முகப்பு
மகளிர்மணி

பெண்களுக்கு அவசியம் கல்வி, உடல் நலம், கைத்தொழில்!

நாக்பூரில் சி.ஏ. முடித்துவிட்டு,கொல்கத்தாவில் வேலை பார்த்து வந்தேன். விருதுநகரை பூர்வீகமாக கொண்ட என் கணவரும் கொல்கத்தாவில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:01 AM
பகிர்:

ஹேமலதா "மாஃபா' பாண்டியராஜன் சொல்கிறார்

""நாக்பூரில் சி.ஏ. முடித்துவிட்டு,கொல்கத்தாவில் வேலை பார்த்து வந்தேன். விருதுநகரை பூர்வீகமாக கொண்ட என் கணவரும் கொல்கத்தாவில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். ஒரு கட்டத்தில் இருவருக்கும் ஏதாவது சொந்த தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வர, சென்னை வந்தோம்'' என்கிறார் மாஃபா. குழுமத்தின் நிறுவனரான ஹேமலதா பாண்டியராஜன். மேலும் அவர் கூறியது:

""1992-இல் "மாஃபா' என்ற நிறுவனத்தை தொடங்கினோம். மாஃபா. என்பது மனித வள மேம்பாட்டு நிறுவனம். மாஃபா என்றால் பிரெஞ்ச் மொழியில் "டிரஸ்ட்' என்று பொருள். சின்னதாக 60,000 ரூபாயில்தான் ஆரம்பித்தோம். எங்கள் பரம்பரையில் முதல் தொழில் முûûவோர் நாங்கள்தான். அதனால் ஒருவித பயத்துடன்தான் தொடங்கினோம்.  ஆரம்பத்திலேயே நாங்கள் இருவரும் ஒரு விஷயத்தில் உறுதியாக இருந்தோம். நமக்கு என்ன லாபம் கிடைத்தாலும் அதில் ஒரு பங்கை  வறுமையில் இருப்பவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதில். நிறுவனம் நல்லமுறையில் வளரத் தொடங்கியது. இதனால் முதல் வருட லாபத்தில் ஒரு பங்கை "பானியன்' அமைப்பிற்கு வழங்கினோம். அதற்கு அடுத்த ஆண்டு என் கணவரின் பாட்டி பெயரில் "சொர்ணாம்மாள்' என்கிற டிரஸ்ட் தொடங்கினோம். அதன் மூலம் சிவகாசி தீப்பெட்டி தொழிலில் கஷ்டப்பட்டு வரும் குழந்தை தொழிலாளர் சிலரை தேர்ந்தெடுத்து அவர்கள் படிக்க உதவும் வகையில் ஸ்காலர்ஷிப் கொடுக்க ஆரம்பித்தோம்.

இதற்கிடையில் மாஃபா.வும் நல்ல வளர்ச்சி அடைந்து வந்தது. இதனால் மாஃபா. நிறுவன ஊழியர்களுடன் இணைந்து மாஃபா.பவுண்டேஷன்  ஆரம்பித்தோம். இதன் மூலம் வட சென்னை மற்றும் மத்திய சென்னையில் உள்ள மாநகராட்சி பள்ளிகள் சிலவற்றை தேர்ந்தெடுத்து அதில் எட்டாம் வகுப்பில் இருந்து பத்தாம் வகுப்புவரை நன்றாக படிக்கும் மற்றும் வறுமையில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு ஸ்கில் பில்டிங், கம்யூனிகேஷன் டெவலப்மெண்ட் பயிற்சி மற்றும் ஸ்காலர்ஷிப் வழங்கி ஊக்கமளித்தோம். தற்போது இதுபோன்று 48 பள்ளிகளுக்கு வழங்கி வருகிறோம். மேலும் விருதுநகர், சிவகாசியில் உள்ள சில அரசுப்பள்ளி மாணவர்களுக்கும் உதவுகிறோம். தற்போது இந்த திட்டத்தின் கீழ் 4000 மாணவர்கள் பயனடைந்து வருகிறார்கள். அதில் 350க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்போது வேலைக்கு செல்ல ஆரம்பித்து விட்டார்கள். 1500 பிள்ளைகளுக்கு மேல் மருத்துவம், என்ஜினியரிங், நர்சிங் என கல்லூரி வரை வந்துவிட்டார்கள். கல்லூரி படிப்பிற்கு "திஷா' என்ற பெயரில் உதவுகிறோம்.

  மேலும் திஷாவில் ஒரு பிரிவாக "ஜெம்ஸ் ஆஃப் திஷா' என உருவாக்கினோம். இதில் கடைசி பெஞ்சில் சரியாக படிக்காத பிள்ளைகள்  இருப்பார்கள்.  இவர்களுக்கு வீட்டிலும் மதிப்பு இருக்காது, பள்ளியிலும் மதிப்பு இருக்காது. இதனால் இவர்களை எந்த அமைப்பும் திரும்பிக் கூட பார்ப்பதில்லை. அப்படிப்பட்டவர்களுக்கும் உதவ நினைத்தோம். அவர்களை பயிற்சி வகுப்புக்கு வரவழைத்தோம். ஆரம்பத்தில் இவர்களை வகுப்பறையில் உட்கார வைப்பதே பெரும் சவாலாக இருந்தது.  இவர்கள் ஏன்? இப்படி இருக்கிறார்கள் என்று சின்ன ஆய்வு நடத்தினோம். இவர்கள் முட்டாள் என்று அனைவராலும் ஒதுக்கப்படுவதால் இந்த மனநிலைக்கு தள்ளப்பட்டு, தீயப்பழக்கங்களுக்கு ஆளாவதும் தெரிந்தது.

