டப்பிங் தொடர்களை வளரவிடக்கூடாது! சொல்கிறார் : ஸ்வேதா ராவ்
கிருஷ்ணவேணி பஞ்சாலை, நான்தான்பாலா, பட்டைய கிளப்பணும் பாண்டியா போன்ற படங்களின் மூலம் தமிழ்த்
கிருஷ்ணவேணி பஞ்சாலை, நான்தான்பாலா, பட்டைய கிளப்பணும் பாண்டியா போன்ற படங்களின் மூலம் தமிழ்த்திரையுலகில் நாயகியாக வலம் வந்தவர் ஸ்வேதா ராவ். நடிக்கவந்த இவ்வளவு குறுகிய காலத்திற்குள் சின்னத்திரை பக்கம் ஒதுங்கியிருக்கிறார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் "சந்திரலேகா' தொடரில் லேகா என்ற டைட்டில் ரோலில் நடித்து வருகிறார்:
சினிமாவிலிருந்து சின்னத்திரை அனுபவம் எப்படி இருக்கு?
சின்னத்திரைக்கு வந்தாலும் சினிமாவில் நல்ல வாய்ப்புகள் வரும்போது நிச்சயம் நடிப்பேன்.
இவ்வளவு சீக்கிரம் சின்னத்திரைக்கு போகிறோமே இது சரியாக வருமா என்று ஆரம்பத்தில் ஒரு எண்ணம் இருக்கத்தான் செய்தது. இருந்தாலும் நான் ஒரு நடிகை. நடிப்பதற்கு எங்கு வாய்ப்பு கிடைத்தாலும் நடிக்க வேண்டும். அதில் சின்னத் திரை, பெரிய திரை என்று பிரித்துப் பார்க்கக் கூடாது என்ற எண்ணத்தில்தான் சின்னத்திரைக்கு வந்தேன். ஆனால் நான் எதிர்பார்த்ததைவிட சின்னத்திரை மக்களிடையே எனக்கு நல்ல அங்கீகாரத்தை கொடுத்திருக்கிறது. சினிமாவில் நான் நடித்தபோது, என்னை அடையாளம் கண்டுகொள்ளாதவர்கள் கூட, டிவியில் நடிக்கும்போது அடையாளம் கண்டு கொள்கிறார்கள். அது சந்தோஷமாக இருக்கிறது.
யார் வேண்டுமானாலும் சின்னத்திரையில் நடிக்கலாம். ஆனால் எல்லோரும் சினிமாவில் நடித்துவிட முடியாது. அப்படியே நடித்தாலும் ஜெயிப்பது கடினம், ஜெயித்தாலும் அது தொடர்வது கடினம். இதுபோன்ற எந்தப் பிரச்னையும் இல்லாமல் சின்னத்திரையில் ஆண்டுக்கணக்கில் நடித்துக் கொண்டே இருக்கலாம். மேலும் சின்னத்திரை ஷூட்டிங்கை பொருத்தவரை அலுவலகம் சென்று வருவது போன்ற உணர்வுதான் ஏற்படுகிறது. அதனால் சின்னத்திரை நன்றாக செட்டாகிவிட்டது.
சீரியல் என்றால் எப்போதும் அழுது கொண்டே இருக்க வேண்டுமே?
பெண்கள் சீக்கிரத்தில் உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள் என்பதால்தான் பெரும்பாலும் அழுவது போன்ற காட்சிகள் வைக்கப்படுகின்றன. இதனால் அவர்கள் வீட்டுப் பெண்ணுக்கே ஒரு கஷ்டம் வந்துவிட்டது போன்று உணர்கிறார்கள். இதுதான் மெகா தொடர்கள் ஜெயிப்பதற்கான யுக்தி. அதிலும் குறிப்பாக பாசிடிவ் கதாபாத்திரங்களில் நடிப்பவர்களை மக்கள் அதிகம் நேசிப்பதற்கும் இதுதான் காரணம் என்று நினைக்கிறேன்.
இந்தி சீரியல்களின் வரவினால் தமிழ் சீரியல்களுக்கு பின்னடைவு இருப்பதை அறிந்தீர்களா?
சின்னத்திரைக்கு வரும்போதே தோழிகளின் மூலம் சிலவற்றை கேட்டு அறிந்து வைத்திருக்கிறேன். பொதுவாக இந்தி சீரியல்களைப் பொருத்தவரை பல லட்சம் ரூபாய் செலவு செய்து எடுக்கிறார்கள். ஆனால், இங்கே தமிழ் சீரியல்கள் அப்படியில்லை சில ஆயிரம் ரூபாய்களில் மட்டுமே எடுக்கப்படுகின்றன. இதனால் எங்களைப் போன்ற கலைஞர்களின் திறனும் தொழிலும் முடக்கப்படுகின்றன. கதைகளில் உள்ள யதார்த்தம், இயற்கையான விஷயம் ஆகியவற்றை வைத்துப் பார்த்தால் நமது தொடர்கள்தான் சிறந்தவை. டப்பிங் தொடர்களைத் தொடர்ந்து வளரவிடக்கூடாது.