமுறைகள் இதோ....
முன்முயற்சி அல்லது ஆய்வு: கரோனா பெருந்தொற்றின் இக்கட்டான சூழலிலும் தப்பித்துக் கொண்டஅல்லது மறுமலர்ச்சி பெற்றுள்ள தொழில்துறைகள் எவை என்பதை ஆராய்ந்து அறியுங்கள். புதிய வேலைவாய்ப்புகளை வழங்கும் நிறுவனங்கள் எவை? அவை அளிக்கும் வேலைவாய்ப்புகள் எவை? அதற்கு தேவைப்படும் திறன்கள் எவை? அந்தவேலைக்கு தகுந்த தொழில்திறன் உங்களிடம் இருக்கிறதா? என்பதை ஆராயுங்கள்.
அடுத்த எந்த துறையில் என்ன வேலையை தேர்ந்தெடுப்பது என்பதை முடிவு செய்வதற்கு கொஞ்சம் கால அவகாசம் எடுத்துக்கொள்ளுங்கள். அவசரகதியில் எந்த முடிவுக்கும் வந்துவிடாதீர்கள். தீர ஆராய்ந்த பிறகு, தக்க முடிவெடுங்கள்.
வேலைக்கு ஆள் எடுக்கும் நிறுவனங்களின் அணுகுமுறையும் மாறி இருக்கிறது. சமூகபராமரிப்புத்துறை சார்ந்த வேலைகளுக்கு வேலையிழந்த விருந்தோம்பல்துறை சார்ந்த வேலையாட்களை வேலைக்கு அமர்த்தும்போக்கு உள்ளது.
அதாவது, அதே துறையில் வேலை செய்தவர்களை காட்டிலும், வேறுதுறையில் வேலைசெய்தவர்களை வேலைக்கு எடுத்துக்கொள்கிறார்கள். வேறுதிறன்களை பயன்படுத்திக்கொள்ளும் போக்கு அதிகரித்து வருகிறது.
தொடர்பு வட்டம்: தொழில்சார்ந்த சந்திப்புகள் பல புதிய தொடர்புகளை, புதிய அறிமுகங்களை ஏற்படுத்திக் கொள்வதற்கு வசதியாக இருந்தது. கரோனா பெருந்தொற்று அதற்கு இடையூறாக இருந்தாலும், புதிய தொடர்புகளை அல்லது அறிமுகங்களை ஏற்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புகளை அடைத்துவிடவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
பழைய தொடர்புகளோடு இணைந்திருங்கள், இணையவழியில் நடக்கும் முறைசாரா நேர்காணல்கள் அல்லது மெய்ந்நிகர் வேலைவாய்ப்பு முகாம்களில் கலந்து கொள்ளுங்கள். இது புதிய சந்திப்புகளுக்கும், புதிய அறிமுகங்களுக்கும் வழிவகுக்கும்.
இந்த தொடர்புகள் அல்லது அறிமுகங்கள் வழியாகதான் எந்தெந்த நிறுவனங்களில் புதிய வேலைவாய்ப்புகள் உள்ளன? என்பன போன்ற விவரங்கள் தெரியவரும். சந்தைப்படுத்தல் வேலையை செய்துகொண்டிருந்தவர், கரோனா பெருந்தொற்று காலத்தில் வேலையை இழந்துவிட்டார்.எதுவும் செய்யாமல் சோம்பிக் கிடக்காமல் புகைப்படக்கலைஞராக மாறிவிட்டார்.தொடக்கத்தில் எல்லாருக்கும் இலவசமாகப் புகைப்படங்களை எடுத்துக் கொடுத்து வந்துள்ளார். அவர் எடுத்த புகைப்படங்கள் நன்றாக இருக்கவே, அந்த அறிமுகங்கள் வழியாக ஏராளமான புகைப்பட வாய்ப்புகள் கிடைத்துள்ளன.
இப்போது புதிய தொழில் வானில் சிறகடித்துப் பறந்து கொண்டு இருக்கிறார். அவரைப் போன்று தொடர்பு வட்டங்களை விரிவுப்படுத்திக்கொள்வது புதியவாய்ப்புகளைத் தேடுவதற்கு எளிய வாய்ப்பாக அமையும்.
பழைய தொழிலோடு தொடர்புடைய புதிய தொழில்: பழைய வேலையில் இருந்து புதிய வேலைக்கு செல்லும்போது, சில மனத்தடைகள் இருக்கும். அவற்றை உடைத்தெறிந்து புதியதை ஏற்பது பயனளிக்கும். ஏற்கெனவே செய்துவந்த வேலைக்குச் சம்பந்தம் இருக்கிறதா? என பார்க்கலாம்.
பழைய வாடிக்கையாளர்கள் அல்லது சம்பந்தப்பட்டவர்களை புதிய வேலையிலும் அணுகும் வாய்ப்புக் கிடைக்கலாம். பழைய வேலையில் பணி செய்த அதே பகுதியில் புதிய வேலை கிடைப்பது, எளிதில் பணியாற்றுவதற்கு உதவியாக இருக்கும்.
புதிய வேலையைத் தேடும்போது, பழைய வேலையில் அனுபவித்த சில வாய்ப்புகள் கிடைக்கின்றனவா? என்று ஆராயலாம். அப்படி வாய்த்தால், அது புதிய வேலையைச் செய்வதற்கு அனுகூலமாக இருக்கும்.
