மகளிர்மணி

எந்த மொழி ரசிகர்களிடமும் கிடைக்காத அன்பு!மனம் திறக்கிறார் : ஸ்ரீதிவ்யா

ஒவ்வொரு அசைவிலும் சிதறடிக்கிறது ஸ்ரீதிவ்யாவின் தெற்றுப் பல் சிரிப்பு. ஒவ்வொரு படத்திலும் தன் பங்கை சிறப்பாக செய்து கவனம் ஈர்ப்பவர்,

ஜி. அசோக்

ஒவ்வொரு அசைவிலும் சிதறடிக்கிறது ஸ்ரீதிவ்யாவின் தெற்றுப் பல் சிரிப்பு. ஒவ்வொரு படத்திலும் தன் பங்கை சிறப்பாக செய்து கவனம் ஈர்ப்பவர், அடுத்து "பென்சில்', "ஈட்டி' படங்களுக்காக காத்திருக்கிறார்.

தெலுங்கு, தமிழ் என மாறி மாறி பயணமாகிறீர்கள்... உங்களுக்கு எந்த ரசிகர்களைப் பிடிக்கும்...?

இரண்டு ரசிகர்களையும் பிடிக்கும். ஆனால், ரொம்ப பிடித்தது தமிழ் சினிமா ரசிகர்கள்தான். ஏனென்றால் நல்ல சினிமாவுக்கான ரசிகர்களை இங்கேதான் பார்க்க முடிகிறது. அதே போல் அன்புள்ளம் நிறைந்த ரசிகர்களையும் இங்கேதான் பார்த்தேன். "வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படம் வெளியான நேரம். கடை திறப்பு விழாவுக்காக இங்கே உள்ள ஒரு கிராமத்துக்குப் போனேன். நிகழ்ச்சி முடிந்து காரில் கிளம்பியதும், மோட்டார் சைக்கிளில் 50, 60 பேர் என்னைப் பின்தொடர்ந்து வந்து கொண்டு இருந்தார்கள். என்னைப் பார்க்க இத்தனை பேரா? என்று ஒரு பக்கம் சந்தோஷமாக இருந்தாலும்,  அதிவேகத்துல வாகனங்கள் போகிற அந்த சாலையில் அவர்கள் இப்படி வந்து கொண்டிருப்பதில் எனக்கு பயம். பயந்து கார் கண்ணாடியை இறக்கிவிட்டு, ""ப்ளீஸ் போங்க...'' என்று டாட்டா காட்டினேன். அதன் பின்னும் போகாமல், ""பரவாயில்லை மேடம். நாங்க கொஞ்ச தூரம் வர்றோம்...'' என்று பின்னாலேயே வந்தார்கள். இந்த அன்பு, நான் எந்த மொழி ரசிகர்களிடமும் பார்க்காத ஒன்று.

இந்த பதில் தெலுங்கு ரசிகர்களுக்குக் கோபத்தை உண்டாக்குமே...?

என் மனதில் பட்டதைச் சொல்கிறேன். இதில் கோபத்துக்கு எங்கே இடம்? தெலுங்கில் உள்ள என் ரசிகர்களுக்கு என்னைப் பற்றி தெரியும். எந்தக் கேள்விக்கும் வெளிப்படையாகப் பதில் சொல்வது என் இயல்பு. அந்த இயல்புதான் இந்தப் பதிலுக்கும் காரணம். தமிழ்நாட்டு ரசிகர்களின் அன்பில் நெகிழ்ந்துதான் இந்த வார்த்தையைச் சொன்னேன். தெலுங்கு ரசிகர்கள் ""நம் ஊர் பொண்ணு தமிழ் சினிமாவில் கலக்குது பார்...'' என்று குஷியாகி வாழ்த்துகிறார்கள். அவர்களின் வாழ்த்துகள் எப்போதும் எனக்கு உண்டு. இரு ரசிகர்கள் தரப்பிலும் என் மேல் பெரிய எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. அதைப் பூர்த்தி செய்ய வேண்டும். அதற்காகத்தான் கால்ஷீட் கொடுப்பதோடு நின்று விடாமல், என்ன கதை, எனக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறதெனப் பார்த்து விட்டுத்தான் நடிக்கிறேன். தமிழ், தெலுங்கு என பிரித்து பார்க்காமல் என் ரசிகர்களை நான் திருப்திப்படுத்தினாலே போதும். 

இன்னும் பெரிய ஹீரோக்களோடு நடிக்கும் வாய்ப்பு கை கூடவில்லையா...?

நடிக்க ஆசைதான். அதற்கான நேரம் இன்னும் வந்து சேரவில்லை. நல்ல கதை, மனதில் நிற்கிற கதாபாத்திரம் என வந்தால் எந்த ஹீரோவுக்கும் ஜோடியாக நடிப்பேன். மீண்டும் சிவகார்த்திகேயனுடன் ஒரு படம்,

மலையாளத்தில் ஹிட்டான "பெங்களூர் டேஸ்' தமிழ், தெலுங்கு ரீமேக்கில் ஆர்யாவோடு நடிக்கிறேன். கார்த்தியோடு ஒரு படம் என நான் பிஸி.

"பெங்களூர் டேஸ்' ரீமேக்கில் நடிக்க இருந்த சமந்தாவின் வாய்ப்பை நீங்கள் பறித்து விட்டதாக பரபரப்பாச்சே...?

இதுவரைக்கும் எனக்கு வந்த வாய்ப்புகளில்தான் நான் நடித்துள்ளேன். யார் வாய்ப்பையும் பறிக்கவில்லை. எனக்கு ரீமேக் படங்களில் நடிக்க விருப்பம் கிடையாது. ஆனால் இயக்குநர்தான் இந்தப் படத்தை நாம் அப்படியே ரீமேக் செய்யாமல் நிறைய மாற்றங்கள் செய்யப் போகிறோம் என்று சொன்னார். அதன் பின்தான் ஓ கே சொன்னேன். அது சமந்தாவின் கதாபாத்திரம் என்றெல்லாம் எனக்குத் தெரியாது. யார் வாய்ப்பும் எனக்குத் தேவையில்லை.

அடுத்து வருகிற "பென்சில்', "ஈட்டி' படங்கள் எப்படியிருக்கும்...?

"பென்சில்', பள்ளிப் பருவ வாழ்க்கையை வித்தியாசமாக அணுகியிருக்கும் படம். இதுவரை வந்த படங்களில் இது கொஞ்சம் வித்தியாசப்படும். படத்தைப் பார்ப்பதற்கு நானும் காத்திருக்கிறேன். "ஈட்டி', முக்கியமான ஒரு படமாக இருக்கும். விளையாட்டுப் பின்னணியில் உருவாகியிருக்கும் படம். படத்துக்குப் படம் அதர்வாவின் நடிப்பு மெருகேறி வருகிறது. அதை நூறு சதவீதத்திற்கு கொண்டு போக கடுமையாக உழைத்திருக்கிறார். இந்த இரண்டு படங்களும் வந்தால் என் நடிப்பின் மீதான மரியாதை கூடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு

நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி

நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம்

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT