'கற்பகத்தை' யாரும் மறக்கவில்லை!
"அத்திப்பூக்கள்' தொடரில் கற்பகமாக வந்து டிவி சீரியல் ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தவர் சந்தியா.
"அத்திப்பூக்கள்' தொடரில் கற்பகமாக வந்து டிவி சீரியல் ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தவர் சந்தியா. ஒரு சிறிய இடைவெளிக்கு பின் அவர் தற்போது ரம்யா கிருஷ்ணனின் "வம்சம்' தொடரில் மலைஜாதிப் பெண் பூமிகாவாக நடித்து வருகிறார். அவரைத் தொடர்பு கொண்டோம்:
"வம்சம்' தொடரில் மலைஜாதிப் பெண்ணாக நடிப்பது எப்படி இருக்கிறது. காஸ்டியூமிற்காக நீங்கள் எதுவும் மெனக்கெட்டீர்களா?
"வம்சம்' தொடரில் மலைஜாதிப் பெண்ணாக நடிக்க வேண்டும் என்றபோது ஏதோ வித்தியாசமான ரோலாக இருக்கிறதே என்று தான் நடிக்க ஒப்புக் கொண்டேன். அதிலும் முதலில் பூமிகா கதாபாத்திரம் வந்தபோது மக்களிடைய நல்ல வரவேற்பு இருந்தது. அதைத் தொடர்ந்து கேரக்டரில் சின்ன சின்ன மாற்றம் ஏற்பட்டு நடிகை கதாபாத்திரத்தில் நடிக்கும்போதும் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதைப் பார்க்கும்போது ஒரு நல்ல தொடரில் நடிக்கிறேன் என்று சந்தோஷமாக இருக்கிறது. மலை
ஜாதிப்பெண் காஸ்ட்யூம் பொறுத்தவரை, "கும்கி' படத்தில் லஷ்மிமேனன் அணிந்திருந்த காஸ்ட்யூம் போன்று இருந்தால் நன்றாக இருக்குமே என்று இயக்குநர் நினைத்தார். அதனால் ""அந்த மேக்கப்பை முயற்சி செய்து பார்ப்போம்'' என்றார். முதல்நாள் மேக்கப் போட்டதும் எல்லாருக்கும் பிடித்துவிட்டது. அதனால் அதையே தொடர ஆரம்பித்துவிட்டோம். மற்றபடி காஸ்ட்யூமிற்காக நான் தனிப்பட்ட முறையில் எந்தவித ஹோம் ஒர்க்கும் செய்யவில்லை. ஒரு விஷயம் என்னவென்றால் இன்றைக்கு கிராம
புறத்து பெண்கள், மலைஜாதிப் பெண்கள் என எல்லாருமே மாடர்னாக மாறிக் கொண்டு வருகிறார்கள்.
"வம்சம்' தொடரில் ஏற்கெனவே ரம்யா கிருஷ்ணன் லீட் ரோலில் இருக்கும் போது உங்களுக்குத் தனித்துவம் இருக்கும் என்று நினைத்தீர்களா? எப்படி நடிக்க ஒப்புக் கொண்டீர்கள்?
இந்த சீரியலின் கிரியேட்டிவ் ஹெட்டான வினயா கிருஷ்ணன் மேடம் சீரியலுக்காக பேசும்போதே எனக்கு அதைப் பற்றி தெளிவாக சொல்லிவிட்டார். ""உங்களோட தனித்துவம் பாதிக்காத அளவில்தான் நிச்சயம் உங்கள் கேரக்டர் இருக்கும்'' என்றார். அவர் சொன்னதை 100% செய்தும் காட்டிவிட்டார். ரம்யா மேடமும் அப்படித்தான், அவங்க கேரக்டர் மட்டும் இல்லாமல் சக நடிகர், நடிகைகளின் கேரக்டரும் நன்றாக வரவேண்டும் என்று நினைப்பார். மேலும் ரைட்டர் என்ன எழுதுகிறாரோ அதை அப்படியே எடுக்க சொல்லிடுவாங்க. உண்மையாகச் சொல்ல வேண்டும் என்றால் ஒரு சில நாட்களில் அவங்க கேரக்டரை என் கேரக்டர் பீட் செய்கிற மாதிரி இருக்கும். ஆனால் அவங்க அதைப் பற்றி எல்லாம் பெரிசாக எடுத்துக் கொள்ளாமல் என் கேரக்டரை பாராட்டுவாங்க. அந்தவிதத்தில் இந்த தொடரில் நடிப்பது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.
வேறு தொடர்கள் எதுவும் நடிக்கவில்லையே ஏன்?
என்னை பொறுத்தவரை ஒரே நேரத்தில் பல கேரக்டரில் நடித்தால் அவ்வளவு ரீச் இருக்காது. ஒரே கேரக்டரில் நடித்தாலும் மக்கள் மனதில் பதியும்படியாக இருக்க வேண்டும். "அத்திப்பூக்கள்' கற்பகம் இன்னும் மக்கள் மனதை விட்டு விலகவில்லை. அதுபோன்று "வம்சம்' பூமிகாவும் இனி மக்கள் மனதில் நிற்பாள். இப்படி, ஒரு கேரக்டரில் வந்தாலும் பேசும்படியாக இருக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறேன்.
பெரியதிரையில் நடித்திருக்கிறீர்கள் போலிருக்கே?
ஆமாம். முதல்முறையாக தமிழ்ப் படத்தில் நடித்திருக்கிறேன். இசையமைப்பாளர் விஜய் ஆன்டனியின் "சைத்தான்' படம். அதில் விஜய் ஆன்டனி சார் வேலை செய்யும் ஆபீஸில் பாஸôக வந்து அவரை மிரட்டுவது போன்று லேசான நெகட்டிவ் கதாபாத்திரம். இதைத் தவிர "பேய்கள் ஜாக்கிறதை' என்ற படத்திலும் நடித்திருக்கிறேன். அதில் நானே தமிழில் டப்பிங்கும் பேசியிருக்கிறேன். விரைவில் இந்தப் படங்கள் ரிலீஸôக உள்ளன. இதற்கு எப்படி ரெஸ்பான்ஸ் இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டு அதன்பிறகு பெரிய திரையில் நடிக்கலாமா? வேண்டாமா? என்று முடிவு செய்ய உள்ளேன்.
நடிப்பை விட பின்னணி குரல் கொடுப்பது சிரமம் என்கிறார்களே?
அது உண்மைதான். ஆனால் நான் ஏற்கெனவே தெலுங்கில் லீட் ரோலில் நடித்த பலருக்கும் பின்னணி பேசியிருக்கிறேன். அதனால் ஓரளவு சமாளித்துவிட்டேன். படத்தின் இயக்குநரும் ""நன்றாக வந்திருக்கிறது'' என்றார்.