திறன் வளர்: புதிய வேலைகளைத் தேடுவதற்கு முன்பு அவற்றுக்குத் தேவையான திறன்கள் உங்களிடம் இருக்கின்றனவா? என்பதை ஆராயுங்கள். இல்லாவிட்டால் கவலை வேண்டாம். புதிய வேலைக்குத் தேவையான திறன்களை வளர்த்துக் கொள்ளுங்கள். மத்திய, மாநில அரசுகள் திறன்மேம்பாட்டுக்கு பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளன. அவற்றை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். பெரும்பாலான திறன் மேம்பாட்டு பயிற்சிகள் இலவசமாகவே கிடைக்கின்றன. பொறியியல், சுற்றுலா, சமூகபராமரிப்பு, இயற்கை பாதுகாப்பு, உணவு பதனிடுதல், நிதி என ஏராளமான தொழில்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகின்றன.
தன்விவரக் குறிப்பில் தக்கமாற்றம்: புதிய வேலைக்கு விண்ணப்பிக்கும்போது அளிக்கப்படும் தன்விவரக் குறிப்பில் தக்க மாற்றங்களைச் செய்துகொள்வது அவசியம். தன்விவரக் குறிப்பில் வழக்கமாக குறிப்பிடும் வாசகங்களை அப்படியே நகலெடுத்துப் பொறிக்காமல், உங்களது திறமைகளை வெளிப்படுத்தும் பல குறிப்புகளைத் தெரிவிக்க வேண்டும். தன்விவரக் குறிப்புகளை பழைய வாசகங்கள் இடம்பெற்றிருந்தால், அவற்றால் ஒரு நன்மையும் விளையாது. மாறாக, அவை குப்பைக் கூடைக்குச் சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. நேர்த்தியான அல்லது காலத்திற்கு ஏற்ற தன்விவரக் குறிப்புகளை எழுதுவதற்கு "டாப்சிவி' , "டோட்டல்ஜாப்ஸ்'போன்ற பல இணையதளங்கள் உதவி செய்கின்றன.
தயக்கம் வேண்டாம்: தன்விவரக் குறிப்புகளை எழுதும்போது, கடந்த ஓராண்டாக வேலை இல்லை என்பதை குறிப்பிட தயக்கம்வேண்டாம். கரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட நிலைமையை அனைவரும் அறிவார்கள் என்பதால், அதை பற்றி கவலைப்படாமல் தன்விவரக் குறிப்புகளை எழுதுங்கள். மேலும் கடந்த ஓராண்டுகாலத்தில் புதிய பயின்ற பயிற்சிகள் அல்லது பகுதி நேரமாக பணியாற்றிய வேலைகள் அல்லது படித்த வணிக புத்தகங்கள் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
தலைமைத்துவத்தை வெளிப்படுத்துங்கள்: வேலைக்கு ஆள் எடுக்கும் பல விளம்பரங்களில் தலைமைத்துவம் இருப்பவர்களைத் தேடுவதாக குறிப்பிடு கிறது. பயிற்சி அளித்தல், இணங்கிப் பழகுதல், முடிவெடுத்தல் போன்ற தலைமைத்துவத்தை விரும்புகிறார்கள். வேலை தேடி வந்திருக்கும் பெரும் கூட்டத்தில் உங்களைத் தனித்துவப்படுத்தி வெளிப்படுத்திக் கொள்ள தலைமைத்துவம் பேருதவியாக இருக்கும். நிறுவனத்தின் அதிகாரியாக இருந்துதான் தலைமைத்துவத்தை வெளிப்படுத்தி இருக்க வேண்டுமென்பதல்ல. தினசரிவாழ்க்கையில் அனைவரும் தலைமைத்துவப் பண்புகளைப் பயன்படுத்தி இருப்போம். அவற்றை உங்களுடைய தன்விவரக் குறிப்பில் குறிப்பிடுங்கள். இது உங்களின் மதிப்பை பன்மடங்கு உயர்த்தும்.
பயிற்றுவித்துக்கொள்ளுங்கள்:
புதியவேலைக்கு உங்களை தகவமைத்துக்கொள்வதற்கு முறையான பயிற்சி அவசியமாகும். அதற்காக உங்களை பயிற்றுவித்துக்கொள்ளுங்கள். தொழில்முறைவேலை பயிற்றுநர்கள் பலர் இருக்கிறார்கள் என்றாலும், இந்த சேவைகளை இலவசமாக அளிக்கும் நிறுவனங்களும் உள்ளன.இதுபோன்ற நிறுவனங்கள் தன்விவரக் குறிப்புகளை ஆராய்ந்து தக்க மாற்றங்களைத் தெரிவிக்கும். அதேபோல, தலைமைத்துவம் போன்ற பண்பியல்புகளை மேம்படுத்திக்கொள்ள ஆலோசனைகளை வழங்கும். கடந்த ஓராண்டாக வேலையில் இல்லாததால், புதிய வேலைக்கு செல்லும்போது கொஞ்சம் மனத்தயக்கம் இருக்கும். அவற்றில் இருந்துவிடுபட பயிற்றுநர்களின் ஆலோசனைகளைப் பெறுவது நல்லது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.