ஒருவரின் இலக்குகளை நிறைவேற்றுவதற்கான இரண்டு முக்கியமான தகுதிகள் விடாமுயற்சியும் பொறுமையும்தான். எத்தனை தடைகள் வந்தாலும் உங்கள் கனவைத் தொடர்ந்து விரட்டினால்தான் அதனை அடைய முடியும்.
அந்த வகையில் வாழ்க்கையில் வெற்றியடைய, இலக்குகளை எட்ட கண்டிப்பாக "ரிஸ்க்' எடுக்க வேண்டும். துணிச்சலுடன் கடினமான முயற்சிகளை எடுக்கும்போது மட்டுமே வெற்றியாளராக ஆக முடியும். வெற்றியாளருக்கான தகுதிகளில் இது முதன்மையானதும் கூட.
இன்றைய தொழிலதிபர்கள், சாதனையாளர்கள் அனைவருமே வாழ்க்கையில் எதாவது ஒரு சூழ்நிலையில் ஆபத்தான, கடின முயற்சிகளை எடுத்தவர்கள்தான். அந்த முயற்சிகளால் வெற்றி மட்டுமே கிட்டும் என்பதற்கு
உத்தரவாதமில்லை. ஆனால், அந்த முயற்சியின் மூலமாக பெற்ற தோல்வி அனு
பவங்கள் உங்களின் அடுத்த வெற்றிக்கு வழிகாட்டியாக இருக்கும்.
"நீங்கள் வெற்றி பெற்றால், உங்களால் வழிநடத்த முடியும்! நீங்கள் தோற்றால், உங்களால் வழிகாட்ட முடியும்' - இது விவேகானந்தரின் கூற்று.
வாழ்க்கையில் உங்கள் கல்வி, வேலை, குடும்பம், உறவுகள், பொருளாதாரம் சார்ந்து நீங்கள் கடினமான ஆபத்தான முயற்சிகளை, முடிவுகளை எடுக்க வேண்டிய சூழ்நிலை வரலாம், வரும். சரியான நேரத்தில் அதனை எடுக்க முடியாவிட்டால் கண்டிப்பாக நீங்கள் எதிர்காலத்தில் வருந்த வேண்டிய நிலை ஏற்படும். இப்படியான கடின சூழ்நிலைகளும் உங்கள் வாழ்க்கையின் போக்கை மாற்றலாம்.
கடின முயற்சிகளை பயமின்றி எடுக்கும் திறன் வந்துவிட்டால் வெற்றி உங்களுக்கு அருகில் வரும். அந்த வகையில் ஆபத்தான முயற்சிகளை எடுப்பதற்குத் தடையாக இருப்பது பயம். அந்த பயத்தை விட்டொழிக்க வேண்டும்.
வெற்றியை அணுக விடாமுயற்சி, தன்னம்பிக்கை, பொறுமை உள்ளிட்ட பண்புகள் இருக்க வேண்டும் என்று கூறுவது இயல்பு. ஆனால், இவற்றுக்கெல்லாம் அடிப்படை பயம். மேற்குறிப்பிட்ட பண்புகளைப் பெறவேண்டுமெனில் பயம் இருக்கக் கூடாது.
இதுபோன்ற கடின முயற்சிகளை எடுக்க பழகிக்கொண்டால் பயம் தானாகவே உங்களைவிட்டு விலகிவிடும்.
வாழ்க்கை அனுபவங்களை கற்பதற்கு வயது ஒரு பொருட்டல்ல. ஒரே வாழ்க்கையில் அனைத்து விதமான அனுபவங்களையும் பெறுவது என்பதும் சாத்தியமில்லை. வாழ்வில் கடைசிநாள் வரை புதிய அனுபவங்களை கற்றுக் கொண்டுதான் இருக்க வேண்டும் என்பது மனிதனின் விதி. அவ்வாறான வாழ்க்கை அனுபவங்களைப் பெற வாழ்க்கையில் "ரிஸ்க்' எடுக்க வேண்டும். யாரும் கற்றுக்கொடுத்த வாழ்க்கைப் பாடங்களை அது கற்றுக் கொடுக்கும்.
வெற்றி கிட்டினால், நீங்கள் தான் இந்த உலகத்தில் முதன்மையானவர், சாதனையாளர். அந்த உணர்வினையும் இந்த கடின முயற்சிகள்தாம் தருகின்றன.
