இளைஞர்மணி

அவசியம்... சுயமதிப்பீடு!

உங்கள் வீட்டில் இளம் வயதினர் தங்களைத் தாங்களே விமர்சித்துக்கொள்கிறார்களா?

கோமதி எம். முத்துமாரி


உங்கள் வீட்டில் இளம் வயதினர் தங்களைத் தாங்களே விமர்சித்துக்கொள்கிறார்களா? மற்ற இளம் வயதினரைப் போல, தான் சிறப்பாக இல்லை என்று உணர்கிறார்களா? தாழ்வு மனப்பான்மை அதிகம் காணப்படுகிறதா? நம்பிக்கை இல்லாமல் தோல்வியை நினைத்து கவலைப்படுகிறார்களா? அவ்வாறெனில் அவர்களுக்குத் தங்களைப் பற்றிய சுயமதிப்பு குறைவாக இருக்கிறது என்று அர்த்தம்.

தன்னம்பிக்கையை அதிகரித்து சவால்களை எதிர்கொள்வதற்கும், நிம்மதியான வாழ்வுக்கும், ஒவ்வொருவருக்கும் தங்களைப் பற்றிய சுய மதிப்பீடு செய்து கொள்வது என்பது மிகவும் முக்கியமானது; அவசியமானதும் கூட. உங்களைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது இங்கு முக்கியமில்லை. மாறாக, உங்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்பது மிகவும் முக்கியம்.

படிப்பு, வேலை, பணம் உள்ளிட்டவற்றை சாராது மிகவும் சிலரே தங்களைப் பற்றி பெருமையாக நினைக்கிறார்கள். பெரும்பாலானோர் தாழ்வு மனப்பான்மையுடன் வாழ்கிறார்கள்.

பெரியவர்கள் மட்டுமின்றி இளைஞர்களிடம் கூட இன்று தாழ்வு மனப்பான்மை இப்போது அதிகரித்து காணப்படுகிறது.

இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. தன்னுடைய நிறம், தோற்றம், திறமை குறித்து பிறரின் விமர்சனங்களை எதிர்கொள்ளுதல், சவால்களைச் சந்திக்கும் திறன் இல்லாமை, எதிர்மறை பழக்க வழக்கங்கள் ஆகியவை போன்ற பல சூழ்நிலைகள் தன்னைப் பற்றிய சுயமதிப்பு குறைவதற்கு காரணங்களாகின்றன.

ஆனால், இப்படிப்பட்ட இளைஞர்களிடம் நேர்மறையாக சில வார்த்தைகளைக் கூறினால் போதும், இந்த சிக்கலை எளிதில் தீர்த்து விடலாம்.

இளைஞர்களிடம் சுய மதிப்பை அதிகரிக்கும் வழிகள்:

ஒப்பிடுதல்:

ஒருவருக்கு தன்னைப் பற்றிய சுயமதிப்பு குறைவதற்கு, அவரிடம் ஏற்பட்ட தாழ்வு மனப்பான்மையே அடிப்படைக் காரணம். அதற்கு சில சூழ்நிலைகள் காரணமாகின்றன.

கல்லூரிகளில் அல்லது வேலை செய்யும் இடங்களில் பிற இளம் வயதினருடன் தன்னுடைய திறமைகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, சிலருக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறது. மேலும், அவர்கள் தாம் மட்டுமே பாதிக்கப்படுகிறோம் என்று நினைக்கிறார்கள். தம்மால் வெற்றி பெற முடியாது; தான் புத்திசாலி இல்லை என்றெல்லாம் நினைக்கிறார்கள். இதனால் அந்த இளம் வயதினரின் தன்னம்பிக்கை சீர்குலைந்து விடுகிறது.

அந்த நேரத்தில் இளம் வயதினருக்கு கல்லூரியிலோ அல்லது வீட்டிலோ ஆறுதல் தேவைப்படுகிறது. அதனை உணர்ந்து பெற்றோர், ஆசிரியர்கள், நண்பர்கள் அவர்களுக்கு அறிவுரை கூறினால் பிரச்னை தீர்ந்துவிடும்.

பெற்றோர்களும் ஆசிரியர்களும், இளைஞர்களிடம் உள்ள தவறுகளைத் திருத்த வேண்டுமே தவிர, இளம் வயதினரை பிறருடன் ஒப்பிடவே கூடாது.

