தொழில்நுட்பங்கள் வளர்ந்து கொண்டே வருவதற்கேற்ப இணையத்தின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முக்கியமாக இளைஞர்கள் மத்தியில் இணையத்தின் பயன்பாடு மிக அதிகமாக உள்ளது. இளைஞர்கள் இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள் என்று கூறுவதைவிட அதற்கு அடிமையாகிவிட்டார்கள் என்றே கூறலாம்.
இளைஞர்களின் அன்றாட செயல்பாடுகளே ஸ்மார்ட்போனால் அதிக அளவில் மாறியுள்ளன. எழுந்தவுடன் கைகள் தேடுவது ஸ்மார்ட் போனைத்தான்; தூங்குவதற்கு முன்பாகக் கண்கள் இறுதியாகக் காண்பதும் ஸ்மார்ட்போனைத்தான் என்ற நிலையில் இளைஞர்கள் உள்ளனர்.
இணையம் முற்றிலும் வீணானது என்று சொல்ல இயலாது. அதில் எவ்வளவோ பயன்களும் உள்ளன. ஸ்மார்ட்போனும் இணையமும் சேர்ந்து வாழ்க்கையைப் பல்வேறு வழிகளில் எளிமைப்படுத்தியுள்ளது. பல்வேறு சேவைகள் இருந்த இடத்திலேயே கிடைக்கின்றன. அத்தியாவசியப் பொருள்கள் முதல் கல்வி வரை அனைத்தும் இணையவழியில் கிடைக்கின்றன.
ஆனால், அத்தகைய சேவைகளைப் பெறுவதற்காக மட்டும்தான் இளைஞர்கள் இணையத்தைப் பயன்படுத்துகிறார்களா? பலனுள்ள சேவைகளைப் பெற இணையத்தைப் பயன்படுத்துவது மிகவும் குறைவுதான்.
பொழுதுபோக்குக்காகவும், தற்காலிக மகிழ்ச்சியைப் பெறுவதற்காகவுமே இளைஞர்கள் பெரும்பாலான நேரத்தை இணையத்தில் செலவிடுகின்றனர். தூங்கும்போது மட்டுமே ஸ்மார்ட்போனுக்கு ஓய்வு தருபவர்கள் பலர். மற்ற எல்லா நேரங்களிலும் இணையத்துடனான இளைஞர்களின் தொடர்பு தொடர்கிறது.
அளவுக்கு அதிகமானது எதுவாயினும், அது கேட்டையே விளைவிக்கும். அது உணவாக இருந்தாலும் சரி. குறிப்பிட்ட பழக்கவழக்கங்களாக இருந்தாலும் சரி. இணையப் பயன்பாட்டிலும் இளைஞர்கள் கட்டுப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அதீத இணையப் பயன்பாடு, மனதளவிலும் உடலளவிலும் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தும்.
எனவே, இணைய அடிமைத்தனத்தில் இருந்து இளைஞர்கள் படிப்படியாக மீள்வது அவசியம்.
அதற்கு ஸ்மார்ட்போன் பயன்பாட்டை முதலில் குறைத்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக, தூங்குவதற்குக் குறைந்தபட்சம் ஒரு மணி நேரத்துக்கு முன்பு ஸ்மார்ட்போனைப் பயன்படுத்துவதையோ, தொலைக்காட்சி பார்ப்பதையோ தவிர்க்க வேண்டும். தூங்குவதற்கு முன்பாக ஸ்மார்ட்போனைப் பயன்படுத்தினால் அது ஆழ்ந்த தூக்கத்துக்குத் தடையாகிவிடும்.
இணையத்தின் மூலமாக ஸ்மார்ட் போனுக்குள் வாழ்வதைக் கைவிட்டு, நிஜ உலகில் வாழ வேண்டும். குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் அதிகமாக நேரத்தைச் செலவிட வேண்டும். வீட்டில் அனைவரும் சேர்ந்து சாப்பிடும் நேரங்களில் போனைப் பயன்படுத்திக் கொண்டிருக்கக் கூடாது. அப்போது தொலைக்காட்சி பார்ப்பதையும் தவிர்க்க வேண்டும். அனைவரும் பேசிக் கொண்டிருக்கலாம்.
அத்தகைய தருணங்கள், குடும்ப உறுப்பினர்களுக்கு இடையேயான புரிதலை வலுப்படுத்தும்.
மற்ற வேலைகளில் ஈடுபடும்போது இணையத் தொடர்பைத் துண்டித்து விட வேண்டும். இல்லையெனில் சமூக வலைதளங்களில் இருந்து நோடிஃபிகேஷன் உள்ளிட்டவை வரும். அது ஏற்கெனவே ஈடுபட்டுள்ள வேலைகளில் இருந்து நம் கவனத்தைச் சிதறடிக்கும். பொழுதைப் போக்குவதற்காகவே பலர் ஸ்மார்ட் போனைப் பயன்படுத்தத் தொடங்குகின்றனர். போகப் போக, செய்ய வேண்டிய வேலைகளைத் தள்ளிப்போட்டுவிட்டு ஸ்மார்ட் போனை அவர்கள் பயன்படுத்துகின்றனர்.
வேலை எதுவும் இல்லாத வேளைகளில் ஸ்மார்ட்போனைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து நல்ல புத்தகங்களை வாசிக்கலாம். அதன் மூலமாக பல புதிய தகவல்களைப் பெற முடியும். பொழுது போகவில்லை எனில் புதிய விஷயங்களில் மனதை ஈடுபடுத்தலாம்.
வீட்டுத் தோட்டம் அமைப்பது, வீட்டை அழகுபடுத்துவது, ஓவியம் வரைவது, இசை கேட்பது, சமைப்பது உள்ளிட்டவற்றில் ஈடுபடுவதன் மூலமாக ஸ்மார்ட்போன் பயன்பாட்டைப் பெருமளவில் குறைக்க முடியும். முக்கியமாக, தனிமையில் நேரத்தை செலவிடுவதைத் தவிர்த்தாலே இணையப் பயன்பாட்டைக் குறைக்க முடியும். கரோனா தொற்று தனிமையில் இருப்பதைப் பழக்கப்படுத்தியது. தனிமையில் இருக்கும்போது அதீதமான இணையப் பயன்பாடு என்ற தொற்று நம்மை பாதிக்கிறது. எனவே நண்பர்களுடனும் குடும்பத்தினருடனும் நேரத்தை அதிகமாக செலவிடுதல் அவசியம். பொழுதை சிறப்பான முறையில் செலவிடுவதற்கு நண்பர்கள் உதவுவார்கள்.
உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? இணையத்தை அவசியத்துக்காக மட்டுமே பயன்படுத்தி அன்றாடப் பொழுதை மகிழ்ச்சியாகக் கடக்க முடியும். நிச்சயம் முடியும். முயன்று பாருங்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.