உலக நாடுகள் எதிர்கொள்ளும் மிகப்பெரும் சவால்களில் ஒன்று வேலையில்லாத் திண்டாட்டம். அதிலும் இந்தியாவில் மக்கள்தொகை அதிகம் என்பதாலும், கரோனா பொதுமுடக்கத்தினாலும் வேலையின்மை விகிதம் அதிகரித்துக் காணப்படுகிறது.
முன்னொரு காலத்தில் படிப்பதே மிகப்பெரும் சவாலாக இருந்து வந்த நிலையில் இன்று கல்வித்துறையின் பன்மடங்கு வளர்ச்சியினால் அனைவருக்கும் எளிதான அடிப்படைக் கல்வியாவது கிடைத்துவிடுகிறது. ஆனால், நன்கு படித்து நல்ல மதிப்பெண்கள் பெற்றும், திறனை வளர்த்துக் கொண்டும் இருக்கின்ற பலருக்கு வேலை கிடைக்காத சூழ்நிலையே இன்று நிலவுகிறது.
பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் ஒரு முக்கிய காரணியாக இருப்பதால் வேலையின்மை என்பது உலக நாடுகள் எதிர்கொள்ளும் பொதுப் பிரச்னையாகிறது. எனினும், வேலையில்லாத் திண்டாட்டம் எந்த அளவுக்குக் குறைகிறதோ அதற்கேற்ப பொருளாதாரநிலை உயரும் என்பதால் அரசுகள் தொடர்ந்து வேலையின்மைப் பிரச்னையில் கவனம் செலுத்த வேண்டியது அத்தியாவசியமானதாக உள்ளது.
இந்தியாவில் 2021- ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் வேலையின்மை விகிதம் 7.75% ஆக உள்ளது. இது நகர்புறப் பகுதிகளில் 7.38% ஆகவும், கிராமப்புறப் பகுதிகளில் 7.91% ஆகவும் இருக்கிறது. கடந்த மே மாதத்தில் ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் அதிகபட்சமாக 11.84% ஆக இருந்தது. கரோனா காலத்தில்
பொருளாதார வீழ்ச்சியினால் நிறுவனங்களில் ஆள் குறைப்பு, சம்பளக் குறைப்பு எல்லாம் நிகழ்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் (சிஎம்ஐஇ) தரவுகளின்படி, 20-24 வயதுடையவர்களில் 38.41 % பேர் வேலையில்லாதவர்கள், 25-29 வயதுடையவர்கள் 12.71%, 15-19 வயதுடையவர்கள் 54.88% பேர். 15 வயதானவர்களிலிருந்து வேலையின்மை விகிதம் கணக்கிடப்படுகிறது.
மக்கள் தொகைப் பெருக்கம், குறைந்த கல்வி நிலையங்கள், அரசு ஆதரவின்மை, சட்ட சிக்கல்கள், சிறு, குறு வணிகங்களுக்கான குறைந்த உள்கட்டமைப்பு, உற்பத்தித் துறையில் குறைந்த முதலீடுகள், பொருளாதார வீழ்ச்சி எல்லாம் வேலையின்மையின் வெளிப்புற காரணங்கள்.
இதுதவிர, இயந்திரங்கள் பல்கிப் பெருகியுள்ளதாலும் மென்பொருள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வளர்ச்சியினாலும் பணியாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. படித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுவும் வேலையின்மைக்கான காரணமே.
ஆனால், ஒருவர் வேலை இன்றி இருக்கிறார் என்றால் தனிப்பட்ட திறன் குறைபாடுகளும் கூட காரணமாக இருக்கலாம். ஒருவர், தன்னுடைய திறன்களை வளர்த்துக் கொள்வதன் மூலமும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வதன் மூலமும் வேலைவாய்ப்பினைப் பெற முடியும்.
வேலையின்மைக்கான தனிப்பட்ட காரணங்கள் திறன் பற்றாக்குறை: அசுர வேகத்தில் வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப, ஒவ்வொருவரும் தங்களது திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். துறை சார்ந்து நொடிக்கணக்கில் அடுத்தடுத்த மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் உங்கள் வேலை சார்ந்து புதியனவற்றைக் கற்றுக்கொண்டே இருங்கள்.
பன்முகத்திறன் போட்டி அதிகமுள்ள தற்போதைய சூழ்நிலையில் ஒரு வேலை கிடைக்க பன்முகத் திறன் அவசியமான ஒன்று. ஒரு வேலையைச் செய்ய ஒருவர் என்று இருந்த காலம் சென்று, தற்போது குறிப்பிட்ட சில வேலைகளை சேர்த்து ஒருவர் செய்ய முடியுமெனில் நிறுவனங்கள் அந்த நபருக்கே வாய்ப்பினை வழங்குகின்றன. எனவே, உங்கள் வேலையோடு தொடர்புடைய மற்ற வேலைகளையும் கற்றுக் கொள்ள வேண்டும். அதே நேரத்தில் ஒரு திறனை முழுமையாக கற்றுக்கொள்வதையும் உறுதி செய்துகொள்ள வேண்டும்.
கல்வி நிறுவனங்கள்: தங்களுடைய கல்வி நிறுவனத்தில் படிக்கும் பெரும்பாலான மாணவர்களுக்கு வேலை கிடைக்க அந்தந்த கல்வி நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழில் நிறுவனங்களோடு தொடர்பு கொண்டு தங்கள் மாணவர்களைப் பணியமர்த்தும் முயற்சிகள் தொடர வேண்டும்.
