யாருடைய தூண்டுதலும் இன்றி கோவையில் தெரு நாய்களுக்காக ஒரு சரணாலயத்தை பன்னிரண்டு ஆண்டுகளாக நடத்தி வருகிறார் கீதாராணி. வயது ஐம்பத்தெட்டு.
கோவையில் நாய்களின் தோழி என்றால் ஓ... நம்ம கீதாராணி.. என்று புரிந்து கொள்வார்கள். கோவையில் செல்வபுரம் சாலையில் "ஸ்நேஹாலயா அனிமல் ஷெல்டர்' என்ற சரணாலயத்தில் சுமார் முன்னூறு நாய்களை சொந்த பிள்ளைகள் போன்று சுமார் இரண்டு ஏக்கர் விஸ்தீரணமுள்ள வளாகத்தில் வளர்த்து வருகிறார் கீதாராணி.
இந்த வளாகம் கீதாராணிக்கு சொந்தம் இல்லை. வாடகை வளாகம். இவர் வளர்க்கும் நாய்களில், தெரு நாய்களும், வீட்டில் வளர்க்கப்பட்டு விரட்டப்பட்ட நாய்களும் அடங்கும். பூனைகள், அணில்கள், ஆண் மயில் ஒன்றும் இவரது குடும்ப உறுப்பினர்கள்.
தினமும் காலையில் காகங்களுக்கு உணவு வைப்பதிலிருந்து இவரது அன்றாட சேவைகள் துவங்குகிறது. தெருக்களில், சாலைகளில் வாகனங்களில் அடிபட்டு காயமுற்றுக் கிடக்கும் நாய்கள் பற்றிய தகவல் கிடைத்தால், சம்பவ இடத்திற்குச் சென்று நாயை வாரி எடுத்துக் கொண்டு வந்து சிகிக்சை செய்து தன் குடும்பத்தில் உறுப்பினராக்கிக் கொள்ளும் கீதாராணி சொல்கிறார்:
""நாய்களை சிலர் கற்களை எறிந்து விரட்டுவார்கள். சிலர், கம்பினால் அடித்து விரட்டுவார்கள். சிலர் அடித்தே கொல்வார்கள். எப்போதாவது ஒரு வேளை உணவு கொடுத்திருப்பார்கள். அந்த நினைவில் நாய்கள் அந்த வீட்டிற்கு மீண்டும் போகும். நாய்களின் வரவால் எரிச்சல் அடையும் சிலர் தண்ணீர் ஊற்றி விரட்டுவார்கள். விலங்குகள் கொடுமைத் தடுப்புச் சட்டம் 1960, என்ன சொல்கிறது தெரியுமா? யாரும் எந்த விலங்கையும் அடித்து, உதைத்து, மிதித்து, கொடுமைப்படுத்தி, காயப்படுத்தி வலியை காயத்தை ஏற்படுத்தும் முறையில் நடந்து கொண்டால் சட்டப்படி அது குற்றமாகும். இதற்கு அபராதம், சிறை தண்டனை வழங்கப்பட அந்த சட்டத்தில் இடம் உண்டு ... இப்படி ஒரு சட்டம் இருக்கிறது என்று பலருக்கும் தெரியாது. அதனால், விலங்குகளைக் கொடுமைப் படுத்தினால் யாரும் எதுவும் செய்ய முடியாது என்று தன்னிச்சையாகக் கொடுமைகள் செய்கின்றனர். சென்னை சம்பவமும் இந்த அறியாமையில் நடந்ததுதான்.
நாய்கள் பற்றிய எல்லா விவரங்களும் எனக்கு அத்துப்படி. நாய்களுக்குத் தேவையான மருந்துகள் எப்போதும் ரெடியாக இருக்கும். தெருவில் நாய் அலைகிறது. அல்லது நாய் அடிபட்டுக் கிடக்கிறது என்று தகவல் கிடைத்ததும் , வேனுடன் அந்த இடத்திற்கு விரைந்து போவேன். நாயின் நிலைமையை அறிந்து தேவையான பாதுகாப்பு அல்லது மருத்துவ நடவடிக்கைகள் எடுப்போம். எனது நாய்கள் சேவையில் துணையாக இருப்பவர் என்னுடன் இருக்கும் வண்டி ஓட்டுநர் பாலன். அவருக்கும் நாய்களின் பால் அன்பு, பாசம் உண்டு.
வீட்டில் நாய் வளர்ப்பவர்கள், ஃபிளாட்டுக்கு மாறும் போது பல ஃபிளாட்களில் நாய் வளர்க்க அனுமதி கிடைக்காது. பணிமாற்றம் கிடைத்து ஊர் விட்டு ஊர் மாறும் போதும், நாயைக் கொண்டுபோவதில் பல பிரச்னைகள். இந்த சந்தர்ப்பங்களில் அவர்கள் என்னை அணுகுவார்கள். நான் இரு கரம் நீட்டி அந்த நாய்களை என் சரணாலயத்தில் சேர்த்துக் கொள்வேன். அந்த நாய்கள் முன்பு எந்த விதத்தில் வளர்க்கப் பட்டார்களோ அதே போன்ற உணவு வகைகள் தரப்படும். அந்த நாய்களின் குணாதிசயம், உணவு, பழக்கவழக்கம் குறித்து வளர்த்தவர்களிடம் கேட்டறிவேன்.
எனக்கு உதவியாக நான்கு பெண் ஊழியர்கள் சரணாலயத்தில் பணிபுரிகிறார்கள். நாய்களுக்கு வேகவைத்த சாதம், காய்கறிகள், கோழி. கடைகளில் விற்கும் நாய்களுக்கான உணவுகள் தந்து வருகிறோம். தினமும் நாய்களைக் குளிப்பாட்டி, சுத்தமாக இருக்கச் செய்கிறோம். உண்ணி நாயிடம் குடியிருக்கும் ஒரு பூச்சி வகை. அவற்றை பொறுமையாக நீக்குவோம். அதுபோல், நாய்கள் இருக்கும் இடத்தையும் சுகாதார முறையில் வைத்திருக்கிறோம். கால்நடை மருத்துவர் வாரத்திற்கு ஒருமுறை வந்து எல்லா நாய்களையும் செக்-அப் செய்கிறார்.
சிலர் எங்கள் காப்பகத்திற்கு வந்து நாய்களை பார்த்து சில நாய்களைத் தங்களுடன் வளர்க்க தத்து எடுப்பார்கள். அவர்களின் விவரங்களை சேகரித்து பிறகு விசாரித்து நாய்களை அவர்களுடன் அனுப்பி வைப்போம். பிரியும் போது வளர்த்த, பராமரித்த எங்களுக்கு மனசு நெகிழத்தான் செய்யும். தத்து எடுக்கப்பட்ட நாய்களுக்குப் பதிலாக வேறு புதிய நாய்களுக்கு இடம் கிடைக்குமே. இங்கே நாங்கள் நாய்களை விலைக்கு விற்பதில்லை. நாய்களை உற்பத்தி செய்வதும் இல்லை.
பொதுவாக இங்குள்ள நாய்களை பெயர் வைத்து பெயர் சொல்லித்தான் அழைப்போம். இங்கே வந்துவிட்டால் அவை என் குழந்தைகள்தான். எனக்கு ரொம்பவும் பிடித்த பிள்ளை கஜோல். அது சாலையில் சுற்றித் திரிந்து வளர்ந்தது. ஒரு நாள் வாகனத்தில் அடிபட்டு கிடந்த "கஜோலை' எடுத்து வந்து வளர்த்து வருகிறேன். கஜோலுக்கும் என்னிடம் நெருக்கம். நான் எங்கு போனாலும் என்னுடன் கஜோல் பயணிக்கும்.
எனது சொந்த மாநிலம் தமிழகம்தான். ஆனால் பிறந்து ஆறு வயது வரை கேரளத்தில் கல்பேட்டாவில் சொந்த காப்பி எஸ்டேட்டில் வளர்ந்தேன். காதலர்களாக இருந்த என் அப்பா அம்மா கணவன் மனைவியானதை, அவர்கள் குடும்பத்தினர் ஏற்றுக் கொள்ளவில்லை. சொந்த பந்தமும் விலகிப் போனது. அம்மா வழி தாத்தா பாட்டி மாமா அத்தை, சிற்றப்பா சித்தி அன்பு கிடைக்கவில்லை. எப்பவும் கரித்துக் கொட்டுவார்கள். எஸ்டேட்டில் வளர்க்கப்படும் காவல் நாய்கள்தான் என் தோழர்கள். நாய்கள் மீது எனக்கு அன்பு பாசம் சிறு வயது முதலே தொத்திக் கொண்டது. அவற்றை என் உடன் பிறந்தவர்களாக நினைத்து அவைகளுடன் விளையாடுவேன். நான் அழுதால், கண்ணீரை நாக்கால் துடைத்து விடும். சொந்தங்களின் அந்நியம், அதிகமாகவே வெறுத்துப் போன அப்பா கோவைக்குப் புலம் பெயர்ந்து அங்கேயே நிரந்தரமாக தங்கிவிட்டார். அம்மா தொலைபேசி துறையில் வேலையில் இருந்ததால் சாப்பாட்டிற்குப் பிரச்சினை இல்லை. நானும் கனரா வங்கியில் பணி புரிந்தேன். ஒரு தீ விபத்து காரணமாக பணியை ராஜினாமா செய்ய வேண்டி வந்தது. பிறகு தனியார் நிதி நிறுவனத்தில் பணி புரிந்தேன்.
கேரளத்தில் நாய்களை கொல்வதை எதிர்த்து குரல் கொடுத்ததுடன், கொல்வதற்குப் பிடித்து வைத்திருந்த நூறு நாய்களையும் ஸ்நேஹாலயாவில் குடி அமர்த்தினேன். பொதுவாக, நாய்களுக்கு அன்புதான் தேவை அதேபோல நமக்கு நாய் அல்லது வேறு விலங்குகளை வளர்த்தால் மன அழுத்தம் வராது. அவைகளுடன் விளையாடுவதால், நாம் தனியாக உடல் பயிற்சி செய்ய வேண்டியதில்லை. தனிமையை உணர முடியாது... வளர்த்தவரிடம் நாய் காட்டும் அன்பு போல வேறு யாராலும் காட்ட இயலாது.. இங்கே, எனது நான்கு கால் உறுப்பினர்களுக்கு வேலி உண்டு. ஸ்நேஹாலயாவில் நானும் என் பெண் உதவியாளர்களும் முழுநேரமும் வாழ்கிறோம். ஸ்நேஹாலயாவில் கதவுகள் இல்லை. ஜன்னல்கள் இல்லை. திருடர்கள் இங்கே வருவதும் இல்லை. இங்கே கொடுக்க அன்பு மட்டுமே உள்ளது'' என்கிறார் கீதாராணி.
- பிஸ்மி பரிணாமன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.