மகளிர்மணி

மருந்தில்லா மருத்துவம் யோகாசனம்!

பள்ளி, கல்லூரி தொடங்கி வேலைக்குச் செல்லும் பெண்கள், முதியோர் என அனைத்து வயது பெண்களும் ஏதோ ஒரு காரணத்தால் மன அழுத்தத்தினால் பாதிக்கப்படுகின்றனர்.

தினமணி

பள்ளி, கல்லூரி தொடங்கி வேலைக்குச் செல்லும் பெண்கள், முதியோர் என அனைத்து வயது பெண்களும் ஏதோ ஒரு காரணத்தால் மன அழுத்தத்தினால் பாதிக்கப்படுகின்றனர். இந்த மன அழுத்தம்தான் எதிர்காலத்தில் பலவித நோய்களுக்கு மூல காரணியாக உள்ளது.

"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்பது போல, நமது உடல் நோய் நொடி இல்லாமல் இருக்க மருந்தில்லா மருத்துவமான யோகாசனத்தை நாடுவோரின் எண்ணிக்கை தற்போது அதிகரித்த வண்ணம் உள்ளது. யோகாசனங்கள் மனதை ஒருமுகப்படுத்தவும் உதவுகிறது. மேலும் சீரான நேர்மறையான எண்ணங்களைப் பெற்று உடல் நலம் பெறவும் உதவுகிறது.

யோகாசனங்கள் உடலை நோயில் இருந்து காக்கும் தடுப்பு அரணாக விளங்குகிறது. ஆசனங்கள் உடலில் உள்ள உள்ளுறுப்புகளைத் தூண்டிவிடுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி கூடுகிறது. பல வித நோய்களுக்கு மருந்தில்லா மருத்துவமாக யோகக்கலை விளங்குகிறது.

யோகக் கலையின் மகிமையை உணர தொடங்கிய மேற்கத்திய நாட்டினர் தற்போது யோகாவை கற்கத் தொடங்கியுள்ளனர். யோகாவின் பிறப்பிடமான இந்தியாவில் யோகக் கலை மீண்டும் புத்துயிர் பெற்று வருகிறது.   இன்றையச் சூழலில் உறக்கமின்மை, உடல்பருமன், தைராய்டு, கழுத்து வலி, இடுப்பு வலி, மூட்டு வலி, பிரசவத்திற்குப் பிந்தைய உடல் பருமன், சைனஸ் என பலவித நோய்களுக்கு ஆண்களும் சரி, பெண்களும் சரி தொடர் மருத்துவ சிகிச்சைப் பெற்று வருவதை காண முடிகிறது.

குறிப்பாக மகளிருக்கான மன அழுத்தப் பிரச்னை தொடங்கி பிரசவத்திற்குப் பிந்தைய உடல் பருமன், தைராய்டு பிரச்னைகளுக்கு மருந்தில்லா மருத்துவம் யோகாசனம் மூலம் தீர்வு காணலாம் என்கிறார் சேலத்தைச் சேர்ந்த மாற்று மருத்துவ முறை மருத்துவர், யோகா தெரபிஸ்ட் யுவராணி.

அவர் தரும் ஆசனங்களின் ஆலோசனைகளும், செய்முறை மற்றும் மருத்துவ பயன்கள் விவரம் (முறையாக யோகாசனம் கற்று தருவோரின் வழிகாட்டுதலின் பேரிலேயே ஆசனங்களை செய்ய வேண்டும்).

ஹலாசனா

செய்முறை:

1. விரிப்பின் மீது மல்லார்ந்த நிலையில் படுக்கவும்.

2. கால்களை மடக்கி, கைகளை தரையில் அழுத்தம் கொடுத்து, இடுப்புப் பகுதியை மேல் நோக்கி உயர்த்தவும்.

3. பின்னர் இடுப்புப் பகுதியை கைகளால் தாங்கி கால் பாதங்களை கீழ் இறக்கி தரைப்பகுதியை தொடவும். பின்னர் கைகளை கீழே வைக்கவும்.

4. ஐந்து மூச்சு நேரத்திற்குப் பின் மீண்டும் கைகளால் இடுப்பை தாங்கி உயர்த்தி மீண்டும் பழைய நிலைக்கு (சர்வாங்காசனா) வந்து பின்னர் உடலை முழுவதுமாக தளர்த்தவும்.

பயன்கள்

1. மனதை அமைதிப்படுத்துகிறது.

2. மன அழுத்தம் மற்றும் களைப்பைப் போக்குகிறது.

3. முதுகெலும்பின் நெகிழ்வுத்தன்மையை அதிகப்படுத்துகிறது.

4. தைராய்டு சுரப்பியை நன்கு இயங்கச் செய்கிறது.

5. பெண்களுக்கு மிக முக்கியமான ஆசனமாகும்.

பரிவிருத்த ஜானு சிரசாசனா

செய்முறை:

1. விரிப்பின் மீது கால்களை விரித்து அமரவும்.

2. இடது காலை மடக்கி தொடைப் பகுதியில் வைக்கவும்.

3. வலது காலை நீட்டிய நிலையில் வலப் புறம் தலையை சாய்த்து பக்கவாட்டில் தலையால் மூட்டை தொட்ட நிலையில் வலது கையை முன்புறமாக கொண்டு வந்து வலது பாதத்தை பிடித்து, இடது கையை பக்கவாட்டாக எடுத்து வலது பாதத்தைப்

பிடிக்கவும்.

4. ஐந்து மூச்சுக்குப் பிறகு மீண்டும் இயல்பு நிலைக்கு வர

வேண்டும். இடப்பக்கமும் இதேபோல செய்யவும்.