ஒருவேளை, உங்கள் எதிர்பார்ப்புகளின்படி நீங்கள் வெற்றி பெறவில்லை என்றாலும், நீங்கள் நிச்சயமாக அந்த பெருமுயற்சிக்கான பாராட்டுகளைப் பெறுவீர்கள். கற்றல் அனுபவங்களாக அது உங்கள் வாழ்க்கையின் இறுதி வரை பயணமாகும். உங்களின் எதிர்கால வெற்றிக்கு அவை தேவைப்படலாம். இது உங்களுக்கேயான தனிப்பட்ட அனுபவங்கள்.
அனுபவங்கள் சுட்டிக்காட்டும் தவறுகளை என்றும் நாம் மறக்கமாட்டோம். அடுத்தமுறை அதே தவறை செய்வதற்கு வாய்ப்புகள் குறைவு. மேலும், நீங்கள் எந்த இடத்தில் தேங்குகிறீர்கள் என்பதை அறிந்து கொண்டு சரி செய்ய அது உதவும்.
உங்கள் தற்போதைய நிலையை மேம்படுத்த புதிய உத்திகளை ஆராய்வது அவசியம். எந்த வழியில் சென்றால் வெற்றி கிட்டும் என்பது உங்களுக்கு அனுபவங்களின் வாயிலாக மட்டுமே புலப்படும். எனவே, கடின முயற்சிகளை எடுக்கும்போது அது உங்களுக்கு புதிய வழிகளை கண்டறிவற்கு வழிகாட்டும்.
தற்போதைய போட்டி நிறைந்த உலகில் திறன்களை வளர்த்துக்கொண்டு பல வழிகளில் இலக்குகளை அடைய முயற்சிக்க வேண்டும், அத்தகைய புதிய பல வழிகள் ஆபத்தான கடின முயற்சிகளினால் மட்டுமே சாத்தியப்படும் எனலாம்.
எந்தவொரு வெற்றிக்கும் தோல்வி வேண்டும் என்பது போல, தோல்விதான் முதல் வெற்றிக்கு வித்தாகிறது.
வெற்றி பெறும்போது நீங்கள் சாதனையாளராக மாறுகிறீர்கள்; அதுவே தோல்வியடையும்போது புத்திசாலியாக மாறுகிறீர்கள். ஆபத்தான முயற்சிகளில் தோல்வியும் கிட்டலாம், அந்த சூழ்நிலையில் உங்கள் கனவுகள் நிறைவேறாமல் போகலாம். ஆனால், அந்த தோல்வியை ஒரு புன்னகையுடன் கடந்து செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும்போது உங்களுடைய தன்னம்பிக்கை அதிகரிக்கிறது. உங்களின் மனபலம் கூடுகிறது. உங்களின் உள் வலிமையை அதிகரிக்கும் ஒரு காரணி தோல்வி மட்டுமே.
ஒருமுறை தோல்வியுற்று அடுத்த முயற்சி எடுக்கும்போது மிகவும் சாதாரணமாக நீங்கள் அந்த தோல்வியில் இருந்து மீள முடியும். அடுத்த முயற்சியே உங்களுக்கு தோல்வியில் இருந்து மீளும் தன்மையை அளிக்கிறது.
அடுத்த நிமிடம் நிச்சயமற்ற இந்த வாழ்க்கையில் ஒவ்வொருவரும் அனுபவங்களைத் தேடி, இலக்கைத் தேடி பயணப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். இலக்கினை அடைய பயம், கூச்சம், தாழ்வு மனப்பான்மை ஆகிய எதிர்மறைப் பண்புகளை உங்களிடம் இருந்து ஒதுக்கிவைத்துவிடுங்கள். வாய்ப்புகள் வரும்போது கடின முயற்சிகளை எடுக்கத் தயங்காதீர்கள். ஆபத்தை எதிர்கொள்ளும்போது மட்டுமே உங்களின் முழுமையான திறனை உங்களால் அறிய முடியும். எதையும் எதிர்கொள்ளத் துணிந்தவர்கள் ஆபத்தான கடின முயற்சிகளை எடுக்க ஒருபோதும் தயங்க மாட்டார்கள். உங்கள் இலக்கில் வெற்றி காண சற்று தாமதமானாலும் தனிப்பட்ட உங்களின் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி காணுங்கள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.