முகப்பு
மகளிர்மணி

விற்றது மீன்; கிடைத்ததோ சர்வதேச விருது!

தெற்கு ஒடிசா, கஞ்சம் மாவட்டம் கட்டாரு என்ற சிறிய மீனவ கிராமத்தில் வசித்துவரும் சிட்டம்மா, மூன்றாவது வகுப்போடு படிப்பை நிறுத்திக் கொண்டார். இன்று 72 வயதாகும் இவர் 4 ஆயிரம் மீனவ பெண்கள்

Updated On : 24 ஜனவரி, 2024 at 4:36 PM
பகிர்:

தெற்கு ஒடிசா, கஞ்சம் மாவட்டம் கட்டாரு என்ற சிறிய மீனவ கிராமத்தில் வசித்துவரும் சிட்டம்மா, மூன்றாவது வகுப்போடு படிப்பை நிறுத்திக் கொண்டார். இன்று 72 வயதாகும் இவர் 4 ஆயிரம் மீனவ பெண்கள் குடும்பங்களுக்கு வாழ்வளிக்கும் சிறு நிறுவனமொன்றின் தலைவராக பொறுப்பேற்று நடத்திவருகிறார். ""இந்த உயர்நிலையை அடைய நான் மேற்கொண்ட முயற்சிகளை நினைக்கும்போது, நினைத்ததை சாதித்த நிறைவு மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கிறது'' என்கிறார் சிட்டம்மா.

 1995 -ஆம் ஆண்டு கட்டாரு மற்றும் சுற்றுப்புற மீனவ குடும்பப் பெண்களை வைத்து " சமுத்திரம்'  என்ற பெயரில் சுயதொழில் குழுவொன்றை சிட்டம்மா துவங்கினார். மீனவர்களிடமிருந்து மீன்கள் மற்றும் கடல் உணவுப் பொருட்களை மொத்தமாக கொள்முதல் செய்து கொல்கத்தா, சென்னை,டெல்லி போன்ற நகரங்களுக்கு நேரடியாக அனுப்புவதுதான் " சமுத்திரம்' நிறுவனத்தின் இலக்கு. அதே நேரத்தில் உள்ளூர் இடைத்தரகர்கள், வியாபாரிகள், ஏஜெண்டுகளிடமிருந்து மீனவர்களையும் அவர்களது குடும்பங்களையும் காப்பாற்ற வேண்டும் என்பது இரண்டாவது அம்சம்.

 கஞ்சம் மற்றும் பூரி மாவட்டங்களில் உள்ள 15 கிராமங்களில் இந்த  சுயதொழில் குழு துவங்கப்பட்டது. நாளடைவில் கருவாடு, இறால் போன்றவை மூலம் ஊறுகாய், அப்பளம் போன்ற சுவையான பொருட்கள் தயாரிக்க தொடங்கினார். இவர்களுக்கு உதவி செய்ய மும்பையில் உள்ள மத்திய  மீன்வள கல்வித்துறை பயிற்சியளிக்க முன் வந்தது. புவனேஸ்வரில் உள்ள ஒடிசா விவசாயம் மற்றும் தொழில் நுட்பப் பல்கலைக் கழகமும் ஒத்துழைப்பு அளித்தது. கடின உழைப்பு, தன்னார்வம் காரணமாக தற்போது " சமுத்திரம்' பூரி, ஜகத் சிங்பூர், பலாசூர், கஞ்சம் ஆகிய ஒடிசா கடற்கரை மாவட்டங்களில் 11 கிளைகளை கொண்டு இயங்குகிறது. " சமுத்திரம்' தயாரிப்புகளுக்கு ஐ.எஸ்.ஓ தரசான்றிதழ் அளிக்கப்பட்டு மேற்கு வங்காளம், தமிழகம், மகாராஷ்டிரா, டெல்லி மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் மாநில அரசின் "சிலிக்கா ப்ரெஷ்' நிறுவனம் மூலம் மார்க்கெட்டிங் செய்யப்படுகிறது. இவர்கள் தயாரிப்புகளுக்கு ஆப்பிரிக்க நாடுகளிலும் நல்ல வரவேற்பு உள்ளது. தற்போது சுகாதாரமாக மீன்களை காயவைக்க சோலார் டிரையர்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

 ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணம் அருகேயுள்ள கிராம மொன்றில் பிறந்த சிட்டம்மா, உள்ளூர் மீனவர் பொகுட்டு என்பவரை 20 வயதில் மணந்து கஞ்சம் கிராமத்தில் குடியேறினார். சமுத்திரம் அமைப்பை உருவாக்குவதற்கு முன்பே, மீனவ பெண்களை ஒன்றிணைத்து "காளியம்மா பெண்கள் சங்கம்' என்ற  அமைப்பின் மூலம் மதுவுக்கு எதிராக பிரசாரம் செய்ததோடு, கள்ளச்சாராயம் தயாரிக்கும் இடங்களுக்குச் சென்று அவற்றை அழிக்கும் பணியில் துணிச்சலாக செயல்பட்டார். பெண்களிடையே வரவேற்பை பெற்றாலும், அதே நேரத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்னையையும் சந்திக்க நேர்ந்தது. குடும்பத்தினர்  விரோதத்தையும் கள்ளச்சாராய வியாபாரிகளின் எதிர்ப்பையும் சம்பாதித்து கொண்டார். மதுவுக்கு எதிரான போராட்டங்களில் இறங்க வேண்டாம் என்று கணவர் தடுத்ததால் குழந்தைகளை வீட்டிலேயே விட்டுவிட்டு வெளியேற வேண்டியதாயிற்று. பின்னர் இவரது ஆறு குழந்தைகளில் மூன்றுபேர் இவருடன் வந்து சேர்ந்து கொண்டனர்.

 இவரது திறமைக்காக பல்வேறு விருதுகள் கிடைத்தாலும் நியூயார்க்கில் நடந்த 15 நாட்கள் கருத்தரங்கம் மற்றும் செய்முறை நிகழ்ச்சியில் யூஎன்டிபி அளித்த சர்வதேச விருதை பெருமையாக கருதுகிறார். ""இந்த விருதை எனக்கு கிடைத்த விருதாக நான் கருதவில்லை. எங்கள் மீனவ சமூகத்திற்கும் எனக்கு ஒத்துழைப்பு அளித்த மீனவப் பெண்களுக்கும் கிடைத்த விருதாகவே கருதுகிறேன்'' என்கிறார் சிட்டம்மா.

 இன்று அவரது அயராத உழைப்பால் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் இந்த அமைப்பின் மூலம் பயன் பெற்றுள்ளனர்.

தற்போது "சமுத்திரம்' அமைப்பின் நிர்வாகம் மற்றும் பயிற்சியளிக்கும் பொறுப்பை பார்வதி என்பவரிடம் ஒப்படைத்துவிட்டு இவர்,  ஆலோசகராக மட்டும் செயல்பட்டு வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.