கிண்டல் செய்தல் இளம் வயதினரை மட்டுமின்றி, எவரொருவரையும் மிகவும் சாதாரணமாக அவரது நிறம், தோற்றம், நடவடிக்கையை வைத்து கிண்டல் செய்துவிடுகிறோம். ஆனால், அது அவர்களிடத்தில் எந்தவிதமான எதிர்மறை எண்ணங்களைத் தூண்டுகிறது என்பதை யாரும் சிந்தித்துப் பார்ப்பதில்லை. அது இளைஞர்களின் ஆழ் மனதில் பதிவதுடன் வாழ்நாள் முழுவதும் அவர்களுக்கு வலியை ஏற்படுத்துகிறது.

உதாரணமாக, இந்த இளைஞன் மிகவும் பருமனாக இருக்கிறான் என்று பிறர் கூறிவிடும் ஒரு வார்த்தை, அந்த இளைஞரின் மனதில் ஆழமாகப் பதிந்துவிடுகிறது. இதனால், தான் அழகில்லை என்ற எண்ணம் ஏற்பட்டுவிடுகிறது.

பெற்றோரோ அல்லது வேறொருவரோ இளம் வயதினரிடம் உடல் பருமனைப் பற்றி குறைவாகப் பேசாமல், உடல் பருமனைக் குறைக்க எவற்றைச் சாப்பிட வேண்டும்? எம்மாதிரியான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்?

என்பன போன்ற ஆலோசனைகளை வழங்க வேண்டும். உடல் பருமன் என்பது ஒரு பிரச்னையே இல்லை என்று கூறி தாழ்வுமனப்பான்மையை இளம் வயதினரிடம் இருந்து விரட்ட வேண்டும்.

பாராட்டுதல்

இளம் வயதினர் எடுக்கும் ஒவ்வொரு நேர்மறையான முயற்சிகளுக்கும் பாராட்டு மிகவும் அவசியமானது.

உதாரணமாக இளம் வயதினர் ஒருவருக்கு உதவினாலோ வகுப்பில் முதலிடம் பெற்றாலோ அவரைப் பாராட்டுவது அவசியமானது.

அதேநேரத்தில் சிலர் இளம் வயதினர் செய்யும் எதிர்மறைச் செயல்களை அதிகமாகப் பாராட்டுவார்கள். அது மிகவும் தவறு. இளம் வயதினர் என்பதற்காக அவர் செய்யும் தவறை ஒருபோதும் ஆமோதிக்கக் கூடாது.

சரியானவற்றுக்கு உண்மையானவற்றுக்கு மட்டும் பாராட்டு தெரிவியுங்கள்.

தன்னம்பிக்கையை வளர்த்தல்

இளம் வயதினரின் நண்பர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும். இளைஞர்களை அவர்களின் அன்றாட வேலைகளை அவர்களையே செய்யும்படி சொல்லுதல் அவசியம். அவர்களின் வேலைகளை அவர்களே செய்யும்போது அவர்களுடைய சுய மதிப்பு அதிகமாகும். இதனால் அவர்களின் தன்னம்பிகையும் அதிகரிக்கும்.

மேலும், "உன்னால் முடியாதது எதுவும் இல்லை' என்று தொடர்ந்து கூறி இளம் வயதினரை ஊக்கப்படுத்த வேண்டும்.

சுய மதிப்பீடு அவசியம்!

தங்களைப் பற்றி, தங்களுடைய திறமைகளைப் பற்றி நன்றாக உணரும், மதிப்பீடு செய்யும் இளைஞர்களே தன்னம்பிக்கையுடன் புதிய விஷயங்களில் ஈடுபடுகிறார்கள். அந்த விஷயத்தில் வெற்றி பெற தங்களால் முடிந்தவரை போராடுகிறார்கள். பலமுறை தோல்வி ஏற்பட்டாலும் போராடுவார்கள். எனவே இளைஞர்கள் தம்மைப் பற்றிய சுயமதிப்பீடு செய்வது அவசியம்.

சுயமதிப்பீடு செய்து கொண்ட பிறகு, அதன் அடிப்படையில் தங்களிடம் உள்ள குறைகளைப் போக்கவும், நிறைகளை மேம்படுத்திக் கொள்ளவும் முயற்சி செய்ய வேண்டும்.

தான் வளர்த்துக் கொள்ள வேண்டிய திறமைகளைக் கண்டறிந்து, அதற்கான முறையான செயல்பாடுகளில் தங்களை இளம் வயதினர் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

ஓர் இளைஞர் தன்னைப் பற்றி பெருமையாக உணர்ந்து விட்டாலே தன்னம்பிக்கை, விடா முயற்சி, உழைப்பு என மற்ற பண்புகளும் தாமாகவே அவர்களுக்கு வந்துவிடும். இலக்கை நோக்கி முன்னேறி வாழ்வில் வெற்றியும் காண்பார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

SCROLL FOR NEXT