முகப்பு
மகளிர்மணி

எனது தந்தைக்கு அஞ்சலி செலுத்த வந்தேன்! சொல்கிறார் : அனுஷ்கா சங்கர்

மூன்றாண்டுகளுக்கு முன்பு பெங்களூருவில் தன்னுடைய தந்தை பண்டிட் ரவி சங்கருடன் இணைந்து சிதார் இசை நிகழ்ச்சியை அனுஷ்கா சங்கர்

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:55 AM
பகிர்:

மூன்றாண்டுகளுக்கு முன்பு பெங்களூருவில் தன்னுடைய தந்தை பண்டிட் ரவி சங்கருடன் இணைந்து சிதார் இசை நிகழ்ச்சியை அனுஷ்கா சங்கர் நடத்தியபோது, ரவிசங்கர் இயற்றிய "ராகா ஜோகீஸ்வரி' அறிமுகப்படுத்தப்பட்டது. தந்தையும் மகளுமாக இணைந்து நடத்திய அந்த நிகழ்ச்சிதான் ரவிசங்கரின் கடைசி நிகழ்ச்சியாகும்.

 அவரது மரணத்திற்கு பின்னர் தன்னுடைய கணவரும், இயக்குநருமான ஜோரைட் மற்றும் இருமகன்களுடன் லண்டனில்  வசித்து வரும் அனுஷ்கா,  மீண்டும் இந்தியாவில் மும்பை, டெல்லி, ஜெய்ப்பூர், பெங்களூரு ஆகிய நகரங்களில் தன்னுடைய தந்தை ரவிசங்கருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இசை நிகழ்ச்சிகள்  நடத்த வந்துள்ளார்.

தன்னுடைய கணவர் ஜோரைட், மகன்கள்

ஜுபின் மற்றும் மோகனுடன் வந்து இந்தியாவில் இசை நிகழ்ச்சிகளை நடத்திய அனுஷ்கா, தன்னுடைய கருத்துகளை இங்கு பகிர்ந்து கொள்கிறார்:

""என்னுடைய தந்தை பெங்களூருவில் நடத்திய கடைசி இசை நிகழ்ச்சியின் போது ராகா ஜோகீஸ்வரியை அறிமுகப்படுத்தினார். இந்திய இசைக் கருவிகளில் முதன் முதலாக சிதாரை மேல் நாட்டினருக்கு அறிமுகப்படுத்திய முதல் இசைக் கலைஞர் என்னுடைய தந்தைதான். இப்போது இந்திய இசை என்றாலே அவர்களுக்கு முதலில் நினைவுக்குவருவது சிதாரும், எனது தந்தையும்தான். இந்திய இசையையும் மேற்கத்திய இசையையும் இணைத்து பீட்டில்ஸ் குழுவினருடன் என்னுடைய தந்தை நடத்திய இசை நிகழ்ச்சிகள் உலகப் பிரசித்தி பெற்றவையாகும்.

நானும் எனது தந்தையைப் போலவே பிரபல இசை மேதைகளான யஹுதி மெனுஹின், ஜுபின் மேத்தா, ஜார்ஜ் ஹாரிசன் போன்றவர்களைச் சந்தித்து நம்முடைய இந்திய இசையை அவர்களுடன் பகிர்ந்து கொள்வதுண்டு. இசை ஒன்றுதான் நம் அனைவரையும் ஒன்றிணைக்கும் பொது மேடையாகும்.

 இந்தியாவில் இசை நிகழ்ச்சிகளை நடத்துவதன் மூலம் எனது தந்தைக்கு அஞ்சலி செலுத்துவதாகவே கருதுகிறேன். "ஹோம்' என்ற இசை ஆல்பத்தை தயாரித்து வெளியிடுவதற்காக சொந்த பணத்தை நான் செலவழிக்க வேண்டியதாயிற்று. இரண்டு தலைமுறையினரை இந்த மீடியாக்கள் எவ்வளவு வித்தியாசமாக பார்க்கிறார்கள் என்பதை நினைக்கும்போது வேதனையாக இருக்கிறது. என்னுடைய தந்தையைப் போலவே என்னாலும் கிளாசிக்கல் ஆல்பத்தை வெளியிட முடியுமென்ற நம்பிக்கை இருக்கிறது. என்னுடைய ரசிகர் வட்டம் சிறியதுதான். என் தந்தையைப் போலவே எனக்கும் புகழ் கிடைப்பதற்குச் சிறிது காலம் ஆகலாம். அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நானும்  "மஞ்ச்காமஜ்' என்ற புதிய ராகத்தை உருவாக்கியுள்ளேன். விரைவில் வெளியிட உள்ள   "லேண்ட் ஆஃப் கோல்டு' என்ற ஆல்பத்தில் அந்த ராகம் இடம்பெறும்.

 என்னுடைய இரண்டாவது மகனுக்கு இதுதான் முதல் இந்தியப் பயணம். என்னுடைய மகன்களும் இசை பாரம்பரியத்தைப் பின்பற்ற வேண்டுமென்று  நான் எதிர்பார்க்கவில்லை. அவர்களுக்கே இதில் ஆர்வம் ஏற்பட்டால் நிச்சயம் உதவி செய்வேன்.

 இந்தியச் சங்கீதத்தை நான் தனிப்பட்ட முறையிலோ தொழில் ரீதியாகவோ விட்டுவிலக மாட்டேன். இந்தியச் சங்கீதத்துடன் உள்ள தொடர்புவிடுபடக் கூடாதென்பதற்காகவே   அடிக்கடி இந்தியா வருகிறேன். அண்மையில் இங்கு நடத்திய நிகழ்ச்சிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பது என்னுடைய தந்தைக்கு கிடைத்த பெருமையாகவே கருதுகிறேன்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.