அதன்பிறகு அந்த பிள்ளைகளின் பெற்றோரிடமும்,  தலைமையாசிரியர்களிடமும் பேசி   எட்டாம் வகுப்பில் இருந்து 15 பிள்ளைகள் வீதம் 4 பள்ளியில் இருந்து தேர்ந்தெடுத்து, ஏற்கெனவே அந்த பள்ளியில் இருந்து எங்கள் அமைப்பின் மூலம் கல்லூரிவரை வந்த பிள்ளைகளைக் கொண்டு பயிற்சி அளித்தோம். முதல் குரூப்பில் 60 பேரில் பத்தாம் வகுப்பில் 52 பேர் வெற்றி பெற்றனர். அந்தநாள் எங்களுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருந்தது. தற்போது அந்த பிள்ளைகள் கல்லூரி வரை வந்துவிட்டார்கள். அந்த பிரிவின் கீழ் 600 மாணவர்கள் இருக்கிறார்கள்.

அடுத்தபடியாக "திஷா ஸ்போர்ட்ஸ் அகாதெமி' தொடங்கினோம்.  இது ஏனென்றால் நான் பார்த்தவரை நார்த் சென்னை பிள்ளைகளுக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகம். அதிலும் ஃபுட்பால், பாக்ஸிங் நன்றாக வருகிறது. என்னைப் பொருத்தவரை பிள்ளைகள் படித்தால் மட்டும் போதாது எல்லாவற்றிலும் முழுமை பெற வேண்டும். இதனால்

ஆண்டுதோறும்  நேரு ஸ்டேடியத்தில் விளையாட்டுப் போட்டிகளும் நடத்துகிறோம். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு மாவட்ட, தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள உதவுகிறோம். இப்படி ஒவ்வொரு மாணவரும் படிப்பு முடிந்து நல்ல வேலையில் அமரும் வரை  துணை நிற்கிறோம்.

இது தவிர "சொர்ணாம்மாள் டிரஸ்ட்' மூலமாக பெண்களுக்கு உதவிடும் வகையில் சுயத் தொழில் கற்றுக்கொள்ள அயனாவரத்தில் ஓர் அமைப்பு தொடங்கி கைத்தொழில் பயிற்சி அளித்து வருகிறோம். இதன் மூலம் கைத்தொழில் கற்றுக்கொடுப்பதில் இருந்து ,

கணக்கு வழக்குகளை எப்படி பார்ப்பது, மார்க்கெட்டிங் செய்வது, கண்காட்சிகள் அரங்கு வைப்பது என சுயத்தொழில் சார்ந்த முழு அறிவும் கற்றுக் கொடுத்து தொழில் முனைவோராக ஆக்குகிறோம்.

 இதற்காக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் "வரம்' என்ற அமைப்பின் மூலம் "மைக்ரோ பைனான்ஸ்' திட்டம் கொண்டு வந்தோம். இதில் ரூ.25,000 முதல் ரூ.50,000 வரை கடன் உதவி வழங்கி வருகிறோம். இந்த திட்டத்தில் இதுவரை 45,000 பெண்களுக்கு கடன் உதவி வழங்கியிருக்கிறோம். இது தவிர ஏற்கெனவே கைத்தொழில் தெரியும், தொழில் தொடங்க நிதி உதவி வேண்டும் என்பவர்களுக்கு எஸ்.எம்.இ மூலம் ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை வழங்கி வருகிறோம். இந்த திட்டத்தின் கீழ் கடன் பெற வேண்டும் என்று நினைக்கும் பெண்களிடம் நாங்கள் வைக்கும் விதிமுறைகள் என்னவென்றால் 4 பேர் கொண்ட குழுவாக இருக்க வேண்டும்.  ஏனென்றால் ஒருவர் கடன் தவணை கட்டத்தவறினால் மற்றவர் சேர்ந்து கட்டவேண்டும். என்பதைத் தவிர வேறு எந்த உத்திரவாதமும் கேட்பதில்லை.

 இதுதவிர சமீபத்தில் "ஹோப் இன்டர்நேஷனல்' அமைப்புடன் இணைந்து விருதுநகர் பக்கத்தில்  உள்ள வடமலைக்குறிச்சியில் ஆபத்தான தீப்பெட்டி தொழிலில் ஈடுபட்டு வரும் பெண்கள் ஆபத்தில்லாத வாழைநார் கைத்தொழில் செய்ய ஏற்பாடு செய்திருக்கிறோம். அதில் தற்போது 25 பெண்கள் வேலை செய்கிறார்கள்.

நான் பெண்களுக்கு எப்பவுமே சொல்ல நினைப்பது 3 விஷயங்கள். கல்வி அறிவு வேண்டும், உடல்நலம் பேணுதல், கைத்தொழில் கற்றுக்கொள்ளுதல். இவை மூன்றும் இருந்தால் ஒரு பெண் எப்படிப்பட்ட சூழ்நிலையையும் சமாளித்து கொள்ளலாம்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.