முகப்பு
மகளிர்மணி

வில்லுக்கு கட்டுப்பாடுகள் கிடையாது!

சமீபகாலமாக தொடர்களில் நடிப்பதில் இருந்து விலகி இருந்த தேவிக்ருபா, தற்போது ஜீ தொலைக்காட்சியில் "பிரியசகி',

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:43 AM
பகிர்:

சமீபகாலமாக தொடர்களில் நடிப்பதில் இருந்து விலகி இருந்த தேவிக்ருபா, தற்போது ஜீ தொலைக்காட்சியில் "பிரியசகி', ராஜ் தொலைக்காட்சியில் "வெள்ளித்திரை', வசந்த் தொலைக்காட்சியில் "கிச்சன் கில்லாடிகள்' என ரவுண்டு கட்டி வருகிறார்.  அவரை சந்தித்தோம்:

தென்றல் தொடருக்கு பிறகு வேறு எந்த தொடரிலும் உங்களை காணோமே?

 தென்றல் தொடருக்கு பிறகு ஒரு பிரேக் தேவைப்பட்டது. அதனால் கொஞ்ச நாட்கள்  தொடரில் நடிப்பதை மட்டும் நிறுத்தி வைத்திருந்தேன்.  மற்றபடி ராஜ் தொலைக்காட்சியில் வெள்ளித்திரை என்ற நிகழ்ச்சியையும், வசந்த் தொலைக்காட்சியில் கிச்சன் கில்லாடிகள் என்ற நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கிக் கொண்டுதான் இருந்தேன். தற்போது மீண்டும் "பிரியசகி' தொடரின் மூலம் "சிநேகா' என்ற கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்து வருகிறேன். இதைத்தவிர  விரைவில் வசந்த் தொலைக்காட்சியில் "சங்கீத ரியாலிடி ஷோ' ஒன்று தொடங்கவுள்ளது. அதற்கான ஆடிஷன் தற்போது நடந்து வருகிறது. அந்த நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கவுள்ளேன்.

பொதுவாக தொடர்களில் நடிப்பவர்கள். ஒரே நேரத்தில் பல தொடர்களில் நடித்து எல்லா சேனல்களிலும் மாறி மாறி வரவே ஆசைப்படுவார்கள்? ஆனால் உங்களை அப்படி பார்க்க முடிவதில்லையே? ஏன்? 

 நான் நிறைய தொடர்களில் நடிப்பதில்லை. காரணம்,என்னைச் சுற்றி உள்ளவர்களின் வட்டம் மிகவும் குறுகியது. நான் நடிக்க வந்ததிலிருந்து இன்றுவரை மீண்டும் மீண்டும் ஒரே கம்பெனியின் தொடர்களில் மட்டுமே நடித்துக் கொண்டிருக்கிறேன். அதைத்தாண்டி வெளி கம்பெனிகளில் ஏனோ நடிக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் இருந்துவிட்டேன். இதனாலேயே என்னுடைய வட்டம் ஒரு கட்டத்துக்குள்ளேயே இருந்துவிட்டது. இப்போது அதிலிருந்து வெளியே வந்து  மற்ற கம்பெனி தொடர்களிலும் நடிக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். ஒருவேளை  வருங்காலத்தில் நிறைய தொடர்களில் நடித்தாலும் நடிக்கலாம்.

வில்லி கதாபாத்திரம் உங்களுக்கு புதிதாயிற்றே?

ஆம். புதிதுதான். ஆனால் இந்த அனுபவம் இப்போது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. கேரக்டர் ரோல்களில் அழுது அழுது நடிப்பதைவிட, வில்லியாக நடிக்கும் பொழுது மக்களிடம் வெகு சீக்கிரத்தில் நல்ல ரீச் கிடைப்பதாக உணர்கிறேன்.  வில்லி ரோலில் நடிப்பதற்கு நிறைய ஸ்கோப் இருக்கிறது. மேலும் இப்படித்தான் இருக்க வேண்டும். இப்படித்தான் பேச வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் இல்லாமல் நாம் நினைப்பதை சுதந்திரமாக செய்ய முடிகிறது. அதுபோன்று விதவிதமான சேலைகளை அணிந்து கொள்ளலாம். எவ்வளவு  வேண்டுமானாலும் மேக்கப் போட்டுக் கொள்ளலாம்.

தற்போது புதியவர்கள் நிறையபேர் நடிக்க வந்து உச்சத்தில் இருக்கிறார்களே? அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

அவரவருக்கு அமைகிற கேரக்டர்தான் அதற்கு காரணம். அதுபோன்று திறமையான டைரக்டரும், நல்ல ஸ்கிரிப்ட் ரைட்டரும் அமைந்துவிட்டால் சாதாரண கேரக்டராக இருந்தால் கூட எடுக்கிற விதத்தில் எடுத்து சூப்பர் ஹிட் ஆக்கிவிடுவார்கள். மேலும் நமது இன்டஸ்ட்ரியைப் பொறுத்தவரை ஒரு சாம்பிரதாயம் உண்டு. ஒருவர் ஒரு ஹிட் கொடுத்துவிட்டால் அடுத்தடுத்து அவர்களை உச்சத்திற்கு கொண்டு சென்று விடுவார்கள். அதில் திறமையுள்ளவர்கள் வெற்றிகளை தக்கவைத்துக் கொள்கிறார்கள் அவ்வளவுதான்.

இன்னொரு விஷயம், ஏன்னவென்றால் நான் நடிக்க வந்து பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது அன்றைக்கு இருந்ததை விட இன்று டெக்னாலஜி நல்ல வளர்ச்சிப் பெற்றுள்ளது. அதற்கு தகுந்தாற்போல் நம்மை அப்டேட் செய்து கொண்டே இருந்தால் எந்த காலகட்டத்திலும் பிரெஷ்ஷாக தெரிவோம்.

பெரியதிரையில்  நடிப்பதில் ஆர்வம் இருக்கிறதா?

நிச்சயமாக உண்டு. சில ஆண்டுகளுக்கு முன்பே பெரியதிரையில் இரண்டு படங்களில் நடித்தேன். ஆனால் ஏதோ காரணத்தினால் அது வெளியாகவில்லை. அதன்பிறகு பெரியதிரையைப் பற்றி யோசிக்கவே இல்லை. ஆனால் பெரியதிரையில் காமெடி ரோலில் நடிக்க வேண்டும் என்று ஆசையிருக்கிறது. ஏனென்றால் சில காலமாக காமெடி கேரக்டர்களில் யாரும் நிலைத்து நிற்கவில்லை அந்த இடத்தைப் பிடிக்க வேண்டும் என்றும் ஆசையிருக்கிறது.

வருங்கால திட்டம்?

மனதை தொடுகிற நல்ல குறும்படங்களை இயக்க வேண்டும் என்று ஆசையிருக்கிறது. அடுத்தபடியாக வீட்டில் திருமண ஏற்பாடுகள் நடந்து வருகிறது.  என் மீது அன்பு செலுத்தி பாதியில் விட்டு பிரிந்துப் போகாமல் எப்போதும் துணையாக இருக்கும்படியான மாப்பிள்ளையைப் பாருங்கள் என்று அம்மாவிடம் சொல்லியிருக்கிறேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.