அதற்கு முன்னதாக திறன்மிக்க கல்வி, முறையான செய்முறைப் பயிற்சிகளை மாணவர்களுக்கு அளித்து அவர்களை அனைத்து வகையிலும் சிறந்த மாணவர்களாக உருவாக்க வேண்டியது ஒவ்வொரு கல்வி நிறுவனத்தின், ஆசிரியரின் கடமையுடன் பொறுப்பும் கூட. பாடத்திட்ட வடிவமைப்பு மற்றும் கற்பித்தல் முறைகள் புதுப்பிக்கப்பட வேண்டும்.
பயோ-டேட்டா: இன்று புதிய பட்டதாரிகள் பலருக்கும் பயோ-டேட்டா தயார் செய்வது எப்படி என்பது குறித்து அதிகம் தெரிவதில்லை. நவீனம் நிறைந்த காலத்தில் உங்கள் பயோ-டேட்டாவும் சுருக்கமாக அதேநேரத்தில் தெளிவாக இருக்க வேண்டும். உங்களுடைய கல்வி, அனுபவத்துக்கு ஏற்ப வடிவமைத்துக் கொள்ளலாம். உதாரணமாக குறிப்பிட்ட வேலையில் உள்ள அனுபவத்தை முதலில் குறிப்பிட்டு பின்னர் கல்வி, தனிப்பட்ட விவரங்களை அளிக்கலாம். மற்றவர்களைப் போலவே உங்கள் பயோ-டேட்டாவும் இருக்க வேண்டிய அவசியமில்லை.
செய்முறைப் பயிற்சி: பள்ளி முதல் கல்லூரி வரை இன்று அதிக அளவில் மனப்பாட கல்வி முறையே செயல்படுத்தப்பட்டு வருகிறது. முடிந்தவரை செய்முறைப் பயிற்சியில் மாணவர்கள் ஈடுபடுத்தப்பட வேண்டும்.
நீங்கள் புதிதாக ஒரு பயிற்சியை கற்றுக்கொள்ள விரும்பினால் கூட புத்தகத்தை மட்டும் படிக்காமல் செய்முறையில் ஈடுபடுங்கள். படித்ததை நினைவுபடுத்தி செய்முறையில் ஈடுபட்டால் மட்டுமே திறனை வளர்த்துக்கொள்ள முடியும்.
தொழில் பயிற்சி: பட்டம் பெற்றவுடன் உடனடியாக நல்ல ஊதியத்தில் வேலைக்குச் செல்ல வேண்டும் என்றே இன்றைய இளைஞர்கள் நினைக்கிறார்கள் அல்லது உடனடியாக தொழில் தொடங்க விரும்புகிறார்கள். ஆனால், யாரும் தங்களுடைய திறன்கள் குறித்து சோதிப்பதில்லை. அதீத நம்பிக்கை காரணமாக நேரடியாக வேலையில் இறங்குகிறார்கள்.
நீங்கள் எந்தத் துறையில் பணிபுரிய விரும்புகிறீர்களோ அதுசார்ந்த அடிப்படைப் பயிற்சிகளைப் பெற்று பின்னர் வேலையில் ஈடுபடுவது உங்கள் வளர்ச்சி வேகமாக அதிகரிக்க உதவும்.
நேர்காணல்: ஒரு வேலைக்கு கல்வித்தகுதி மட்டும் போதாது. நேர்காணல்களை எதிர்கொள்ளும் திறனும் வேண்டும். இதற்காகவே கல்லூரிகளில் இறுதி ஆண்டில் மாணவர்களுக்கு தனிப்பயிற்சி வழங்கப்படுகிறது.
எனினும், நேர்காணல் செய்பவர்களை எதிர்கொள்வதற்கான தன்னம்பிக்கை இன்றியே பலரும் காணப்படுகின்றனர். உங்களுடைய திறமையை வெளிக்காட்டினால் மட்டுமே வளர்ச்சிப்பாதையை நோக்கி செல்ல முடியும். எனவே, பயத்தை விட்டொழித்து தன்னம்பிக்கையுடன் நேர்காணலை எதிர்கொள்ள வேண்டும்.
குறைவான ஊதியம் : கல்வி பயின்றவுடன் அதிக ஊதியத்துடன் வேலை கிடைக்க வேண்டும் என்பது பெரும்பாலோனாரின் கனவாக இருக்கிறது. ஆனால், எடுத்தவுடன் அனைவருக்கும் அந்த வாய்ப்பு கிட்டிவிடுவதில்லை. சிலருக்கு நல்ல ஊதியம் கிடைத்து அனுபவம் கிடைக்காமல் போகும். சிலருக்கு இது மாறாக அமையும். ஊதியம் அவசியம்தான் என்றாலும் சிறந்த அனுபவம் கிடைத்தால் ஊதியம் குறைவாக இருந்தாலும் பணியில் சேரலாம்.
குழுவுடன் ஒத்துழைப்பு
புத்தக அறிவுடன், வேலை செய்வதற்கான குறிப்பிட்ட திறன்களைப் பெற்றிருந்தால் போதும் என்றிருந்த நிலை மாறி, இன்று குழுவுடன் சேர்ந்து பணிபுரிவது, குழு உறுப்பினர்களுடன் ஒத்துழைப்பு என இதர பொதுத் திறன்களையும் நிறுவனங்கள் சோதிக்கின்றன.
பிள்ளைகள் வேலையின்றி வீட்டில் இருந்தால் அவர்களுக்கான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றி ஊக்கமளிக்கும் பொறுப்பு ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் இருக்கிறது. அதுபோல இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருவதில் கல்வி, தொழில் நிறுவனங்களுடன் இணைந்து அரசு செயல்பட வேண்டும். வேலை தேடுவோரும் திறனை வளர்த்துக்கொள்வதுடன் கிடைக்கும் வாய்ப்புகள் அனைத்தையும் பயன்படுத்திக் கொண்டால் வெற்றி நிச்சயம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.