உங்களைப் போன்றவர்களை கண்டுபிடிக்க உதவும் செயலி!
ரயிலிலிருந்து இறங்கி ஸ்டேஷனை விட்டு வெளியே வருகிறீர்கள். புதிய ஊர்.
ரயிலிலிருந்து இறங்கி ஸ்டேஷனை விட்டு வெளியே வருகிறீர்கள். புதிய ஊர். உங்கள் செல்லிடப் பேசியில் இணைய தொடர்பும், லொகேஷனும் செயலில் இருந்தால், எங்கே நல்ல உணவகம் இருக்கிறது? அந்த இடத்திலிருந்து இன்னோர் இடத்துக்குச் செல்ல எவ்வளவு தூரம், எவ்வளவு ஆட்டோ, டாக்ஸி கட்டணம்? வசதியான தங்குமிடங்கள் எவை? என்பன போன்ற தகவல்கள் வந்து கொண்டே இருக்கும்.
துணிக்கடை என்று நீங்கள் தேடினால் அந்தப் பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான துணிக்கடைகள் பற்றிய தகவல்கள் வந்து குவியும். இப்படி தொழில், வணிகம், இடங்கள் தொடர்பான தகவல்களைத் தர நிறையச் செயலிகள் இப்போது வந்துவிட்டன.
உங்களுக்குப் புகைப்படம் எடுக்க ரொம்பப் பிடிக்கும். அதேபோன்று புகைப்படக் கலையில் ஆர்வமுள்ள யாராவது நீங்கள் இருக்கும் இடத்துக்கு அருகே இருக்கிறாரா? அவருடன் எப்படித் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வது? என்று நீங்கள் தேடினால், அதுபோன்ற தகவல்கள் உங்களுக்குக் கிடைக்காது.
வேலை, தொழில், கல்வி போன்ற காரணங்களுக்காக மனிதர்கள் இடம் மாறி மாறி வாழ வேண்டியிருக்கிறது.
பக்கத்து வீட்டுக்காரர் யார் என்றே தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் நகரத்து மக்கள். இப்படிப்பட்ட சூழலில் புதிய இடம் ஒன்றுக்கு குடிபெயரும்போது, புதிய இடம் ஒன்றுக்குச் செல்லும்போது அங்கே உள்ள ஒத்த ரசனை கொண்ட மனிதர்களைத் தேடிப் பிடிக்க உதவுகிறது ஒரு செயலி.
"லிவதான்' என்ற அந்தச் செயலியின் மூலம் பல்வேறு துறை சார்ந்த ஒரே மாதிரியான விருப்பங்கள் உள்ள மனிதர்களைக் கண்டுபிடித்து அவர்களுடன் தொடர்பு கொள்ள முடியும். இந்தச் செயலியை உருவாக்கியிருப்பவர் சென்னையைச் சேர்ந்த இளைஞர் ராகுல் ராமச்சந்திரன். அவரிடம் இதுபற்றிக் கேட்ட போது...
""நான் உடுமலைப்பேட்டை அமராவதி நகரில் உள்ள சைனிக் பள்ளியில் பிளஸ் டூ வரை படித்தேன். அதன் பிறகு சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ரூமென்டேஷன் பிரிவில் பிஇ பட்டம் பெற்றேன். அதன் பிறகு லண்டனில் உள்ள புரூனெல் யுனிவர்சிட்டியில் 2019- ஆம் ஆண்டு எம்பிஏ படித்தேன்.
அப்போது தொழில் தொடங்குதல் தொடர்பான- ஸ்டார்ட்அப் புராஜெக்ட் செய்யச் சொன்னார்கள். நான் ஏற்கெனவே கணினி தொடர்பான பிரிவில் பொறியியல் படித்திருந்ததனால், "டிஜிட்டல் டைரி' ஒன்றை அந்த புராஜெக்ட்டுக்காக உருவாக்கினேன்.
நீண்டகாலமாக டைரி எழுதும் பழக்கம் நம்மிடம் இருக்கிறது. காகிதம் இல்லாத உலகத்தை விரும்புகிற இக்காலத்தில் வாழும் நமக்கு, டிஜிட்டல் டைரிதான் பொருத்தமானது என்பதால் அதைத் தயாரித்தேன்.
இந்த டிஜிட்டல் டைரியில் நமது வாழ்வின் அன்றாட நிகழ்வுகளைப் பதிந்து கொள்ளலாம். எழுத்துவடிவில் மட்டுமல்ல, புகைப்படங்களாகவும், விடியோக்களாகவும், ஆடியோக்களாகவும் பதிந்து வைத்துக் கொள்ளலாம். இதை நமது உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளலாம். 20 - 30 ஆண்டுகளுக்குப் பிறகு, உங்களுடைய பேரப் பிள்ளைகளுக்கும் அதைக் காட்டலாம். எனது இந்த முயற்சியை புரூனெல் யுனிவர்சிட்டி பேராசிரியர்கள் பாராட்டினார்கள்.