பயன்கள்

1. இது முதுகுதண்டோடு தோள்பட்டைகள் மற்றும் பின்னத்தொடைகளையும் சேர்த்து தசைகளை நீட்சிப்படுத்துகிறது.

2. வயிற்றின் அனைத்து உள் உறுப்புகளை இயங்கவும், பலம் பெறவும் செய்கிறது.

3. இது இன்சோம்னியா எனப்படும் உறக்கம் தொடர்பான பிரச்னைகளுக்கு அற்புத பலனை தருகிறது.

4. முதுகு வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கிறது.

5. களைப்பு மற்றும் கவலையை நீக்குகிறது.

6. தலைவலி மற்றும் அது சார்ந்த பிணிகளை சரி செய்கிறது.

***

சேதுபந்தாசனா

செய்முறை:

1. விரிப்பின் மேல் மல்லார்ந்த நிலையில் படுக்கவும்.

2. பாதங்களை தரையில் படும்படி மடக்கி தோள்பட்டை

அகலத்திற்கு இடுப்பிற்கு நேரே வைக்கவும்.

3. பின்னர் கைகளை நன்கு தரையில் ஊன்றி இடுப்பை மேலே தூக்கவும். தோள் பட்டை, கைகள், தலை மற்றும் பாதங்கள் மட்டுமே தரையில் இருக்க வேண்டும்.

4. ஐந்து மூச்சுக்குப் பின் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பவும்.

பயன்கள்

1. மார்பு, கழுத்து, முதுகு, இடுப்புப் பகுதியை தசைகளைப் பலப்படுத்துகிறது.

2. ரத்த ஓட்டம் சீராகி, உயர் ரத்த அழுத்தம் சரி செய்கிறது.

3. மைய நரம்பு மண்டலத்தை தூண்டுவதன் மூலம் தைராய்டு சுரப்பி மற்றும் நுரையீரல் நன்றாக இயங்க வகை செய்கிறது.

4. முதுகுவலி, சைனஸ் மற்றும் அதீத களைப்புக்குச் சிறந்த

தீர்வாக அமைகிறது.

***

நடராஜாசனா

செய்முறை:

1) நேராக நிற்கவும், பின்னர் மூச்சை இழுத்து  உடலின் எடை முழுவதையும் ஒரு புறமாக சாய்க்கவும்.

2) அப்போது வலது காலின் கட்டை விரல் அல்லது  கணுக்கால் பகுதியைப் பிடித்து  அதை தலைபுறமாக இழுக்கவும்.

3) மற்றொரு  கையில் சின் முத்திரையுடன் இயல்பான மூச்சில் நிற்கவும்.

4) பின்னர் சம நிலைக்கு வந்து  இடது புறத்திற்கும் இதே  போல் செய்யவும்.

பயன்கள்

1) இது வயிறு, நெஞ்சு  மற்றும் தொடை தசைகளை மேலும் வலுவாக்குகிறது.

2) இது உடலின் முழு சம நிலையை அதிகரிக்க உதவுகிறது.

3) முழங்கால்கள், கணுக்கால்கள், தொடைகள், தோள்பட்டை, நெஞ்சு, நுரையீரல்,  முதுகெலும்பு மற்றும் சிறுநீரகங்களை வலுபடுத்துகிறது.

***

வாட்டாயனாசனா

செய்முறை:

1) நேராக நின்ற நிலையில் இருந்து வலது காலை மடக்கி பாதம் இடது தொடையின் இடுக்கில் படுமாறு வைக்கவும்.

2) இப்போது  இடது கால் பாதம் கீழே ஊன்றியும், வலது காலின் முழங்கால் கீழே ஊன்றியும், சற்றே அமர்ந்த நிலை போல் தோன்றும்.

3) இப்போது இரு முழங்கைகளையும்,  சற்றே முன்னால் நீட்டவும். பின் வலது கையால் இடது கையை சுற்றி  வளைத்து பிடிக்கவும்.

4) இரு கைகளும் இப்போது நமஸ்கரிக்கும் நிலையில் முகத்திற்கு நேரே இருக்கும், இயல்பான மூச்சில் நிற்கவும்.

5) சம நிலைக்கு வந்து  பின்னர் இதே போல் இடது புறத்திற்கும் செய்யவும்.

பயன்கள்

1)  முதுகெலும்பு, கழுத்து, இடுப்பு, கணுக்கால்கள் ஆகியவற்றை வலுப்படுத்தி உறுதி அளிக்கிறது.

2) இடுப்பு மற்றும் தொடைகளில் உள்ள குறைபாடுகளை நீக்குகிறது.

3) இது இடுப்பின் விறைப்பு தன்மையை நீக்குகிறது.

4) ஆர்த்தரைட்டீஸ் தொடர்பான  வலி அல்லது விறைப்பு தன்மையை நீக்குகிறது.

5) ஹெர்னியாவுக்கு சிறந்த தீர்வாக அமைகிறது.

(இது மிகவும் முக்கியமான ஓர் ஆசனமாக பி.கே.எஸ். அய்யங்காரால் வரையறுக்கப்பட்டுள்ளது.)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா! தென்னாப்பிரிக்காவுடன் இன்று 4-ஆவது டி20!

மூத்த குடிமக்களுக்கு ரயில்வே கட்டண சலுகையை மீண்டும் வழங்கக் கோரிக்கை

இரட்டைச் சதம்: வரலாறு படைத்தார் அபிஞான் குண்டூ! ஹாட்ரிக் வெற்றியுடன் அரையிறுதியில் இந்தியா!

மன்னிக்க முடியாத குற்றம்!

2-ஆவது மாதமாக எதிர்மறையில் மொத்த விலை பணவீக்கம்

SCROLL FOR NEXT