இளைஞர்மணி

சிஏ தே‌ர்வு... முத​லி​ட‌ம் பிடி‌த்த மாணவி...: 'திட்டமிட்டுப் படித்தால் வெற்றி நிச்சயம்!'

அகில இந்திய அளவில்  இந்த ஆண்டுக்கான  சிஏ தேர்வில் முதலிடம் பெற்றிருக்கிறார் நந்தினி அகர்வால். அவர் 800க்கு 614 மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்.

ந. ஜீவா


அகில இந்திய அளவில்  இந்த ஆண்டுக்கான  சிஏ தேர்வில் முதலிடம் பெற்றிருக்கிறார் நந்தினி அகர்வால். அவர் 800க்கு 614 மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார். அவருடைய அண்ணன் சச்சின் அகர்வால் அகில இந்திய அளவில் 18 - ஆவது இடத்தைப் பெற்றிருக்கிறார்.  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர்  சார்ட்டர்டு அக்கவுண்டன்ட்ஸ் தேர்வில் வெற்றி பெற்றது எப்படி?  

மத்திய பிரதேசத்தின்  மொரினா நகரைச் சேர்ந்த  நந்தினிக்கு வயது 19. அவருடைய அண்ணன் சச்சினுக்கு வயது 21.  ஆனால் மொரினா நகரில் உள்ள விக்டர் கான்வென்ட் உயர்நிலைப்பள்ளியில் எல்லா வகுப்புகளிலும்  ஒரே வகுப்பிலேயே இருவரும் படித்து வந்திருக்கின்றனர். தொடக்கக் கல்வி படிக்கும்போது,  ஒரு வகுப்பு படித்து முடித்ததும் அடுத்த ஆண்டு அடுத்த வகுப்பு படிக்காமல்,  அதைத் தாண்டி

அதற்கு  அடுத்த வகுப்புக்கு 2 முறை தேர்வு பெற்றிருக்கிறார்  நந்தினி. அதனால் அண்ணனும் தங்கையும்  ஒரே வகுப்பில் படித்திருக்கிறார்கள்.

இந்த ஆண்டு இன்ஸ்டிடியூட் ஆஃப் சார்டர்டு அக்கவுண்டன்ட்ஸ் ஆஃப் இந்தியா (ஐசி ஏஐ)  நடத்திய  சிஏ தேர்வை இந்தியா முழுவதும் 83 ஆயிரத்து 606 பேர் எழுதியிருக்கிறார்கள்.  இவ்வளவு பேர் எழுதிய இந்தத் தேர்வில் நந்தினி முதலிடம் பிடித்ததும், 18-ஆம் இடத்தை சச்சின்  பிடித்ததும் எப்படி  சாத்தியமானது?

""நானும் எனது  சகோதரன் சச்சினும் பள்ளியில் ஒன்றாகவே படித்தோம். 2017 - இல் பிளஸ் டூ படிப்பை முடித்தோம்.  அதற்குப் பிறகு ஐபிசிசி தேர்வுக்கும், சிஏ தேர்வுக்கும்,  இருவரும் ஒன்றாகவே முயற்சி செய்தோம்.  இதில்  ஐபிசிசி தேர்வு, சிஏ தேர்வின் பழைய பாடத்திட்டத்தைக் கொண்டது. 2018 - இல் சிஏ படிப்புக்கு விண்ணப்பிக்கும்போது புதிய பாடத்திட்டம் வந்துவிட்டது.  இது எங்கள் இருவருக்கும் சற்று சிரமத்தைத் தந்தது. 

நாங்கள் இருவரும் சிஏ படிப்புக்கான மாதிரி வினாத்தாள்களை எடுத்துக் கொண்டு அவற்றுக்கு பதில் எழுதிப் பார்போம்.  நான் எழுதிய பதிலை என் அண்ணனும்,  என் அண்ணன் எழுதிய பதிலை நானும் திருத்துவோம். படிப்பதில் ஒருவருக்கொருவர் உதவியாக இருப்போம்.  அதேபோன்று குற்றங்குறைகளை எடுத்துச் சொல்வதற்கும் தயங்கமாட்டோம். நான் எப்போதாவது படிக்கும்போது சோர்ந்து போனால், என் அண்ணன் என்னை ஊக்கப்படுத்துவார்.

கரோனா தொற்றுப் பிரச்னை வந்தது ஒருவிதத்தில் எங்களுக்கு நல்லதாகப் போனது. நாங்கள் இருவரும் வீட்டில் இருந்தபடியே சிஏ தேர்வுக்காக கடுமையாக எங்களைத் தயார் செய்து கொள்ள கரோனா பொது முடக்கம் எங்களுக்கு உதவியது.  நிறைய படிப்பதற்கு... படித்ததை மறுபடியும் திரும்பவும் படிப்பதற்கு... நினைவுபடுத்திப் பார்ப்பதற்கு நிறைய நேரம் கிடைத்தது'' என்கிறார் நந்தினி.

சிஏ தேர்வுக்குப் படிக்கும் ஒருவர் எப்படி முயற்சி செய்து  படித்தால் வெற்றி பெற முடியும்?

