வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 287
ஊரடங்கு பிரகடனம் செய்யப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான மன்னர் வீரபரகேசரியின் அரண்மனைக்குச் சென்றிருக்கிறார்கள். அங்கு அமைச்சரவைக் கூட்டம் நடக்கிறது.
ஊரடங்கு பிரகடனம் செய்யப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான மன்னர் வீரபரகேசரியின் அரண்மனைக்குச் சென்றிருக்கிறார்கள். அங்கு அமைச்சரவைக் கூட்டம் நடக்கிறது. அப்போது புரொபஸர் மார்கரெட் தாட்சரின் கீழ்வரும் மேற்கோளை குறிப்பிடுகிறார்:
At the time of the conflict, we had to fight the enemy without; but the enemy within, much more difficult to fight, is just as dangerous to liberty. இதில் இலக்கணப் பிழை உள்ளதாக கணேஷ் நினைக்கிறான். அது சரியா? புரொபஸர் என்ன சொல்கிறார் எனப்
பார்ப்போமா?
புரொபஸர் (கணேஷிடம்): சரி சொல்லு. அந்த மேற்கோளில் என்ன தப்பு?
கணேஷ்: சார், Without என்றால் இல்லாமல் என்று பொருள். I will go for shopping without you if you come late again. அதாவது "நீ இனிமேல் தாமதமாக வந்தால் உன்னை விட்டுவிட்டு /நீ இல்லாமலே ஷாப்பிங் சென்று விடுவேன்' எனப் பொருள். சரியா?
புரொபஸர்: சரி தான்.
கணேஷ்: இப்போ அந்த மேற்கோளைப் பாருங்க - We had to fight the enemy without என இருக்கிறது. Without what? அது சொல்லப்படவில்லையே? அப்போ தப்பு தானே? Incomplete ஆக இல்லையா?
புரொபஸர்: இல்லை.
கணேஷ்: எப்படி?
புரொபஸர்: Without எனும் adverbக்கு, அதாவது வினையூக்கிக்கு, வேறு அர்த்தங்களும் உண்டு. அதைத் தெரிந்து கொள்ளாமல் இப்படி எடுத்த எடுப்பில் பிழை தேடக் கூடாது.
கணேஷின் முகம் வாடிப் போகிறது.
புரொபஸர்: நீ வருத்தப்படுறதுக்காக சொல்லல. Don't jump the gun. முழுக்க தெரிஞ்சுக்காம குதிக்காதே. இப்போ கவனி. Without என்பதற்கு in the absence of என ஒரு பொருள் உண்டு. இது ஒரு பொதுவழக்கில் உள்ள அர்த்தம். He was so absent-minded that he reached the practice nets without a bat. அதாவது அவர் எந்த அளவுக்கு கவனக்குறைவாக இருந்தார் என்றால் மட்டையாட்ட பயிற்சிக்கு மட்டை இல்லாமலேயே போய் விட்டார்.
ஜூலி: தற்போதைய இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க மட்டையாளர் ரோஹித் ஷர்மா சின்ன வயதில் அப்படிச் செய்ததாக கேள்விப்பட்டுள்ளேன்.
புரொபஸர்: ஆமா, கற்பனை ஆற்றல் மிக்கவர்கள் அப்படி இருப்பதுண்டு. சரி நாம விசயத்துக்கு வருவோம். Withoutக்கு இன்னொரு பொருள் outside.
அதாவது வெளியே. We fought the enemies without என்ற போது மார்க்கரெட் தாட்சர் அந்த பொருளிலே, நாம் வெளியே உள்ள் எதிரிகளுடன் போரிட்டோம் என, அதைச் சொன்னார். ஆனால் இந்த பிரயோகம் சற்று பழமையானது. Archaic. அவ்வளவாக தற்போதைய ஆங்கிலத்தில் இப்படி இதைப் பயன்படுத்துவதில்லை. ஆனால் அதற்காக அதைத் தெரிந்து கொள்ளாமல் இருக்கலாகாது.
கணேஷ்: நன்றி சார். அவ்வளவு தானா அர்த்தங்கள்?
ஜூலி: இல்லையே.
கணேஷ்: வேறென்ன?
ஜூலி: சர்க்கரை இல்லாத டீ, காப்பியை வித் அவுட் என இயம்புவார்கள்.
புரொபஸர்: a corny joke.
கணேஷ்: அப்படீன்னா?
ஜூலி: கடி ஜோக்குன்னு சொல்லுறார்.
கணேஷ்: ஓ... கடி ஜோக். ஐ லவ் கடி ஜோக்ஸ்.
ஜூலி: நான் ஒண்ணு சொல்லவா?
கணேஷ்: I can't wait
புரொபஸர்: பரவாயில்ல, நல்லா பேச ஆரம்பிச்சிட்டியே.
கணேஷ்: டேங்க்யூ சார்.
ஜூலி: Do you know why the chef was arrested?
கணேஷ்: Chef என்றால் சமையற்காரர் தானே?
ஜூலி: ஆமா.
கணேஷ்: அவரை ஏன் கைது பண்ணனும்?
ஏதாவது தப்புத் தண்டா பண்ணினாரா?
ஜூலி: Because he was found beating the egg.
கணேஷ்: Beat the egg என்றால் முட்டையை உடைச்சு ஊற்றி அடிக்கிறது தானே? ஹா... ஹா... செம செம.
புரொபஸர் தலையில் கையை வைத்துக் கொள்கிறார்.
ஜூலி: இன்னொன்னு... I told my doctor I broke my hand in two places. டாக்டர் என்ன சொன்னார் தெரியுமா?
கணேஷ்: ம்ஹும்
(இனியும் பேசுவோம்)