முகப்பு
மகளிர்மணி

எங்களுக்குள் கருத்துச்சுதந்திரம் உண்டு! சொல்கிறார் : சுப்புலட்சுமி கான்

மக்கள்  தெரிந்து கொள்ளும் வகையில் என்னைப் பற்றி சொல்ல என்ன இருக்கிறது'' நான் ஒரு சாதாரண குடும்பத் தலைவி.

Updated On : 24 ஜனவரி, 2024 at 4:40 PM
பகிர்:

மக்கள்  தெரிந்து கொள்ளும் வகையில் என்னைப் பற்றி சொல்ல என்ன இருக்கிறது'' நான் ஒரு சாதாரண குடும்பத் தலைவி. புகழ்பெற்ற சரோட் வித்துவான் அம்ஜத் அலிகானின் மறுபாதி என்று சொல்லலாம்.  இதைத் தவிர வேறெந்த தகவலும் என்னிடம் இல்லை என்று சொல்லி தன்னைப் பற்றியும் தன் குடும்பத்தைப் பற்றியும் சொல்லத் தொடங்கினார் சுப்புலட்சுமி கான்.

அஸ்ஸôமில் இசையில் நாட்டம் கொண்ட குடும்பமொன்றில் பிறந்த சுப்புலட்சுமி, எட்டாவது வயதிலேயே நடனம் கற்கத் தொடங்கினார்.  இவரது தந்தை பரசு பரூவாவுக்கு இசையில் ஆர்வமிருந்ததை குடும்பத்தினர் விரும்பாததால், அவர் வீட்டைவிட்டு வெளியேறினார். அவரது சகோதரர் பி.சி.பரூவா

சுப்புலட்சுமியின் நடன ஆர்வத்திற்கு ஆதரவாக இருந்தார். தந்தையின் நண்பரான மணிப்பூர் மகாராஜா வழிகாட்டுதலுடன் குரு ராஷ்பரி சர்மாவிடம் மணிப்புரி நடனம் கற்றுக் கொண்டார். அந்த காலத்தில் நடனம் ஒரு தெய்வீகக்  கலையாக கருதப்பட்டதால் மகாராஜாவின் மகளும் இவருடன் சேர்ந்து நடனம் கற்றுக் கொண்டாராம்.

 இவரது குடும்பம் அஸ்ஸôமிலிருந்து இடம் பெயர்ந்ததால் பத்தாம் வகுப்புக்கு மேல் இவரால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. இவரது ஆர்வம் முழுவதும் நடனத்திலேயே இருந்ததால், 1955- ஆம் ஆண்டு நடன நிகழ்ச்சியொன்றில் ருக்மணி தேவி அருண்டேலை

சந்தித்து கூடவே பரத நாட்டியம் கற்க கலாஷேத்ராவில் சேர்ந்தார்.

 1974- ஆம் ஆண்டு கொல்கத்தாவில் இவர் நிகழ்த்திய நடன நிகழ்ச்சிக்கு பார்வையாளராக வந்த இளைஞர் அம்ஜத் அலிகான், பின்னர் நண்பர் ஒருவர் வீட்டில் சுப்புலட்சுமியை மீண்டும் சந்திக்க நேர்ந்தது. தொடர்ந்து இரண்டாண்டுகள் இவர்கள் இருவரும் சந்திக்கும் வாய்ப்புகள் கிடைத்தன.

1976- ஆம் ஆண்டு கவுகாத்தியில்  இருவரும் இணைந்து இசை மற்றும் நடன நிகழ்ச்சியை நடத்திய போதுதான். இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது.

""என்னுடைய நடன நிகழ்ச்சிகளுக்கு அவர் தொடர்ந்து வருவதை அப்போது நான் சீரியஸôகவே எடுத்துக் கொள்ளவில்லை. என்னைப் பார்ப்பதற்காகவே அவர் வந்தார் -  என்னை காதலிக்கிறார் என்பதை அறிந்தபோதுதான் இதயத்தில் இனம் தெரியாத படபடப்பு ஏற்பட்டது. என்னை திருமணம் செய்து கொள்வதற்காக அவரது விருப்பத்தை தெரிவித்தபோது கூட உடனடியாக என்னால் பதிலளிக்க முடியவில்லை. யோசித்து சொல்ல அவகாசம் கொடுங்கள் என்றே கூறினேன்'' என்றார்.