""சிஏ தேர்வுக்காக  ஏகப்பட்ட புத்தகங்களை பல பதிப்பகங்கள் வெளியிட்டு இருக்கிறார்கள்.  நாம் எந்தப் புத்தகங்களைத்  தேர்வு செய்து படிக்க வேண்டும் என்பதில் தெளிவோடு இருக்க வேண்டும். முதலில் சிஏ தேர்வுக்கான பாடத்திட்டம் எது என்பதில் தெளிவு வேண்டும்.  அதற்காக  ஐசிஏஐ  வெளியிட்ட பாடப்புத்தங்களை முதலில் படிக்க வேண்டும்.  இது மிகவும் முக்கியம். ஏனென்றால் ஐசிஏஐ பாடத்திட்டத்தில் உள்ள பாடங்களில் இருந்துதான் கேள்விகள் கேட்பார்கள். 

மேலும்  சிஏ படிப்பு தொடர்பான கணிதத்தை மிகவும் தெளிவாக கற்றுக் கொள்ள வேண்டும். நிறையத் தடவை மீண்டும் மீண்டும் கணக்குகளைப் போட்டுப் பார்க்க வேண்டும்.

அதுமட்டுமல்ல, சிஏ படிப்புக்காக ஒருவர் தம்மைத் தயார் செய்யும்போது தொடக்கத்தில் ஒரு நாளைக்கு 11 - 12 மணி நேரங்கள் படிக்க வேண்டியதிருக்கும்.

அப்படிப் படித்துப் பழகிவிட்டால்,  அவர் தானாகவே  ஒரு நாளைக்கு 14 - 15 மணி நேரங்கள் படிக்கும் பழக்கத்துக்கு  மாறிவிடுவார்.  இவ்வாறு திட்டமிட்டு கடுமையாக முயற்சி செய்தால்தான்  சிஏ தேர்வில் உரிய ரேங்க் பெற முடியும்'' என்கிறார் நந்தினி.

அண்ணன் - தங்கை இருவருமே சிஏ தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்கள்.  சச்சின் 70 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்கிறார். இவர்கள் மட்டுமல்ல, இவர்களுடைய குடும்பமே அக்கவுண்டன்ட்ஸ் குடும்பமாக உள்ளது. தந்தை நரேஸ் சந்திர குப்தா வருமான வரி ஆலோசகராக பணிபுரிகிறார். அம்மா டிம்பிள் குப்தாவும் அக்கவுண்டன்ட்ஸ் பிரிவில் பட்டம் பெற்ற குடும்பத் தலைவி. 

குடும்பம் ஊக்கமளிக்காவிட்டால், எதையும் சாதிக்க முடியாது என்கிறார் நந்தினி.  

""வீட்டில் உள்ள பெண் பிள்ளை போட்டித் தேர்வுகள் எழுதும்போது குடும்பத்தினர் ஆதரவு தர வேண்டும்.  ஓரிரு முறை போட்டித் தேர்வுகளில் பெண் தோல்வி அடைந்துவிட்டால்,  பெற்றோர் அவளைத் தொடர்ந்து போட்டித் தேர்வு எழுத  அனுமதிப்பதில்லை. பெண் குழந்தைகளின் மீது அவர்களுக்கு நம்பிக்கை இருப்பதில்லை. இதுவே பையனாக இருந்தால் எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்வு எழுதலாம் என்கிற நிலையே இப்போதும் பல குடும்பங்களில் உள்ளது.  ஆனால் எங்கள் குடும்பத்தைப் பொருத்தவரை அப்பாவும் சரி... அம்மாவும் சரி...  என்னை மிகவும் ஊக்கப்படுத்திக் கொண்டே இருப்பார்கள். குழந்தைகளை ஆண், பெண் என்று அவர்கள் பிரித்துப் பார்ப்பதில்லை'' என்கிறார் நந்தினி.  

""சிஏ படிப்பு என்றில்லை, எந்தப் படிப்பு படித்தாலும், அதில் குறிப்பிடத்தக்க  வெற்றி பெற வேண்டுமானால் நேரத்தை வீணாக்கக் கூடாது.  ஒரு நாளைக்கு 15 மணி நேரம் வரை படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். அதுமட்டுமல்ல ... சிஏ தேர்வில் வெற்றி பெற முயற்சி செய்கிறவர்கள் கண்டிப்பாக சமூக ஊடகங்களின் பக்கம் திரும்பிப் பார்க்கவே கூடாது. கரோனா தொற்று தனிமனித இடைவெளியை எப்படி கண்டிப்பானதாக மாற்றியதோ, அதேபோல்,  சமூக ஊடகங்களிலிருந்து சற்றுத் தள்ளியே இருக்க வேண்டும். அப்போதுதான் வெற்றி பெற முடியும்'' என்கிறார் நந்தினி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மலர் சூட்டும்... சுவாதி கொண்டே

செங்குயிலே... சாந்தினி தமிழரசன்

மும்ப்ராவில் பையில் கண்டெடுக்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டைகள் !

ஒவியம்... தீப்ஷிகா!

உத்தரகண்டில் மீண்டும் மேக வெடிப்புகள்: 8 பேர் பலி

SCROLL FOR NEXT