படிப்பு முடித்து இந்தியா திரும்பியதும், இந்த டிஜிட்டல் டைரியை மேலும் மேம்படுத்தி, "லிவதான்' என்ற செல்லிடப் பேசியில் பயன்படுத்தும் ஒரு செயலியை உருவாக்கினேன்.
இந்தச் செயலியின் மூலம், பொருள்களை, இடத்தை, வணிகம், தொழில் தொடர்பான தகவல்களைப் பெற முடியாது.
இது ஒரே மாதிரியான விருப்பங்கள், தேவைகள் உள்ள மனிதர்களுக்கிடையில் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள உதவும் செயலி.
பிற செயலிகளில் ஒரு தகவலைப் படித்துவிட்டு, அதற்கு லைக் போடுவது, கமெண்ட் போடுவது, அதை பிறருக்கு ஷேர் செய்வது போன்ற வசதிகள் இருக்கும். ஆனால் லிவதானில் அதுபோன்ற வசதிகள் இல்லை.
நீங்கள் ஒரு புதிய இடத்துக்குக் குடிபெயர்ந்து விட்டீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு கால்பந்து விளையாட ரொம்பப் பிடிக்கும். ஆனால் நீங்கள் உள்ள பகுதியில் உள்ள கால்பந்து விளையாடுபவர்களைப் பற்றி உங்களுக்கு எதுவும் தெரியாது. எங்களுடைய லிவதான் செயலியின் மூலம் நீங்கள் உங்களைச் சுற்றியுள்ள கால்பந்து விளையாடுவதில் ஆர்வமுள்ள பலரைப் பற்றி தெரிந்து கொள்ள முடியும்.
கால்பந்து மட்டுமல்ல, போட்டோகிராபி, புத்தகவாசிப்பு, ஓட்டம், மேடைப்பேச்சு, நீச்சல் , டேபிள் டென்னிஸ், வாலிபால், டீச்சிங், டெக்னாலஜி, எலக்ட்ரானிக்ஸ், நாடகம், வியாபாரம், நிதி, டிராவல்ஸ், ட்ரெக்கிங், எழுத்து, திரைக்கதை எழுதுதல், யோகாசனம், யூ டியூப் பார்ப்பதில் ஆர்வமுடையவர்கள் என இன்னும் பல பிரிவுகளில் உங்களுக்குத் தேவையான, உங்களுடைய ரசனையைப் போல உள்ள மனிதர்களைத் தேடி கண்டுபிடிக்க இந்தச் செயலி உதவுகிறது.
சென்னை தாம்பரம் பகுதியில் நல்ல ஓட்டல் எங்கிருக்கிறது என்று இதில் தேடினால் உங்களுக்குத் தகவல் கிடைக்காது. ஆனால் இந்தப் பகுதியில் உள்ள சாப்பாட்டுப் பிரியர்கள் யார் என நீங்கள் தேடினால் உடனே உங்களுக்குத் தகவல் கிடைத்துவிடும்.
நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்து 3 மைல் சுற்றளவில் உள்ள உங்களுக்குப் பிரியமான மக்களை இந்தச் செயலியின் மூலம் கண்டுபிடிக்கலாம்.
இந்தச் செயலியை கூகுள் பிளேஸ்டோரில் இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். உங்களைப் பற்றிய தகவல்களை அதில் பதிந்து கொள்ளலாம். நான் உருவாக்கிய டிஜிட்டல் டைரியின் எல்லா அம்சங்களும் இதில் உள்ளதால், உங்களுடைய போட்டோ, விடியோ, ஆடியோ, ரைட்டிங்ஸ் என எல்லாவற்றையும் இதில் பதிந்து கொள்ளலாம். உங்களைப் போன்ற பொழுதுபோக்கு, ரசனை உள்ளவர்கள் தேடும்போது நீங்கள் அவர்களுக்குத் தெரிய வருவீர்கள். பின்னர் தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளலாம்.
இந்தச் செயலியை கடந்த டிசம்பர் மாதம் தொடங்கினோம். இதுவரை 3,500 பேர் இதில் தங்களை இணைத்துக் கொண்டிருக்கிறார்கள். எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமான நபர்கள் இந்தச் செயலியில் தங்களை இணைத்துக் கொள்கிறார்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு இந்தச் செயலியின் பயன்பாடு அதிகரிக்கும்.
என்னுடைய இந்தச் செயலிக்கான ஐடியாவை நடைமுறைப்படுத்த டிரைடன் சொல்யூஷன்ஸ் என்ற தொழில்நுட்ப நிறுவனம் உதவியது. விளம்பரங்களின் மூலம் கிடைக்கும் வருமானத்தை மட்டுமே நம்பியிருக்கும் நிலைதான் இப்போது உள்ளது'' என்கிறார் ராகுல் ராமச்சந்திரன்.