 இதற்கிடையில் அவரைப் பற்றி பலவிதமான வதந்திகள் சுப்புலட்சுமியின் காதுகளுக்கு வந்தன. இதனால் மனதை தளரவிடாமல் அம்ஜத் அலிகானின் கோரிக்கையை ஏற்று அவரைத் திருமணம் செய்து கொள்ள தீர்மானித்தாராம். அவரைத் திருமணம் செய்து கொண்ட நாளிலிருந்து இன்றுவரை தன்னுடைய மனதுக்கு எது சரியென்று தோன்றுகிறதோ அதன்படியே சுப்புலட்சுமி நடந்து வருகிறாராம். அம்ஜத் அலிகானும் தனது கருத்துக்களை இவர் மீது திணிப்பதில்லை.

இது குறித்து சுப்புலட்சுமி கூறுகையில்:

""இதனால் வீட்டு விஷயங்களில் அவரது பேச்சை கேட்பதில்லை என்று கருத வேண்டாம். என்னுடைய கருத்துக்களை வெளியிட அவர் எனக்கு சுதந்திரம் அளித்திருக்கிறார். காலையில் அவர் எழுந்து கொள்வதற்கு முன்பு நான் எழுந்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தியதில்லை. சில சமயங்களில் அவர் "சரோட்' வாசிக்கும் சத்தம் கேட்டு நான் எழுவதுண்டு. எனக்கு முன்பே அவர் காப்பி அருந்தியிருந்தாலும் மீண்டும் ஒருமுறை என்னுடன் சேர்ந்து அருந்துவார். அவருக்கு வரும் போன் கால்களை கவனிக்கும்படி என்னிடம் கூறுவதுண்டு. அவரது இசை நிகழ்ச்சிகள், கூட்டங்கள், பயண ஏற்பாடு அனைத்தையும் நான் கவனிப்பதுண்டு. வீட்டை பொறுத்தவரை அனைத்துமே வைத்த இடத்தில் இருக்க வேண்டும். எப்போதும் சுத்தமாக இருக்க  வேண்டும் என்பது கொள்கையாகும்.

திருமணத்திற்கு பின்னர் நான் நடனமாடுவதை நிறுத்திவிட்டேன். இது நானாக எடுத்த முடிவு. இருவருமே பிரபலங்களாக  இருக்கும்போது  அவரவர் விருப்பத்திற்கேற்ப கலைத்துறையில் ஈடுபட்டால் குடும்பத்தை யார் கவனிப்பது? இதை தியாகம் என்றும் கூற முடியாது. எத்தனையோ பெண்கள் திருமணத்திற்கு பிறகு தங்கள் வேலையை விட்டுவிட்டு கணவரையும் குழந்தைகளையும் பார்த்துக் கொள்வதில்லையா? அது போன்றதுதான் இதுவும்' என்கிறார் சுப்புலட்சுமி.

 இவர்களுக்கு அமன் (36) மற்றும் அயன் (34) என இருமகன்கள். அவர்களிடத்திலும் வாழ்க்கையில் கிடைப்பதை வைத்து திருப்தி அடைய வேண்டும் என்று கூறி வளர்த்துள்ளேன். நாங்கள் இருவருமே வெவ்வேறு மதத்தினர் என்பது அவர்களுக்கும் தெரியும். இந்துவான என்னை அவர் விரும்பி மணந்தபோது இஸ்லாம் மதத்திற்கு மாறும்படி அவர் வற்புறுத்தியதும் இல்லை. நானும் அதைப் பற்றி நினைத்ததும் இல்லை. என்னுடைய மகன்களையும் அவரவர் விருப்பத்திற்கேற்ப விட்டுவிட்டேன். வீட்டில் அவரவர் மத வழக்கப்படி பண்டிகைகளை கொண்டாடுவோம். என் கணவர் நிகழ்ச்சிகளில் மகன்களும் பங்கேற்பதுண்டு. நாங்கள் இருவருமே கலைஞர்கள் என்பதால் சில சமயங்களில் கருத்து வேறுபாடு ஏற்படும். மற்றபடி இதுவரை எங்கள் வாழ்க்கையில் பிரச்னைகள் தோன்றியதில்லை என்கிறார் சுப்புலட்சுமி கான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.