வெளிநாட்டில் படிக்க ஆசையா?
வெளிநாட்டில் உயர்கல்வி படிக்கும் முன் ஆராய வேண்டியவை நிறைய உள்ளன.
வெளிநாட்டில் உயர்கல்வி படிக்கும் முன் ஆராய வேண்டியவை நிறைய உள்ளன. பெற்றோர் நன்கு ஆலோசித்து, தங்களது பிள்ளைகளைச் சேர்ப்பதே சாலச் சிறந்தது. இந்த நிலையில், வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிப்பதற்கு முன் என்னென்ன செய்ய வேண்டும், எப்படி தேர்வு செய்ய வேண்டும் என்று ஆலோசிப்பது அவசியமாகிறது.
கவனிக்க வேண்டியவை
வெளிநாட்டில் குறைந்த செலவில் படிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் பயணம் செல்பவர்கள், பலமுறை யோசிக்க வேண்டும். ஏனெனில் அங்கு கல்விச் செலவு மட்டும் செலவல்ல. தங்குமிடம், வாடகை, சாப்பாடு ஆகியவற்றுக்கு படிப்புக்கு ஆகும் செலவைவிட அதிகம் செலவிட வேண்டிய சூழலும் ஏற்படலாம்.
தேர்வு செய்யப்படும் நாட்டின் அரசியல் நிலவரம், உள்நாட்டுப் பிரச்னைகள், நிதிநிலைமைகள், அண்டை நாடுகளுடனான அணுகுமுறைகள் போன்றவற்றையும் கவனத்தில் கொள்வது அவசியம். தாய்நாட்டில் இருந்து சென்றுவர பயணச் செலவும் முக்கியமானது.
இதுதவிர, தேர்வு செய்யப்படும் பல்கலைக்கழகத்தின் தரவரிசை, பாடத் திட்டங்கள், கற்பித்தல் முறை, தொழில்வாய்ப்புகள், வளாகத் தேர்வு, விடுதிகளின் நிலை, பாடநெறிமுறைகள், ஆராய்ச்சி முறைகள் போன்றவையும் முக்கியமானதாகும்.
வெளிநாட்டுக் கல்விக்கு செலவிடும் தொகை, எதிர்கால முதலீடுபோல்தான். அங்கேயே வேலை வாங்கி, அப்படியே செட்டிலாகி விடவேண்டும்" என்ற லட்சியம் உள்ளவர்களுக்கே வெளிநாட்டுக் கல்வி ஏற்றது.
பெற்றோரைவிட்டு தனித்திருக்கப் பழக வேண்டும். பயணிக்கும் நாட்டில் உள்ள புதிய கலாசாரத்தை எதிர்கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும். மொழித் தடையையும் சமாளிக்கும் திறமை அவசியம்.
நாட்டின் தட்பவெப்பமும் பொருந்த வேண்டும். மிகுந்த குளிர் நிலவும் நாடுகளும், வெப்பம் மிகுந்த நாடுகளும் உண்டு. அங்கு சென்று ஒரு வருடம் கூட தாக்குப் பிடிக்க முடியாமல் திரும்பியவர்கள் உண்டு. படிப்பை முடிக்காமல் நாடு திரும்ப மாட்டேன் என்கிற உறுதியும், விடாமுயற்சியும் இருந்தால்தான் சாதிக்க முடியும்.
கண்காணிப்பற்ற சுதந்திரம் பலரையும் தடம் மாற்றிவிடும். வெவ்வேறு நாட்டு மாணவர்களின் நட்பு, பெற்றோரின் கட்டுப்பாடு இல்லாத சூழலில் மிகுந்த பொறுப்புணர்வு இருந்தால்தான் தடம்புரளாமல் படித்து முடிக்க முடியும். இதை மிகவும் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். அந்தந்த நாட்டின் சட்டத் திட்டங்களுக்கு உட்பட்டு நடக்க வேண்டும்.
இந்தத் தகவலை இந்தியாவில் உள்ள வெளிநாடுகளின் தூதரங்கள், துணைத் தூதரங்களில் கேட்டறியலாம். இதுதவிர, தமிழக அரசே வெளிநாட்டு வாழ் இந்தியர் நலன் துறை அலுவலகத்திலும், இந்திய அரசின் வெளியுறவுத் துறை அலுவலகத்திலும் உறுதி செய்யலாம்.
ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்ட நாடுகளுக்குச் செல்ல, ஆங்கிலம் பேசும் திறன் தேவை. வெளிநாடுகளில் இளநிலைப் படிப்பை படித்து முடிக்க குறைந்தபட்சம் ரூ.20 லட்சம் வரை செலவாகும். மருத்துவம் போன்ற படிப்புகளுக்கு இன்னும் கூடுதல் செலவு ஏற்படலாம். எனவே பொருளாதார வசதியையும் முன்கூட்டியே திட்டமிட வேண்டும்.
இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ்வதே சிறந்தது....
இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ்வதே சிறந்தது என்கிறார் கல்வியாளர் டி.எஸ்.விநாயகம். இதுகுறித்து அவர் கூறியதாவது:
""வெளிநாட்டில் சென்று படிக்கும் முன் மாணவர்கள், அவர்களது பெற்றோர் நன்கு சிந்திக்க வேண்டும். இப்போது முக்கியமாக நீட் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், வெளிநாட்டில் சென்று மருத்துவம் பயில விரும்புகின்றனர். இவர்கள் அடுத்த முறை நீட் தேர்வை எழுதி இந்தியாவிலேயே பயில முயற்சிக்க வேண்டும். இல்லையெனில், பொறியியல், விவசாயம், வணிகவியல் போன்ற பாடப்பிரிவுகளையும், மருத்துவம் சார்ந்த இதரப் பாடப்பிரிவுகளையும் தேர்வு செய்யலாம்.
உக்ரைன் நாட்டில் ஏற்பட்ட பிரச்னையையடுத்து, அந்த நாட்டில் படித்த மாணவர்கள் இப்போது இணையவழியில் மருத்துவக் கல்வியை பயில்கின்றனர். இவர்களால் எப்படி சிகிச்சை அளிக்க முடியும். இதுதவிர, வெளிநாட்டில் இருக்கும் மருத்துவ முறையும், பரிசோதனைகளும் இந்திய முறைக்கு முற்றிலும் வேறுபட்டது. ஆகவே, மருத்துவம் பயில வெளிநாடு செல்வோர் சிந்திக்க வேண்டியது அவசியம். உலக அளவில் மருத்துவத்தின் முக்கியத் தலைநகராக சென்னை உள்ளது. ஆனால், இந்தியர்கள் வெளிநாட்டில் சென்று பயில ஆசைப்படுவது ஏன்?
வெளிநாட்டில் சென்று பயில்வோர் இடைத்தரகர்கள், தனியார் நிறுவனங்களை நம்புவதைத் தவிர்க்க வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் அங்கீகாரம் பெற்ற முகமைகளின் வாயிலாகவே சேர வேண்டும்.
கடவுச்சீட்டுகள், விசாக்களைப் பெறுவது எளிது. ஆனால், விசாக்களில் கல்வி பயில விசா உள்ளதா என்று பார்க்க வேண்டும். எந்தெந்த நாடுகளுக்குச் செல்கிறோமோ அந்த நாட்டின் மொழியை ஓராண்டுக்குள் கற்றுத் தருகிறார்கள். தொடர்ந்து பயிலலாம். பலர் தாக்குப்பிடிக்க முடியாமல், லட்சங்களை இழந்து திரும்பிவிடுவோரும் உண்டு. மாணவிகளாக இருந்தால் நன்கு விசாரித்தே அனுப்ப வேண்டும். பல மாணவர்கள் வெளிநாட்டில் சென்றுவிட்டு, பணச் செலவுகள்அதிகரிப்பால் மாலை நேரத்தில் பணிபுரிந்து செலவுகளைச் சமாளித்து வாழ்க்கையில் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
படிப்பில் சேரும் முன் ஒரு தொகையையும் சேர்ந்தவுடன் கூடுதல் தொகையையும் கேட்டு பாதிக்கப்பட்டு இடையில் கல்வி நின்றவர் ஏராளம். இவ்வாறு பல்வேறு பிரச்னைகளின் மத்தியில் கல்வி பயில்வதைவிட, இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ்வதே சிறந்தது. உள்நாட்டில் உள்ள உயர்கல்வி நிறுவனத்தைத் தேர்வு செய்து பயில்வது சிறந்தது'' என்றார்.