முகப்பு
இளைஞர்மணி

புதிய கண்டுபிடிப்புகள்... கலக்கும் மாணவர்கள்!

அறிவியல் தொழில்நுட்பத்தின் அடுத்தகட்ட நகர்வாக சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத மின்சார  இரு சக்கர வாகனம், கார்களின் உற்பத்தி, இப்போது புதிய சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

Updated On : 28 டிசம்பர், 2021 at 6:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:17 AM

அறிவியல் தொழில்நுட்பத்தின் அடுத்தகட்ட நகர்வாக சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத மின்சார  இரு சக்கர வாகனம், கார்களின் உற்பத்தி, இப்போது புதிய சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்படுகிறது.

அந்த வகையில், பெட்ரோல், மின்சாரம் என இரண்டிலும் ஓடக் கூடிய இ-பைக் என்ற இரு சக்கர வாகனத்தை, சேலம், தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் உருவாக்கியுள்ளனர். இக்கல்லூரி மாணவர்கள் மேலும் பல புதிய கருவிகளை உருவாக்கி தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளனர்.

இக்கல்லூரியின் முதல்வர் வீ.கார்த்திகேயனின் வழிகாட்டுதலில், இயந்திரப் பொறியியல் பிரிவு துறை தலைவர் ஏ.கனகராஜ், திட்ட வழிகாட்டி கண்ணன், ஒருங்கிணைப்பாளர் சண்முகம் ஆகியோர் அடங்கிய குழுவின் மேற்பார்வையில், மாணவர்கள் யுகேஸ்வரன், நிஷாந்த், விக்னேஷ், திரிஷா, பிரியதர்ஷினி, ராம்நரேஷ் சூர்யா ஆகியோர் சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சார பைக்கை உருவாக்கி, தேசிய அளவிலான விருதையும் பெற்றுள்ளனர்.

Advertisement

இது குறித்து மாணவர்கள் கூறியது:

""நமது நாட்டில் தற்போது சுமார் 37 கோடி இரு சக்கர வாகனங்கள் உள்ளன. சுற்றுச்சூழலுக்கு ஏற்ப, எலக்ட்ரிக் இரு சக்கர வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், பேட்டரி என இரண்டிலும் இயங்கக் கூடிய வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. பழைய வாகன இரும்புப் பொருட்களில் இருந்து உருவாக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பாகும். 

இதிலுள்ள பேட்டரியை நான்கு மணி நேரம் சார்ஜ் செய்தால் 40 கி.மீ. வேகத்தில் சுமார் 80 கி.மீ. தூரம் வரை பயணம் செய்யலாம். 

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 100-ஐத் தாண்டி விட்டது.  தற்போது ஒரு லிட்டர் பெட்ரோலில் 1 கி.மீ. பயணிக்க ரூ. 3.50 செலவாகிறது. ஆனால், எலக்ட்ரிக் இருசக்கர வாகனத்தில் பயணிக்க, 1 கி.மீ. பயண தூரத்துக்கான செலவை ரூ. 1.50 ஆகக் குறைக்க முடியும்.

ஏற்கெனவே தில்லியில் "மெக்கதான்' என்ற போட்டியில் இந்த எலக்ட்ரிக் பைக் ரூ. 50 ஆயிரம் பரிசையும் சான்றிதழையும் வென்றது. இப்போது அடுத்த கட்டமாக பெட்ரோல், பேட்டரி என இரண்டிலும் இயக்கும் வகையில் மேம்படுத்தப்பட்டு வருகிறது'' என்றனர். 

ஸ்மார்ட் உரத் தெளிப்பான்:

வேளாண் பயன்பாட்டுக்கான உற்பத்திப் பொறியியல் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் எஸ்.விஷால், ஆர்.விக்னேஷ், பி.ஆர்.திவாகர், பி.ஒபுரம்யா ஆகியோர், ஸ்மார்ட் உரத் தெளிப்பான் கருவியை உருவாக்கியுள்ளனர்.  

விளைநிலங்களில் பயிர்களுக்குத் தேவையான உரத்தைத் தெளிக்க தோளில் மாட்டிக்கொள்ளும் வகையிலான உரத் தெளிப்பான் பயன்படுத்தப்பட்டு வருகிறது.  அதில் சில சிரமங்கள் உள்ளன. ஆனால்,  மாணவர்கள் உருவாக்கியுள்ள உரத் தெளிப்பானை விளைநிலத்தில் எங்கு வேண்டுமானாலும் நகர்த்திச் செல்ல முடியும்.  4 சக்கரங்களை இந்த உரத் தெளிப்பானில் இணைத்திருக்கிறார்கள். 

ஐ.ஓ.டி. என்ற தொழில்நுட்பத்தின் மூலம் செல்லிடபேசியில் இருந்தும் இந்த உரத் தெளிப்பான் கருவியை இயக்க முடியும்.  இந்த வகை உரத் தெளிப்பான் மூலம் 14 அடி அகலத்துக்கு ஒரே நேரத்தில் உரத்தைத் தெளிக்க முடியும். விவசாயத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள் இந்த உரத் தெளிப்பானை எளிதாகக் கையாள முடியும். 

எதிர்காலத்தில் இக்கருவியை ரூ.3,000 என்ற விலையில் உருவாக்கித் தர முடியும். பேட்டரி, சோலார் தகடுகள் ஆகிய இரண்டிலும் இதனை இயக்க முடியும் என்பது இதன் சிறப்பம்சம்.

மக்காச்சோளம் பிரித்தெடுக்கும் கருவி:

இயந்திரப் பொறியியல்  பிரிவு துறை பேராசிரியர்  மணிகண்டன் வழிகாட்டு தலில், மாணவர்கள் யுகேஸ்வரன், விக்னேஷ், சங்கர்கணேஷ், தனூர் ஆகியோர் குறைந்த செலவில் மக்காச்சோளத்தைப் பிரித்தெடுக்கும் கருவியை உருவாக்கியுள்ளனர். 

இந்தக் கருவி மூலமாக ஒரு கிலோ உலர்த்தப்பட்ட மக்காச்சோளக் கதிரிலிருந்து 8 நிமிடங்களில் முத்துகளைத் தனியே பிரித்தெடுக்க முடியும். பிரித்தெடுத்த மக்காச்சோளத்தை மாவாக அல்லது ரவையாக அரைத்துத் தரும் கிரைண்டரும் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது.  

கோரைப்புல் சருகு நீக்கும் இயந்திரம்:

சேலத்தை அடுத்த ஓமலூர் வட்டாரத்தில் கோரைப்பாய் உற்பத்தி பெருமளவில் செய்யப்படுகிறது. கோரைப்பாய் தயாரிப்புக்கான கோரைப்புல் சருகுகளை நீக்கும் கருவியை மின்னியல் மற்றும் மின்னணுவியல் பிரிவைச் சேர்ந்த பேராசிரியர்கள் சேனாதிபதி, ஷீலா, மாணவர்கள் கனிமொழி, இனியா, ஹரீஷ், அக்ஷய்குமார், சமிதா ஆகியோர் உருவாக்கியுள்ளனர். இந்த இயந்திரத்தால் சருகுகளை உரிப்பதற்கான நேரம் குறையும் என கண்டுபிடிப்பாளர்கள் தெரிவித்தனர்.

தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளுக்கான விருதை இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) அளித்துள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.