வேலைவாய்ப்புக்கு அடிப்படையான நுழைவுவாயிலாக இருப்பதும், வேலை தருவோருக்கு நம் திறமையை- தகுதியை - வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக இருப்பதும் "பயோடேட்டா' எனப்படும் தன்விவரக் குறிப்போகும். பயோடேட்டா குறிப்பிட்ட தகுதிகளுடன் இல்லையென்றால் "முதல் கோணல் முற்றிலும் கோணல்' என்றாகிவிடும். வேலை வாய்ப்பும் கேள்விக்குறிதான்.
ஒரு நிறுவனத்திற்கு வேலைக்கு விண்ணப்பிக்கும்போது பயோடேட்டாவில் உள்ள தகவல்கள், திறன்களைப் பார்த்துதான் முதலில் நம்மை அழைக்கிறார்கள். எனவே, அதனின் சிறந்த, பொருத்தமான வடிவமைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
பயோடேட்டா எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு பல வழிகாட்டு நெறிமுறைகள் இருந்தாலும் சில அடிப்படை மற்றும் நுணுக்கமான விஷயங்களைத் தெரிந்துகொள்வது அவசியமாகிறது.
உங்களுடைய தகுதி மற்றும் அனுபவத்திற்கேற்ற மிகவும் பொருத்தமான பயோடேட்டாவை உருவாக்குங்கள்.
திறன்களைப் பட்டியலிடுங்கள்
நீங்கள் ஓர் அலுவலகத்தின் தலைமைப் பதவிக்கு விண்ணப்பித்தால் கூட உங்கள் திறன்கள் "பளிச்'சென்று தனியே தெரியும்படி இருந்தால்தான் சரியாக இருக்கும். அந்தவகையில், பயோடேட்டாவில் திறமைகள் மற்றும் பண்புகளுக்கு முதல் முக்கியத்துவம் இருக்க வேண்டும்.
பயோடேட்டாவில் இருக்க வேண்டிய முக்கிய திறன்கள்:
தகவல்பரிமாற்றத் திறன்:
தற்போதைய இணைய யுகத்தில் இருக்க வேண்டிய அவசியமான திறன்களில் ஒன்று, உங்களுக்குத் தெரிந்தவற்றை மற்றவர்களுக்குப் பகிர்வது. இந்தத் தகவல் பரிமாற்றத் திறன் இருந்தால்தான், "டீம் ஒர்க்' எனும் "குழுப் பணி'யைச் சிறப்பாகச் செய்ய முடியும்.
தகவல் பரிமாற்றத் திறனுக்கு அடுத்தபடியாக உங்களிடம் இருக்க வேண்டிய திறன்களான நேர மேலாண்மை, அலுவலக மேலாண்மை, படைப்பாற்றல், பகுத்தாராய்தல் ஆகியவை முக்கியமானவை. இந்தத் திறன்கள் எல்லாம் உங்களிடம் இருந்தால், அவற்றை உங்களுடைய பயோடேட்டாவில் வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும்.
வேலை சார்ந்த திறன்கள்:
தலைமைப் பண்பு, ஒரு குழுவை வழிநடத்துதல் என்று பொதுவான திறன்கள் இருந்தாலும் நீங்கள் வேலை செய்யும் துறை சார்ந்த திறன்களைப் பயோடேட்டாவில் பட்டியலிட வேண்டும். இது உங்கள் திறமைகளை எளிதில் அடையாளம் காண்பதற்கும் உதவும். திறமை இருப்பதை விட அதனைச் சிறந்த முறையில் வெளிப்படுத்துவது மிகவும் முக்கியம்.
நீங்கள் நேர்காணலுக்குச் செல்லும்போதே அவர்களுக்கு நீங்கள் வேலை செய்யப் போவதில்லை. அவர்களைக் கவரும் வகையில் உங்கள் திறமைகளை எடுத்துரைக்க வேண்டும். எனவே, நேர்காணலுக்கு முன்னதாக கொடுக்கப்படும் பயோடேட்டாவில் துறை/வேலை சார்ந்த திறன்களை விளக்கமாகவே கொடுக்கலாம்.
தனித்துவ திறன்கள்:
மற்றவர்களைவிட உங்களுக்கென்று இருக்கும் தனித்திறனை குறிப்பிடுங்கள். உதாரணமாக குறிப்பிட்ட வேலையை மற்றவர்களைவிட வேகமாக, சிறப்பாகச் செய்துகொடுக்க முடியும் என்ற மாதிரியான விஷயங்களைக் குறிப்பிடலாம்.
முந்தைய நிறுவனத்தில் நீங்கள் வழிநடத்திய குழு ஒன்று இதுவரை இல்லாத அளவுக்கு வருவாய் ஈட்டிக்கொடுத்தது என்றால் அதனைக் குறிப்பிடலாம். இதுபோல முந்தைய நிறுவனத்தில் உங்கள் திறன்கள், படிப்பில் உங்களின் குறிப்பிட்ட சாதனைகளைப் பட்டியலிடலாம்.
தலைமைத்துவத் திறன்
இணையத்தில் ஏதேனும் ஒரு பயோடேட்டாவை எடுத்துப் பார்த்தால் அதில் "லீடர்ஷிப் குவாலிட்டி' என்பது இருக்கும். வேலையில் அனுபவம் பெற்றிருந்தாலும், இல்லையென்றாலும் இந்தத் திறன் இருக்க வேண்டியது அவசியம். இதனை உங்கள் பயோடேட்டாவிலும் குறிப்பிட மறக்க வேண்டாம்.
உங்கள் திறன்களின் பட்டியலை சற்று பெரிய எழுத்தில் தெரியும்படி பார்த்துக்கொள்ளுங்கள். அது உங்களையும், உங்கள் திறமைகளையும் தனித்துக் காட்டும்.
பொதுவான விஷயங்கள்
பொதுவாக பயோடேட்டா மூன்று விதங்களில் பின்பற்றப்படுகிறது. முதலாவது, காலவரிசை அடிப்படையில் - தொடர்பு விவரங்கள், கல்வி, அனுபவம், திறன்கள், கூடுதல் தகவல்கள்.
இரண்டாவது, செயல்பாடு அடிப்படையில் - முதலில் திறன்கள் மற்றும் அனுபவம், அதன்பின்னர் கல்வி, தொடர்புகள் குறித்து குறிப்பிடுவது.
மூன்றாவதாக "கலவையான வடிவம்' - தங்களின் வசதிக்கேற்ப இவ்விரண்டிலிருந்தும் மாறுபட்டது.
இதில் வேலை தேடுவோர் தங்கள் திறன் மற்றும் அனுபவங்களை முதலில் பட்டியலிடலாம். ஏனெனில் அதுவே உங்களை யார் என்று காட்டும்.
உங்களுடைய திறன்களை துணைத் தலைப்புகளாக வைத்துகூட அதனை சுவாரசியமாக விரிவாகக் கூறலாம். ஆனால், கட்டுரை போலவும் இருக்க கூடாது. பயோடேட்டாவுக்கு என பொருத்தமாக உள்ள எழுத்துருக்களை மட்டும் பயன்படுத்துங்கள். முக்கியமான விஷயங்களை சற்று பெரிதான அளவில் காட்டுங்கள். உங்கள் பெயர், தகவல் தொடர்பு விவரங்களை தெளிவாகக் குறிப்பிடுங்கள். தேவைப்படும்பட்சத்தில் சமூக வலைதள தொடர்புகளையும் பயோடேட்டாவில் குறிப்பிடுங்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.