முகப்பு
இளைஞர்மணி

இணைய வெளியினிலே...

காயம் குறித்து கவலை கொள்ளவில்லை... கனி. சுவை குறித்துசொல்லவில்லை... கிளி.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:02 AM
பகிர்:


முக நூலிலிருந்து....


காயம் குறித்து கவலை கொள்ளவில்லை... கனி. சுவை குறித்து
சொல்லவில்லை... கிளி.

நா.வே.அருள்


பூங்கா  வரையப் போகிறேன் என்றாள் பேத்தி.
முதலில் செடி வரைவாயா? பூ வரைவாயா? 
என்றார் தாத்தா.
ஒரு  வண்ணத்துப்பூச்சியை வரைந்து காட்டினாள் பேத்தி.

நேசமிகு ராஜகுமாரன்

நானே பயந்தவன்... 
தனிமை, 
என்னிலும் பயந்ததுபோல..
அதனால்தான், 
அடிக்கடி என்னை அழைத்து தன்னுடன் வைத்துக்கொள்கிறது, மீண்டும்.

கவி வளநாடன்

முடிவுரைக்கு வந்த பிறகுதான் முன்னுரையே புரியுது...
திரும்ப வாசிக்கத்தான்  வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை-
வாழ்க்கை.

தமிழ் மணிமாறன்

சுட்டுரையிலிருந்து...

படிப்போ, சோறோ, பசியிருக்க  வேண்டும். 
இல்லாது போனால்,  ருசி இருக்காது.

முதியோன்

அன்பென்பது மனதினால் உணர்வதே தவிர, 
அறிவினால் ஆராய்வதல்ல.

யாழினி

சுதந்திர எண்ணங்களுக்கு சுய கட்டுப்பாடு இல்லையெனில்...
தவிக்கும் நிலை நிச்சயமே.

நவ்யா

வலைதளத்திலிருந்து...

ஒவ்வொரு தொழிலுக்கும் அதற்கான கருவி இருப்பது போல் எழுத்துக்கான கருவி மொழி. ஆனால் மொழியை அறிந்து, அது கை கூடி, அதில் தேர்ச்சி பெற்று அதை நன்றாகப் பயன்படுத்த வேண்டும் என்ற முனைப்பே இல்லாமல் ஆகிவிட்டது.
முயல் என்பதில் இருந்து வருபவை முயல்வது, முயல்வேன், முயல்கிறேன், முயன்றேன், முயற்சி என்பது போன்ற சொற்கள். இதிலிருந்து முயற்சியை எடுத்துக்கொண்டு முயற்சிப்பேன், முயற்சிக்கிறேன் என்று எழுதுவது அபத்தம். பயிற்சிக்கிறேன், தளர்ச்சிக்கிறேன் என்று எழுதுவது தவறாகத்தானே படுகிறது? அது போலத்தானே முயற்சிக்கிறேன் என்பதும்.
நெய் என்பது வேர்ச்சொல். எள்ளில் இருந்து எடுக்கப்படும் நெய் எள்நெய். அது எண்ணெய் என்றானது. அது பொதுப்பெயராகவும் ஆனது. எனவே தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் என வழங்கத் தொடங்கிவிட்டோம். ஆனால் இதை எண்ணை என்று எழுதுவது சரியா? எண்ணை எடு என்றால் ஒன்றை எடுக்கவா? இரண்டை எடுக்கவா? என எண்களில் ஒன்றை எடுக்கச் சொல்வது போல இருக்கிறது.
தேவையற்ற ஆங்கிலக் கலப்பு மற்றுமொரு குறை. ஆங்கிலச் சொல் ஒன்றை எழுதிப் பின் "பண்ணு' என்பது ஒரு வழக்காகவே ஆகிவிட்டது. வெயிட் பண்ணு, குக் பண்ணு, ரீச் பண்ணு, பே பண்ணு என்று ஒரு பண்ணு தமிழ் உருவாகி இருக்கிறது. எழுதிய பின் எங்கெல்லாம் "பண்ணு' என எழுதி இருக்கிறோம் எனப்பார்த்து அங்கெல்லாம் சரியான தமிழ்ச்சொல்லை எழுதுவது கடினமான வேலை இல்லை.
எழுத வருபவர்களுக்குச் சொல்ல ஆசைப்படுவது இதுதான்: பிழை இல்லாமல் எழுத வேண்டும் என்று முயற்சி செய்யுங்கள். எழுதியதைப் படித்துப் படித்து மேம்படுத்துங்கள். நல்ல எழுத்துகளைத் தேடிப் படியுங்கள். தவறுகளைச் சுட்டிக்காட்டினால் அதனைக் கேட்டு மீண்டும் அவற்றையே செய்யாதிருக்கப் பாருங்கள். மொழி உங்களுக்கான கருவி. அதனைத் திறம்படக் கையாளப் பழகுங்கள்.

http://elavasam.blogspot.com

முழு கட்டுரையைப் படிக்க →